பெண்களுக்கு இடஒதுக்கீடு! | அரசுப் பணியிடங்களில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது பற்றிய தலையங்கம்

கோப்புப் படம்.
கோப்புப் படம்.

 மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 40.78 லட்சம் பேர் பணியாற்ற வேண்டிய இடத்தில் 31.91 லட்சம் பேர்தான் பணியாற்றுகின்றனர் என்று மத்திய அரசின் செலவினத்துறை புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. அதாவது 21.75% பணியிடங்கள் காலியாக உள்ளன. அரசின் அனைத்துத் துறைகளிலும், அமைச்சகங்களிலும் உள்ள மனிதவள நிலை குறித்து ஆய்வு செய்த பிரதமர் நரேந்திர மோடி, அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் காலிப் பணியிடங்களை நிரப்பவும், 10 லட்சம் பேருக்கு வேலை வழங்கவும் உத்தரவிட்டிருக்கிறார்.
 இந்தியாவில் ஆண்டுதோறும் உயர்கல்வியை முடித்து வெளியே வரும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உரிய வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை என்பது மறுக்கவியலாத உண்மை. அதே நேரத்தில், சுயதொழிலில் ஈடுபடும் இளைஞர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கிறது. தனியார் துறைகளில், குறிப்பாக சேவைத் துறைகளில் படித்த, படிக்காத இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு பெரிய அளவில் அதிகரித்திருக்கிறது.
 மத்திய புள்ளியியல் - திட்ட அமலாக்கத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ) கடந்த சில ஆண்டுகளாக வேலையின்மை குறித்த புள்ளிவிவரங்களை வெளிப்படையாக வெளியிடவில்லை. இதனால், தனியார் அமைப்புகள் வெளியிடும் புள்ளிவிவரங்களைத்தான் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. அந்த வகையில், மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அரசு சாரா தனியார் அமைப்பான "இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம்' (சிஎம்ஐஇ) வெளியிடும் வேலையின்மை குறித்த புள்ளிவிவரம் ஓரளவு நம்பத்தகுந்ததாக உள்ளது.
 இந்த மையம் இந்த ஆண்டு ஜனவரியில் வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியாவில் வேலையின்மை விகிதம் 6.57%-ஆக இருந்தது. கடந்த 2021, டிசம்பரில் வெளியான வேலையின்மை விகிதத்தோடு (7.91%) ஒப்பிடுகையில் இது குறைவுதான் என்பது ஆறுதல் அளிக்கிறது. இந்த ஆண்டு ஜனவரி நிலவரப்படி வேலையின்மை விகிதம் மிக அதிகம் உள்ள மாநிலங்களாக ஹரியாணா (23.4%), ராஜஸ்தான் (18.9%), திரிபுரா (17.1%), ஜம்மு-காஷ்மீர் (15%), தில்லி (14.1%) ஆகியவை காணப்படுகின்றன.
 பிரதமரின் அறிவிப்பில், எந்தெந்தத் துறைகளில் எவ்வளவு காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்ற விவரம் எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனினும், ரயில்வே, முப்படைகள், துணைநிலை ராணுவம், சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) துறை, சுங்கம் மற்றும் கலால் துறை, அரசுடைமை வங்கிகள், அரசு சார்பு காப்பீட்டு நிறுவனங்கள் ஆகியவற்றில் காலியாக உள்ள பணியிடங்கள் முதல் கட்டமாக நிரப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 வேலைவாய்ப்பு அதிகரிப்பு என்பதுதான் பொருளாதார வளர்ச்சியின் அளவுகோலாகப் பார்க்கப்படுகிறது. பல்வேறு அரசுத்துறைகளில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன என்பது நமது தலையங்கத்திலேயே பலமுறை சுட்டிக்காட்டப்பட்ட உண்மை. ஒருபுறம் வேலைவாய்ப்பின்மை காணப்படுவதும், மறுபுறம் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதும் நிர்வாக மெத்தனத்தின் வெளிப்பாடு என்றுதான் கூற வேண்டும்.
 ஆண்டுதோறும் நாடாளுமன்றத்தில் காலிப்பணியிடங்கள் குறித்த புள்ளிவிவரம் தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய அரசுத்துறைகளில் 8.72 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதாக, ஜூலை 2021-இல் நாடாளுமன்றத்தில் அரசு வெளியிட்ட புள்ளிவிவரம் தெரிவித்தது. அவற்றில் 2.79 லட்சத்துக்கும் அதிகமான காலிப்பணியிடங்கள் ரயில்வே துறையில் மட்டும் இருப்பதாக கூறப்பட்டிருந்தது.
 ஒருபுறம், கடைநிலை ஊழியர் பதவிக்கு பட்டதாரிகளும், முதுநிலை பட்டதாரிகளும் வேலைவாய்ப்பு தேடி விண்ணப்பிக்கிறார்கள் என்றால், இன்னொருபுறம் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. மருத்துவம், ராணுவம் ஆகிய துறைகளும் நிரப்பப்படாத பணியிடங்களுடன்தான் செயல்படுகின்றன. மத்திய - மாநில அரசுகளுக்கிடையே இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் தொடர்பான பிரச்னை ஏற்படுவதற்கு பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதுதான் முக்கியமான காரணம்.
 தற்போதைய நிலையில், இந்தியாவில் 15 முதல் 64 வயது வரையிலான வேலை பார்ப்போரின் எண்ணிக்கை சுமார் 92.5 கோடி. அவர்களில் முழுநேரமாக வேலை பார்ப்பவர்கள் என்று எடுத்துக்கொண்டால் 51.8 கோடி என்று பொருளாதார ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. பெண்கள் அதிகமாக வேலைவாய்ப்பில் இல்லாமல் இருப்பதுதான் இதற்குக் காரணம்.
 எந்த ஒரு பெரிய பொருளாதாரமும் உழைக்கும் பிரிவினரில் பெண்களின் பங்கு இல்லாமல் வளர்ந்ததில்லை. உலக வங்கியின் கணக்குப்படி இந்தியாவின் உழைக்கும் மக்கள்தொகையில் பெண்களின் பங்களிப்பு 19% மட்டுமே. ஜி7 நாடுகளில் பெண்கள் உழைப்பு பங்களிப்பு விகிதம் 42% முதல் 61% வரை. இந்தியாவில் வெறும் 19%. சீனா (62%), ரஷியா (54%), பிரேசில் (49%), சவூதி அரேபியா (31%), துருக்கி (32%), வங்கதேசம் (35%), மியான்மர் (41%), மலேசியா (51%).
 பிரதமர் கூறியிருப்பதுபோல் காலிப்பணியிடங்களை நிரப்புவதில் காட்டப்படும் அதே முனைப்பு, வேலைவாய்ப்பில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்குவதிலும் காட்டப்பட வேண்டும். தனியார் சேவைத்துறையில் வேலை தேடும் படித்த, படிக்காத இளைஞர்களுக்கு வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கும் நிலையில், அரசுப் பணியிடங்களில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கினாலும்கூட தவறில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com