தக்கவைத்தாலே சாதனை! | இந்தியப் பொருளாதாரம் குறித்த தலையங்கம்

தக்கவைத்தாலே சாதனை! | இந்தியப் பொருளாதாரம் குறித்த தலையங்கம்

கொள்ளை நோய்த்தொற்றுப் பரவலையும், ரஷிய - உக்ரைன் போரையும் தொடர்ந்து உலகிலுள்ள அனைத்து நாடுகளும் கடுமையான பொருளாதார பாதிப்புக்கு உள்ளாகி இருப்பது என்னவோ நிஜம். விலைவாசி உயர்வும், பணவீக்கமும் இந்தியப் பொருளாதாரத்தை கடுமையான அழுத்தத்துக்கு உள்ளாக்கி இருக்கின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை.
நடப்பு நிதியாண்டின் முதலாவது காலாண்டு சில நம்பிக்கைகளைத் தராமல் இல்லை. வளர்ச்சியிலும், பணவீக்கத்திலும் முதல் இரண்டு மாதங்களைவிட ஜூன் மாதம் ஓரளவு நன்றாகவே இருந்திருக்கிறது. அமெரிக்காவின் மத்திய வங்கி உருவாக்கிய நிதிக் கட்டுப்பாடு, சர்வதேச பொருளாதார நிலையின்மையை ஏற்படுத்தி இருக்கும் சூழலிலும், ஜூன் மாத செயல்பாடு நம்பிக்கை தருவதாக இருக்கிறது. அதே நேரத்தில், இதை அடுத்து வரும் மாதங்களின் செயல்பாட்டின் தொடக்கம் என்று கருதிவிடவும் முடியாது.
உலகின் பெரும்பாலான பொருளாதாரங்களில் கடந்த பல பத்தாண்டுகளாகவே பணவீக்கம் அதிகரித்து வந்திருக்கிறது. அது சமீப காலமாக ஓரளவுக்கு நிலையாக இருப்பது நம்பிக்கை தருகிறது. உதிரி பாகங்கள், கச்சாப் பொருள்கள் ஆகியவற்றின் சர்வதேச விநியோக சங்கிலி பிரச்னைகள் சற்று குறைந்திருக்கின்றன. ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் சில இடைக்கால ஒப்பந்தங்கள் சர்வதேச சந்தையில் உணவுப் பொருள்களின் விலையை குறைக்கக் கூடும். இவையெல்லாம் இந்திய பொருளாதாரத்துக்கு சாதகமாக மாறும் என்று எதிர்பார்க்கலாம்.
ஜூன் முதல் வாரத்திலிருந்து கச்சா எண்ணெய் மற்றும் உலோகங்களின் சர்வதேச சந்தை விலை குறையத் தொடங்கியிருக்கிறது. எரிசக்தி பொருள்கள், சமையல் எண்ணெய் ஆகியவற்றின் மீதான வரிகள் முறைப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், அவற்றின் விலை உயர்வு ஓரளவுக்கு கட்டுப்படும் என்று எதிர்பார்க்கலாம்.
அந்நிய நிகழ்வுகளின் தாக்கங்களை இந்திய பொருளாதாரம் வெற்றிகரமாக எதிர்கொள்கிறது என்பதை சமீபத்திய மேலேழுந்தவாரியான குறியீடுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் தனியார் துறை அறிவித்திருக்கும் பல புதிய முதலீட்டுத் திட்டங்கள் அதற்கான அடையாளம். ஜூன் மாதம் மட்டும் இந்திய தனியார் துறையின் செயல்பாடு 17.7% அதிகரித்திருப்பதும், கடந்த நிதியாண்டில் 46.7% அதிகரித்து ரூ.3.1 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்திருப்பதும் வளர்ச்சியின் அறிகுறிகள் என்று நிதியமைச்சகம் சுட்டிக்காட்டுகிறது.
நடப்பு நிதியாண்டின் (2022 - 23) முதல் காலாண்டில், இந்திய தனியார் துறையின் முதலீட்டுத் திட்டங்கள் மட்டுமே 85% அளவில் காணப்படுகிறது. கடந்த நான்கு நிதி காலாண்டுகளின் சராசரி 63% எனும்போது, 85% அளவிலான தனியார் துறை முதலீடுகள் நம்பிக்கை அளிப்பதாக இருக்கின்றன.
