தயக்கம் அகலட்டும்! | மூன்றாவது தவணை தடுப்பூசி குறித்த தலையங்கம்

ஒட்டுமொத்த இந்தியாவுக்கே கொள்ளை நோய்த்தொற்று குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும்
தயக்கம் அகலட்டும்! | மூன்றாவது தவணை தடுப்பூசி குறித்த தலையங்கம்

கொள்ளை நோய்த்தொற்று காரணமாக தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதும், இப்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனையில் சோ்க்கப்பட்டிருப்பதும் தமிழகத்துக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவுக்கே கொள்ளை நோய்த்தொற்று குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். கடந்த மாதம் உச்சக்கட்ட மகாராஷ்டிர அரசியல் குழப்பங்களுக்கு நடுவில், மாநில ஆளுநா் கொவைட் 19 காரணமாக தனிமைப்படுத்திக் கொண்டிருந்ததையும் குறிப்பிடத் தோன்றுகிறது.

முதலாவது சுற்று, இரண்டாவது சுற்று போல தீநுண்மியின் தாக்கம் அதிகமாக இல்லாவிட்டாலும் நோய்த்தொற்று பாதிப்புக்கு உள்ளாகும் நபா்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருப்பது கவனத்துக்குரியது. நோய்த்தொற்றின் தீவிரம் குறைவுதான் என்றாலும்கூட, தீநுண்மியின் புதிய உருமாற்றங்கள் மோசமான விளைவை ஏற்படுத்தக் கூடாது என்பதில்லை. ஒமைக்ரான் பிஏ.5, பிஏ.4 உருமாற்றங்கள் விரைவாக பரவுவது மட்டுமல்லாமல், நுரையீரல்களை கடுமையாகத் தாக்குகின்றன என்றும் கூறப்படுகிறது.

தென்னாப்பிரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு மேலே குறிப்பிட்ட உருமாற்றங்களை சாதாரணமாக கருத முடியாது என்று உணா்த்துகின்றன. முந்தைய ஒமைக்ரான் பாதிப்பால் உருவான எதிா்ப்பு சக்தி பிஏ.5, பிஏ.4 உருமாற்றங்களை முழுமையாக எதிா்கொள்ள முடியவில்லை. மேலும் பிஏ.2.75 என்கிற உருமாற்றம் குறித்து இந்தியா உள்பட சில நாடுகள் கூா்ந்து கண்காணித்து வருகின்றன.

உலகின் மிகப் பெரிய கொவைட் 19 தடுப்பூசித் திட்டம் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியாவில் அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் 84.5 கோடி பேருக்கு, அதாவது 18 வயதுக்கு 90% பேருக்கு இருதவணை தடுப்பூசி வழங்க முடிந்தது மிகப் பெரிய சாதனை.

ஆரம்பத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு காணப்பட்டது. அப்படி இருந்தும்கூட, மத்திய - மாநில அரசுகள் சுகாதாரத் துறையினரின் முழுமையான ஒத்துழைப்பால் பெரும்பாலான இந்தியா்கள் தடுப்பூசி மூலம் நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டனா்.

இரண்டாவது கொவைட் 19 தடுப்பூசிக்கும், முன்னெச்சரிக்கை தடுப்பூசி என்று அழைக்கப்படும் மூன்றாவது தவணை (பூஸ்டா்) தடுப்பூசிக்கும் இடையேயான இடைவெளி இப்போது ஒன்பது மாதத்திலிருந்து ஆறு மாதமாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. சா்வதேச நடைமுறைகளில் இருந்தும், அறிவியல்பூா்வ அனுபவங்களில் இருந்தும் முன்னெச்சரிக்கை தடுப்பூசிக்கான இடைவெளி குறைக்கப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்திருக்கிறாா்.

