ஒரே நாடு ஒரே தே‌ர்​த‌ல்? | தேர்தல் முடிவு குறித்த தலையங்கம்

ஒரே நாடு - ஒரே தேர்தல் அடிப்படையில் 2024-இல் சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெறப் போகிறது
ஒரே நாடு ஒரே தே‌ர்​த‌ல்? | தேர்தல் முடிவு குறித்த தலையங்கம்

தமிழ்நாட்டில் அண்மையில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தின்போது, ஒரே நாடு - ஒரே தேர்தல் அடிப்
படையில் 2024-இல் சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெறப் போகிறது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும், பல இடங்களில் பேசியது ஊடகங்களில் விவாதப் பொருளாகி இருக்கிறது. 
பிரதமர் நரேந்திர மோடி கடந்த பல ஆண்டுகளாகவே "ஒரே நாடு  ஒரே தேர்தல்' என்பதை வலியுறுத்தி வருகிறார். நமது நாட்டில் இது சாத்தியமாவது அவ்வளவு எளிதல்ல.

 அஸ்ஸாம், கேரளம், தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுடன் புதுச்சேரி ஒன்றிய பிரதேசத்துக்கும் 2021-இல் தேர்தல் நடைபெற்றது. பஞ்சாப், கோவா, உத்தரகண்ட் மாநிலங்களில் கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடந்துள்ளது. மணிப்பூரில் மார்ச் 3 வரை 2 கட்டங்களாகவும், உத்தர  பிரதேசத்தில் மார்ச் 7 வரை 7 கட்டங்களாகவும் தேர்தல் நடைபெறுகிறது. ஹிமாசல பிரதேசத்திலும், குஜராத்திலும் இந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.

மத்திய பிரதேசம், கர்நாடகம், ராஜஸ்தான், தெலங்கானா, 
திரிபுரா, மேகாலயம், சத்தீஸ்கர், மிúஸாரம், நாகாலாந்து ஆகிய 
9 மாநிலங்களில் 2023-இல் சட்டப்பேரவைத் தேர்தலும், 2024-இல் மக்களவைத் தேர்தலும் நடைபெற உள்ளன.

மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக, பல மாநிலங்களில் ஆட்சியில் உள்ளதால், அங்கெல்லாம் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளவும், 2024 தேர்தலை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளவும் பிரதமர் நரேந்திர மோடி முதல், மத்திய அமைச்சர்கள் வரை பலரும் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறார்கள்.

ஒவ்வோர் ஆண்டும் பல மாநிலங்களில் தேர்தல் நடைபெறுவதால், அமைச்சர்களின் அரசு ரீதியான அலுவல்கள் பாதிக்கப்படுகின்றன. ஒரே நேரத்தில் மக்களவைக்கும், சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடைபெற்றால் இவர்கள் நிர்வாக ரீதியான அலுவல் களில் கவனம் செலுத்த முடியும் என்று ஒரே நேரத்தில் தேர்தலை வலியுறுத்துபவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மேலும் ஒவ்வொரு தேர்தலின்போதும், வாக்குப்பதிவுக்காக பல்லாயிரம் கோடி ரூபாய் அரசின் நிதி செலவழிக்கப்படுகிறது. தேர்தல் பிரசாரத்துக்காக கட்சிகள் செலவழிக்கும் தொகைக்கு  கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தாலும், அவற்றை எந்தக் கட்சியும் கண்டுகொள்ளாததால் ஒவ்வொரு தேர்தலின்போதும் கட்சிகள் ஏராளமான பணத்தை செலவிடுகின்றன.

ஒவ்வொரு தேர்தலின்போதும், பல்லாயிரக்கணக்கான உள்ளூர் போலீஸாரும், துணை ராணுவப் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். ஆயிரக்கணக்கில் ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் தேர்தல் பணிகளில் அமர்த்தப்படுகிறார்கள். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்படுவதால் அரசுப் பணிகள் பெருமளவில் பாதிக்கப்படுவதை மறுப்பதற்கில்லை. 

ஒரே நேரத்தில் தேர்தல் நடந்தால் போலீஸார், துணை ராணுவப் படையினர், ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் மனித ஆற்றலும், கோடிக்கணக்கான மக்கள் வரிப்பணமும் விரயமாவது தடுக்கப்
படும் என்பதும் ஏற்கக்கூடிய வாதமே. 

நம் நாட்டில் 1967 வரை ஒரே நேரத்தில்தான் பேரவைக்கும், மக்களவைக்கும் தேர்தல் நடைபெற்றது. ஆனால், அதன் பின்னர் அவ்வப்போது மாநில அரசுகள் கலைக்கப்பட்டதால் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தும் சூழல் ஏற்பட்டது.
தமிழ்நாட்டிலேகூட, 1977-இல் பதவியேற்ற எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக அரசு, விவசாயிகள் போராட்டத்தைக் காரணம் காட்டி 1980-இல் கலைக்கப்பட்டது. 1989-இல் தேர்தலில் திமுக வென்று கருணாநிதி முதலமைச்சர் ஆனார். சட்டம் - ஒழுங்கைக் காரணம் காட்டி 1991-இல் அவரது அரசு கலைக்கப்பட்டு தேர்தல் நடைபெற்றது. இதுபோன்ற சூழல்கள் ஏற்பட்டால் எவ்வளவு ஆண்டுகள் தேர்தல் நடத்தாமல் இருக்க முடியும்? 
ஒரு தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல், கூட்டணி ஆட்சிக்கும் வாய்ப்பில்லாத நிலை ஏற்பட்டால் என்ன செய்வது? இதுபோன்ற சூழ்நிலை பிகாரில் ஏற்பட்டது. அங்கு 2005 பிப்ரவரியில் நடைபெற்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. கூட்டணியும் அமையவில்லை. எனவே, அதே ஆண்டு அக்டோபர் - நவம்பரில் மீண்டும் தேர்தல் நடைபெற்றது.

பதவிக் காலம் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் இருக்கையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தில், மத்திய அரசோ, மாநில அரசோ தோல்வியடைந்தால் என்ன செய்வது?

ஜெர்மனியில், பதவியில் இருப்பவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு அவர் தோல்வி அடைந்தாலும், மற்றொருவருக்குப் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால் முதலாமவரே ஆட்சியில் தொடர முடியும். ஆனால், எந்த மசோதாவையும் நிறைவேற்ற முடியாத சூழல் ஏற்படும். இது ஆட்சியாளருக்கு மிகவும் சிக்கலைத்தான் ஏற்படுத்தும்.
2024-இல் ஒரே நேரத்தில் தேர்தல் என்றால், சில மாநில அரசு
களின் பதவிக் காலத்தை நீட்டிக்க வேண்டும்; வேறு சில மாநில அரசுகளின் பதவிக் காலம் குறைந்துவிடும். மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக எந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தாலும் தீவிரமாக எதிர்ப்பது என காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், திமுக, சிவசேனை உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் முனைப்புடன் உள்ளன.

நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் மகளிருக்கு இட ஒதுக்கீடு என்ற விஷயத்தில் கருத்தொற்றுமை ஏற்படவில்லை என்ற காரணத்தால் அது கிடப்பில் போடப்பட்டது. அதேபோல, பல எதிர்க்கட்சிகளும் கடுமையாக எதிர்க்கும் என்பதால்  "ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டமும் நடைமுறை சாத்தியமாவது என்பது கானல் நீர்தான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com