மோட்டார் வாகன விற்பனை, கொள்ளை நோய்த்தொற்று காலத்துக்கு முந்தைய நிலையை எட்டியிருக்கிறது. ஊரகப்புறங்களில் டிராக்டர், இருசக்கர வாகனங்களின் விற்பனை அதிகரித்திருப்பது கிராமப்புற பொருளாதாரம் புத்துயிர் பெற்றிருப்பதை வெளிப்படுத்துகிறது. தென்மேற்கு பருவமழைக் காலம் ஓரளவு சாதகமாக இருப்பதால் ஊரகப்புற பொருளாதாரம் மேலும் வளர்ச்சி அடையக்கூடும் என்று எதிர்பார்க்கலாம்.
அரசின் முதலீட்டுச் செலவுகள் வளர்ச்சிக்கு ஊக்கமளிப்பதாக இருக்கக்கூடும். 2022 ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் பல்வேறு கட்டமைப்புத் திட்டங்களுக்கான அரசின் முதலீடுகள் 70% அதிகரித்திருக்கிறது. மாநிலங்களுக்கு வட்டியில்லா கடனாக ரூ. 1 லட்சம் கோடி மத்திய அரசால் அறிவிக்கப்பட்டிருப்பதும், மூலதனத் திட்டங்களுக்கான செலவாக இருக்கும்.
மத்திய நிதியமைச்சகத்தால் நிதிப்பற்றாக்குறை ஓரளவுக்கு கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருக்கிறது. நடப்பு நிதியாண்டின் முதலாவது காலாண்டில் ஜி.எஸ்.டி. வருவாய் கடந்த ஆண்டைவிட 36% அதிகம் என்பது நிதியமைச்சகத்துக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடும். இந்த அதிகரித்த ஜி.எஸ்.டி. வருவாய், பணவீக்கத்தாலும் விலைவாசி உயர்வாலும் ஏற்பட்டது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
இவையெல்லாம் ஒருபுறம் இருந்தாலும்கூட, கவலையளிப்பதாக இருப்பது நடப்புக் கணக்கு பற்றாக்குறை. அதைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் வெற்றியடையுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். கடந்த நிதியாண்டின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை ஜி.டி.பி.யில் 1.2%. ரூபாய் மதிப்பு குறைவு, சர்வதேச பொருள்களின் அதிகரித்த விலைகள், அதிகரித்த இறக்குமதி செலவு உள்ளிட்ட காரணங்களால், நடப்புக் கணக்கு பற்றாக்குறையைக் குறைப்பது எளிதாக இருக்காது என்பதை நிதியமைச்சகமே ஏற்றுக்கொள்கிறது.
சர்வதேச பொருளாதார மந்த நிலைக்கு நடுவில், கச்சா எண்ணெய், உணவுப் பொருள்கள், சமையல் எண்ணெய், இரும்பு உள்ளிட்டவற்றின் விலைகள் சற்று குறைந்தால் மட்டுமே, இந்தியாவிலும் பணவீக்கத்தால் ஏற்படும் அழுத்தங்கள் குறையும். அதற்கான வாய்ப்புகள் காணப்படாத நிலையில், மத்திய அரசு சாதுரியமாக செயல்பட்டு விலைவாசி மேலும் உயராமலும், அதே நேரத்தில் பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாமலும் பார்த்துக் கொள்வதுதான் இன்றைய சூழலில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை.
உடனடியாக பொருள்களின் விலையைக் குறைப்பதோ, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பை மீட்டெடுப்பதோ சாத்தியமல்ல. நிதிப்பற்றாக்குறையும், நடப்புக் கணக்கு பற்றாக்குறையும் கட்டுப்பாட்டில் இருப்பதை உறுதி செய்வதேகூட மிகப் பெரிய வெற்றி.







 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com