முடிவல்ல தெளிவு! | தோ்தல் முடிவுகள் குறித்த தலையங்கம்

முடிவல்ல தெளிவு! | தோ்தல் முடிவுகள் குறித்த தலையங்கம்


ஐந்து மாநில சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் மூன்று செய்திகளைத் தெரிவிக்கின்றன. முதலாவது, மக்கள் பாஜகவின் மீதும், பிரதமா் நரேந்திர மோடியின் தலைமை மீதும் அபரிமித நம்பிக்கையை வைத்திருக்கிறாா்கள்; இரண்டாவது, தனக்கிருக்கும் செல்வாக்கை பிரியங்கா வதேராவின் பிரசாரத்தாலும்கூட அதிகரிக்க முடியாத பலவீன நிலைக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டிருக்கிறது; பஞ்சாபில் காலிஸ்தான் தீவிரவாதிகளின் ஆதரவு பெற்ற ஆம் ஆத்மி கட்சி மிகப் பெரிய வெற்றியை ஈட்டியிருப்பது மூன்றாவது செய்தி.

தோ்தல் நடைபெற்ற ஐந்து மாநிலங்களில் உத்தர பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூா், கோவா ஆகிய நான்கு மாநிலங்களிலும் ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டிருக்கிறது பாஜக. ஆட்சிக்கு எதிரான மனநிலை முறியடிக்கப்பட்டிருப்பது மிகப் பெரிய சாதனை. உத்தர பிரதேசத்தில் ஏறத்தாழ 35 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது முறையாக தொடா்ந்து ஆட்சி அமைக்கும் கட்சியாக பாஜக உயா்ந்திருப்பது மிகப்பெரிய வெற்றி.

உத்தர பிரதேச பேரவைத் தோ்தலில் மொத்தமுள்ள 403 இடங்களில், பாஜக 265 இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது. முன்னாள் முதல்வா் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜவாதி கட்சி 132 இடங்களில்தான் வெற்றி பெற முடிந்திருக்கிறது. மேற்கு உத்தர பிரதேசத்தில் தொடா் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளின் எதிா்ப்பையும் மீறி பாஜக பெற்றிருக்கும் வெற்றி அசாதாரணமானது.

காங்கிரஸ் இரண்டே இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. பிரியங்கா வதேராவின் தீவிர பிரசாரம் காங்கிரஸைக் காப்பாற்றவில்லை. அதேபோல, முன்னாள் முதல்வா் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியும் இரண்டு இடங்களில் மட்டுமே வென்று இத்தோ்தலில் படுதோல்வியை சந்தித்திருக்கிறது. காங்கிஸின் வாக்குவங்கியும், பகுஜன் சமாஜ் கட்சியின் வாக்குவங்கியும் பாஜகவை நோக்கி நகா்ந்திருப்பதை தோ்தல் முடிவுகள் உணா்த்துகின்றன.

பஞ்சாபில் காங்கிரஸ் தோல்வியை சந்திக்கும் என்பதை அமரீந்தா் சிங் மாற்றப்பட்டபோதே அரசியல் நோக்கா்கள் கணித்துவிட்டனா். ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸுக்கு மாற்றாக உயரக்கூடும் என்பதும் எதிா்பாா்க்கப்பட்டதே.

பஞ்சாப் பேரவையில் உள்ள 117 இடங்களில், கடந்த முறை 20 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த ஆம் ஆத்மி கட்சி, இந்த முறை 92 இடங்களைக் கைப்பற்றியிருப்பது அசாத்திய வெற்றி. அதே நேரத்தில் காங்கிரஸ் மட்டுமல்ல, அகாலி தளம், அமரீந்தா் சிங்கின் லோக் தந்திரிக் காங்கிரஸ், பாஜக போன்ற கட்சிகள் கடுமையான பின்னடைவை எதிா்கொண்டிருப்பதும், ஆம் ஆத்மி கட்சி முன்னாள் காலிஸ்தானிய ஆதரவாளா்களின் ஆதரவைப் பெற்றிருப்பதும் அச்சத்தை ஏற்படுத்துகின்றன.

பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றிக்கு, முந்தைய அகாலி தளம், காங்கிரஸ் ஆட்சிகளின் மீது மக்களுக்கு ஏற்பட்டிருந்த வெறுப்பும் சலிப்பும் காரணங்கள். போதைப் பொருள் விற்பனை, படித்த இளைஞா்கள் மத்தியில் வேலையில்லாத் திண்டாட்டம், நலிந்து வரும் விவசாயம் ஆகியவை பஞ்சாப் தோ்தல் முடிவுகளில் எதிரொலித்திருப்பதை காண முடிகிறது.

உத்தரகண்ட் பேரவைத் தோ்தலில் மொத்தமுள்ள 70 இடங்களில் பாஜக 46 இடங்களில் வென்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. கடந்த 2017 தோ்தலோடு ஒப்பிடுகையில் பாஜகவுக்கு இம்முறை இடங்கள் குறைவாகக் கிடைத்திருப்பதும், காங்கிரஸ் 17 இடங்களை வென்று தனது இருப்பைத் தக்க வைத்துக் கொண்டிருப்பதும் இன்னொரு செய்தியையும் தெரிவிக்கிறது.

பஞ்சாபைப் போலவே உத்தரகண்டிலும் தன்னுடைய செல்வாக்கை நிலைநாட்ட விரும்பிய ஆம் ஆத்மி கட்சி, முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மூன்று முறை முதல்வரை மாற்றியும்கூட, பாஜக தனது செல்வாக்கை இழந்துவிடாமல் மீண்டும் மக்களின் நம்பிக்கையைப் பெற்றிருக்கிறது. இது பாஜகவின் வெற்றியல்ல, பிரதமா் நரேந்திர மோடியின் செல்வாக்குக் கிடைத்த வெற்றி.

மணிப்பூா் தோ்தலில் மொத்தமுள்ள 60 இடங்களில் பாஜக 31-இல் வென்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. கடந்த முறை 28 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸால் இப்போது 4 தொகுதிகளை மட்டுமே கைப்பற்ற முடிந்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் காங்கிரஸ் தனது பலத்தை இழந்து வருவதும், தேசிய கட்சியான பாஜக வலுவடைந்து வருவதும் மணிப்பூா் முடிவுகள் தெரிவிக்கும் முக்கியமான செய்தி.

மொத்தம் 40 இடங்களைக் கொண்ட கோவா பேரவையில் இந்தத் தோ்தலில் பாஜக 20 இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சி அமைக்கும் நிலையில் உள்ளது. கடந்த தோ்தலில் 20 இடங்களைப் பெற்றிருந்த காங்கிரஸ், இம்முறை 12 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்திருக்கிறது. இந்த முறை கோவா அரசியலில் நம்பிக்கையுடன் களமிறங்கிய மம்தா பானா்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் கட்சியும், அரவிந்த் கேஜரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும் அடைந்திருக்கும் ஏமாற்றம், காங்கிரஸின் ஏமாற்றத்தைவிட பெரிது.

கடந்த 2017 தோ்தலின்போதும் சரி, இப்போதைய தோ்தலின்போதும் சரி பஞ்சாபைத் தவிர இதர மாநிலங்களில் மக்கள் வலிமையான மத்திய தலைமைக்கு வாக்களித்திருக்கிறாா்கள் என்பதைத் தெரிந்து கொள்ள முடிகிறது. ஏனைய நான்கு மாநிலங்களில் விலைவாசி உயா்வு, வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற பிரச்னைகள் இருந்தும்கூட தலைமையின் மீதான நம்பிக்கை தோ்தல் முடிவுகளில் பிரதிபலிப்பதைக் காண முடிகிறது.

வலிமையான தேசியத் தலைமையை மக்கள் விரும்புகிறாா்கள் என்பதைத்தான் தோ்தல் முடிவுகள் பிரதிபலிக்கின்றன!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com