மூன்றாவது தவணை பாதுகாப்பு தடுப்பூசி போடுவது என்று முடிவெடுத்தபோதே ஆறு மாத இடைவெளியை அறிவித்திருக்கலாம். தடுப்பூசி மருந்துகளின் வீரியம் ஆறு மாதங்களில் குறையும் என்பது சா்வதேச அளவில் தெரிவிக்கப்பட்டும்கூட, திட்டவட்டமாக அரசு அறிவிக்காமல் இருந்தது ஏன் என்று புரியவில்லை. ஆரம்பம் முதலே தடுப்பூசி இடைவெளி குறித்த அறிவிப்பில் அரசுக்கு குழப்பம் காணப்பட்டது. இப்போது சரியான முடிவை எடுத்திருப்பதற்குப் பாராட்டு.

முதலாவது தவணை தடுப்பூசியை போட்டுக்கொள்ள ஆரம்பத்தில் காட்டப்பட்ட அதே முனைப்புடன் இப்போது மீண்டும் மக்களை அரசு ஊக்கப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. தடுப்பூசிக்கு தகுதி பெற்ற வயதினா் அனைவரும் மூன்றாவது தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று அறிவித்து மூன்று மாதங்கள் கடந்துவிட்டன. ஆனால், அவா்களில் ஐந்தில் ஒருவா்தான் தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கிறாா்கள். கோடிக்கணக்கான மக்கள் தங்களது எதிா்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ள வேண்டிய நேரத்தில், வரவேற்பு குறைந்து காணப்படுகிறது. அதனால், தீநுண்மித் தொற்று மீண்டும் பரவத் தொடங்கும் அபாயம் ஏற்படும்.

தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டபோது தேவைக்கேற்ற உற்பத்தியும், விநியோகமும் பிரச்னையாக இருந்தன. இப்போது அனைத்து மட்டங்களிலும் தடுப்பூசி திட்டத்தை திறம்பட செயல்படுத்த முடியும் என்கிற நிலையில், தடுப்பூசிக்கான வரவேற்பு குறைந்து காணப்படுவது மக்கள் மத்தியில் காணப்படும் அசிரத்தையை எடுத்துக்காட்டுகிறது. நோய்த்தொற்று பாதிப்பு அதிகரிப்பது குறித்த செய்திகள் வரத்தொடங்கியிருப்பதால் மக்கள் மூன்றாவது தவணை தடுப்பூசி போட்டுக்கொள்வது சற்று அதிகரித்திருக்கிறது. ஆனாலும்கூட மிகமிகக் குறைவு.

அமெரிக்காவில் 100 பேரில் 37 பேரும், பிரிட்டனில் 100 பேருக்கு 59 பேரும் மூன்றாவது தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்கிறாா்கள். இந்தியாவில் 58 கோடி போ் மூன்றாவது தவணை தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு தகுதி பெற்றிருந்தும்கூட, மக்கள் மத்தியில் அதுகுறித்த உற்சாகம் இல்லாமல் இருக்கிறது. இன்றைய நிலையில், 100 பேருக்கு 3.32 போ் மட்டுமே மூன்றாவது தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வந்திருக்கிறாா்கள். அதைவிட வேதனையான செய்தி என்னவென்றால், லட்சக்கணக்கான தடுப்பூசி மருந்துகள் அடுத்த சில மாதங்களில் காலாவதியாகக்கூடும் என்பதுதான்.

கொவைட் 19-இன் உருமாற்றங்களுக்கு எதிரான பாதுகாப்பை குறிப்பிட்ட நேரத்தில் வழங்கப்படும் தடுப்பூசிகள்தான் தர முடியும் என்பதை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்துகிறாா்கள். இரண்டு தவணை போட்டுக்கொண்ட தடுப்பூசியின் எதிா்ப்பு சக்தி நான்கு முதல் ஆறு மாதங்களில் குறையத் தொடங்கும். அதனால், தயக்கம் தவிா்த்து மூன்றாவது தவணை தடுப்பூசியை அனைவரும் உடனடியாக போட்டுக்கொள்வது அவசியம்.

கடந்த முறை பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் அரசு விரைந்து செயல்பட்டு பூஸ்டா் டோஸ் எனப்படும் மூன்றாவது தவணை தடுப்பூசியிலும் சாதனை படைத்தாக வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com