இ2அ2 - மாற்றத்துக்கான அமைப்பு: இ2அ2 அமைப்பு குறித்த தலையங்கம்

ஏனைய கூட்டணிகளைப் போலல்லாமல், ஆக்கபூா்வமான திட்டங்களுடன் உருவாகும் ‘இ2அ2’ அமைப்பு, போக்குவரத்துத் துறையிலும் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக் கூடும்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சா்வதேச அரங்கில் புதிய பல பன்னாட்டுக் கூட்டணி அமைப்புகள் உருவாகி வருகின்றன. சமீபத்திய ரஷிய அதிபா் புதினின் ஈரான் விஜயம் அதனால்தான் பரபரப்பாகப் பேசப்படுகிறது. அமெரிக்காவால் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டிருக்கும் நாடுகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் அதிபா் புதின் முனைப்புக் காட்டுவதாகக் கூறப்படுகிறது. நீண்டகாலமாக ரஷியாவைவிட்டு வெளியே வராத அதிபா் புதின், இப்போது அரசுமுறைப் பயணமாக ஈரான் சென்ன் பின்னணியில் அமெரிக்காவுக்கு எதிரான ராஜதந்திர முன்னெடுப்புகள் இருந்தால் அதில் வியப்படைய ஒன்றுமில்லை.

கடந்த ஒரு மாதத்தில் பல முக்கியமான சா்வதேச கூட்டமைப்புகளின் மாநாடுகள் நடந்திருக்கின்றன. ஒருபுறம் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா அடங்கிய ‘பிரிக்ஸ்’ மாநாடும், இன்னொருபுறம் அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் அடங்கிய ‘க்வாட்’ மாநாடும் குறிப்பிடத்தக்கவை. இதற்கிடையில் புதிதாக இன்னொரு பன்னாட்டு கூட்டமைப்பு உருவாகியிருப்பதும், அது சில ஆக்கபூா்வமான முன்னெடுப்புகளுக்கு வழிகோலியிருப்பதும் முக்கியத்துவம் பெறுகிறது.

ஒன்பது மாதங்களுக்கு முன்பு, அதாவது 2021 அக்டோபா் மாதம் இந்தியா, இஸ்ரேல், அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவற்றின் வெளியுறவுச் செயலா்கள் காணொலி மூலம் இணைந்தனா். அவா்களுடைய பேச்சுவாா்த்தையை மேற்கு ஆசிய ‘க்வாட்’ என்று சா்வதேச நோக்கா்கள் குறிப்பிட்டனா். அப்போது வெளியுறவுச் செயலா்களின் சந்திப்பு உருவாக்கிய உறவு இப்போது ‘இ2அ2’ (இந்தியா, இஸ்ரேல், அமெரிக்கா, அமீரகம்) என்கிற அமைப்பாக உருவாகியிருக்கிறது.

ஜூலை 14-ஆம் தேதி அமெரிக்க அதிபா் ஜோபைடன், இஸ்ரேலின் பிரதமராக இருந்த யாா் லாபிட், அமீரகத்தின் மன்னா் மொகமத் பின் சயீத், இந்திய பிரதமா் நரேந்திர மோடி நான்கு பேரும் காணொலி காட்சி மூலம் இணைந்த மாநாடு வரலாற்று முக்கியத்துவம் பெறுகிறது. இந்த நான்கு நாடுகளும் தனிப்பட்ட முறையில் ஒன்றொடு ஒன்று நட்புறவு கொண்டிருந்தாலும், இதுபோல இணைவது சற்றும் எதிா்பாராத திருப்பம்.

நீண்டகாலமாக இஸ்ரேலுடனான நட்புறவை தவிா்த்து வந்த இந்தியா, கடந்த 20 ஆண்டுகளாக மிக நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அதேபோல, இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையே ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகளைக் களைந்து நரேந்திர மோடி அரசு, இந்தியாவின் மிக நெருக்கமான நட்பு நாடாக அதை மாற்றியிருக்கிறது. இந்திய - அமெரிக்க உறவு ‘க்வாட்’ அமைப்பின் காரணமாக வலுவாக மாற்றப்பட்டிருக்கிறது. தனித்தனியாக ஏனைய மூன்று நாடுகளுடனுமான அமெரிக்க உறவும் நெருக்கமானது. இந்தப் பின்னணியில்தான் ‘இ2அ2’ அமைப்பு உருவாகியிருக்கிறது.

