வான்கடேக்களும் ஆர்யன் கான்களும்!|போதைப்பொருள் தடுப்புப் பிரிவு குறித்த தலையங்கம்

வான்கடேக்களும் ஆர்யன் கான்களும்!|போதைப்பொருள் தடுப்புப் பிரிவு குறித்த தலையங்கம்

 பிரபல ஹிந்தி திரைப்பட நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் மீதான போதைப்பொருள் வழக்கில், அவர் மீது போதிய ஆதாரமில்லை என்று போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தெரிவித்திருப்பது, அதிர்ச்சி அளிக்கும் திருப்பம். எந்தவித ஆதாரமும் இல்லாமல் ஒருவர் கைது செய்யப்படுவதும், விசாரணைக்கு உட்படுத்தப்படுவதும், ஊடகங்களில் கேவலப்படுத்தப்படுவதும், அதற்குப் பிறகு தகுந்த ஆதாரமில்லை என்று தெரிவிக்கப்படுவதும் சட்டத்தின் அடிப்படையிலான ஆட்சி அமைப்பையே கேலிக்கு உள்ளாக்குகின்றன.
 கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், மும்பை கடற்கரைப் பகுதியில் நங்கூரமிட்டிருந்த சொகுசுக் கப்பல் ஒன்றில், போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் சோதனை மேற்கொண்டனர். அந்தக் கப்பலில் இருந்து போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டன. கோவாவுக்குப் பயணம் மேற்கொள்ள இருந்த அந்த சொகுசுக் கப்பலில் கைது செய்யப்பட்ட 20 பேரில் பிரபல ஹிந்தி திரைப்பட நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கானும் ஒருவர்.
 சொகுசுக் கப்பலில் சோதனை நடத்தியது, காணொலியில் பதிவு செய்யப்படவில்லை; ஆர்யன் கானுக்காக அவரது நண்பர் அர்பாஸ் மெர்ச்சென்ட் போதைப் பொருள் வைத்திருந்தார் என்கிற குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை; ஆர்யன் கான் போதைப்பொருள் பயன்படுத்தினார் என்பதற்காக அவருக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டதா என்றால் அதுவும் இல்லை; அவருக்கு போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருந்ததற்கு எந்தவித ஆதாரமும் இல்லை - இவையெல்லாம் தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவால் இப்போது ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் உண்மைகள்.
 தேசிய சிறப்பு புலனாய்வுக் குழு நடத்திய விசாரணையின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட 20 பேரில் 14 பேர் மீது மட்டும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. ஆர்யன் கான் உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக போதிய ஆதாரம் இல்லை என்று கூறி வழக்கு விசாரணையிலிருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். உண்மையை ஏற்றுக்கொண்டதற்காக, தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவைப் பாராட்ட வேண்டும்.
 அதே நேரத்தில், முறையாக விசாரிக்காமலும், பொறுப்பில்லாமலும் குற்றம் சாட்டி, விளம்பரத்துக்காகவும், பரபரப்புக்காகவும் பிரபலங்களை துன்புறுத்தும் அதிகாரிகள் கடுமையான கண்டனத்துக்கு உரியவர்கள். இதற்கு முன்பு, நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலையைத் தொடர்ந்து, அவரது காதலி ரியா சக்ரவர்த்தி இதே மும்பை போதைப்பொருள் தடுப்புப் பிரிவால் ஆதாரமில்லாமல் துன்புறுத்தப்பட்டதும், அலைக்கழித்து கேவலப்படுத்தப்பட்டதும் நினைவுக்கு வருகிறது.
 போதைப்பொருள் தடுப்பு துறை மும்பை பிரிவின் இயக்குநராக இருந்த சமீர் வான்கடே, நடிக, நடிகையரிடம் தனது அதிகார பலத்தைக் காட்டி அச்சுறுத்தி பணம் பறிக்க முயல்கிறார் என்கிற குற்றச்சாட்டு அப்போதே எழுந்தது. இப்போதும் அதே சமீர் வான்கடே தலைமையிலான குழுதான் ஆர்யன் கானை அடிப்படை ஆதாரமில்லாமல் கைது செய்து, நடிகர் ஷாருக் கான் குடும்பத்தை சந்தி சிரிக்கச் செய்தது.
 இயக்குநர் சமீர் வான்கடே மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்திய வருவாய் பணி அதிகாரியான வான்கடே, இப்போது போதைப்பொருள் தடுப்புப் பிரிவிலிருந்து மாற்றப்பட்டு, அவரது தாய்த்துறையான வருமான வரித்துறையின் சென்னை கிளைக்கு மாற்றப்பட்டிருக்கிறார். போலி ஜாதிச் சான்றிதழின் அடிப்படையில் பட்டியலினத்தவர்களுக்கான ஒதுக்கீட்டில் குடிமைப் பணியில் சேர்ந்தவர் சமீர் வான்கடே என்கிற குற்றச்சாட்டு குறித்து ஏன் விசாரணை நடத்தப்படவில்லை என்பதும் தெரியவில்லை.
 ஆப்கானிஸ்தான், தலிபான்களின் கட்டுப்பாட்டில் சென்றது முதல், இந்தியாவுக்குள்ளேயும், இந்தியா வழியாகவும் போதைப்பொருள்கள் கடத்தப்படுவது அதிகரித்திருக்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னை ராஜாஜி சாலையில் ரூ. 2 கோடி மதிப்புள்ள போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன.
 ஞாயிற்றுக்கிழமை, குஜராத் மாநிலம் ஜகாவ் கடலோரப் பகுதியில் 49 கிலோ போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன.
 ஒரு வாரத்துக்கு முன்பு, லட்சத் தீவு கடற்கரைப் பகுதியில் ரூ.1,526 கோடி மதிப்புள்ள 205 கிலோ ஹெராயினும், கேரளத்திலுள்ள நெடும்பாசேரி விமான நிலையத்தில், தான்சானியா நாட்டு பிரஜை ஒருவரிடமிருந்து ரூ.20 கோடி மதிப்புள்ள சுமார் மூன்று கிலோ ஹெராயினும் கைப்பற்றப்பட்டன. பாகிஸ்தான் வழியாக பஞ்சாபுக்கும், மியான்மரிலிருந்து வடகிழக்கு மாநிலங்களுக்கும், கடற்கரை வழியாக ஏனைய பகுதிகளுக்கும் போதைப் பொருள்கள் பெரிய அளவில் நுழைந்து கொண்டிருக்கின்றன. பள்ளி சிறுவர்கள் வரை போதைக்கு அடிமையாகிக் கொண்டிருக்கிறார்கள்.
 போதைப்பொருள்களைக் கடத்தும் சர்வதேச கும்பல்களை அடையாளம் கண்டு தடுப்பதற்கு பதிலாக, அப்பாவிகளைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறது தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு. அச்சுறுத்தும் அதிகாரத்தைக் கையில் வைத்துக் கொண்டு, அப்பாவிகளை பயமுறுத்திப் பணம் பறிக்க முற்படுகிறது அதிகாரிகளில் ஒரு பிரிவு. இதற்குப் பின்னால் அரசியல் கட்சிகளும் (தலைவர்களும்) இருக்கக்கூடும்.
 ஆர்யன் கான் விடுவிக்கப்பட்டிருக்கிறார், சந்தோஷம். கொள்ளை நோயைப்போலப் பரவிக் கொண்டிருக்கும் போதை நோயிலிருந்து இந்தியாவை யார், எப்போது, எப்படி விடுவிக்கப் போகிறார் என்கிற கேள்விக்குத்தான் விடை தெரியவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com