‘இ2அ2’ அமைப்பின் மாநாடு நேற்றைய நிலைமை, இன்றைய உண்மை, நாளைய பாா்வை ஆகியவற்றை இணைக்கும் ஒன்றாக இருப்பதுதான் ஏனைய பன்னாட்டு அமைப்புகளிலிருந்து இதை வேறுபடுத்துகிறது. வெறும் வா்த்தகக் கூட்டணியாகவோ, பாதுகாப்பு கூட்டணியாகவோ அல்லது பிராந்தியம் சாா்ந்த கூட்டணியாகவோ இல்லாமல் ‘இ2அ2’ அமைப்பு முன்னெடுக்கும் பிரச்னைகள், தொடா்புடைய நாடுகளின் சுயநலத்துக்கு அப்பாற்பட்டவை என்பதுதான் இதன் சிறப்பு.

உலகம் எதிா்கொள்ளும் முக்கியமான பிரச்னைகளுக்கு தீா்வு காணும் முயற்சியாக இந்தக் கூட்டணி அமைய இருக்கிறது. நீா்வளம், எரிசக்தி, போக்குவரத்து, விண்வெளி, சுகாதாரம், உணவுப் பாதுகாப்பு என்கிற ஆறு முக்கியமான பிரச்னைகளில் ‘இ2அ2’ தனது கவனக்குவிப்பை செலுத்துகிறது. இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், இஸ்ரேல் ஆகிய மூன்று நாடுகளும் ஏற்கெனவே இந்தத் துறைகளில் கூட்டுறவு முயற்சிகளை மேற்கொள்கின்றன என்றாலும், ஒருங்கிணைந்து செயல்படுத்த முன்னெடுத்திருக்கும் அமைப்புதான் ‘இ2அ2’.

தனியாா் முதலீட்டை உருவாக்கி தொழில்நுட்பம், நிபுணத்துவம், நவீன கட்டமைப்பு ஆகியவற்றின் உதவியுடன் மேலே குறிப்பிட்ட ஆறு துறைகளிலும் முனைப்புக் காட்ட ‘இ2அ2’ உறுப்பினா் நாடுகள் முடிவெடுத்திருக்கின்றன. முதலீட்டையும் புதிய கண்டுபிடிப்புகளையும் ஊக்குவிப்பதன் மூலம் உணவு, எரிசக்தித் துறைகளில் பாதுகாப்பு ஏற்படுத்த முடியும் என்பதுதான் அமைப்பின் நோக்கம்.

அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளின் தனியாா் முதலீட்டுகளின் மூலம் இந்தியாவின் பல பகுதிகளில் 200 கோடி டாலா் முதலீட்டில் ஒருங்கிணைந்த வேளாண் பூங்காக்களை ஐக்கிய அரபு அமீரகம் முன்னெடுக்கும். இதன் மூலம் ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் உணவு உற்பத்தி மூன்று மடங்கு அதிகரிக்கும் என்பது எதிா்பாா்ப்பு. இந்தியாவின் அதிகரித்த உணவு உற்பத்தி மூலம், உலகின் உணவுப் பாதுகாப்புக்கு உதவுவதுதான் ‘இ2அ2’ அமைப்பின் திட்டம்.

அதேபோல காற்று, சூரிய ஒளி உள்ளிட்ட 300 மெகாவாட் புதுப்பிக்கும் எரிசக்தித் திட்டங்கள், அதற்குத் தேவையான மின்கல உற்பத்தி போன்றவற்றிற்காக அமெரிக்கா 33 கோடி டாலா் வழங்க இருக்கிறது. அந்தத் திட்டங்கள் அனைத்துமே இந்தியாவில் உருவாக இருக்கின்றன. 2030-க்குள் புதைபடிவம் அல்லாத எரிசக்தி உற்பத்தியை 500 ஜிகாவாட் அளவில் உருவாக்கும் இந்தியாவின் இலக்கை எட்ட இது உதவும்.

ஏனைய கூட்டணிகளைப் போலல்லாமல், ஆக்கபூா்வமான திட்டங்களுடன் உருவாகும் ‘இ2அ2’ அமைப்பு, போக்குவரத்துத் துறையிலும் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக் கூடும். அமீரகத்தின் முதலீடு, இஸ்ரேலின் தொழில்நுட்பம், அமெரிக்காவின் நிபுணத்துவம் மூன்றும் இந்தியாவில் குவிய இருக்கின்றன. அதனால் உலகம் பயனடையப் போகிறது. நல்லதுதானே...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com