பெரும்பான்மை வெற்றி! |  உத்தர பிரதேச மாநிலத்தில் பாஜக வெற்றி குறித்த தலையங்கம்

பெரும்பான்மை வெற்றி! |  உத்தர பிரதேச மாநிலத்தில் பாஜக வெற்றி குறித்த தலையங்கம்

 உத்தர பிரதேச மாநிலத்தில் பாஜக பெற்றுள்ள வெற்றியை பெரும்பான்மை மதத்தினரின் வெற்றி என்று கூறி இருக்கிறார் அகில இந்திய மஜ்லிஸ் (ஏஐஎம்ஐஎம்) கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி. இக்கருத்து முக்கியமான விவாதத்தைத் துவக்கி வைத்திருக்கிறது.
 நமது மக்களாட்சி முறையில் தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளைப் பெறுபவரே வெற்றியாளராகிறார். அதேசமயம், பெரும்பான்மையினரான ஹிந்து மதத்தினரின் வாக்குகளைப் பெற்றதால் பாஜக உத்தர பிரதேசத்தில் பெரும்பான்மை பெற்றுவிட்டது என்று சிறுபான்மையினரின் பிரதிநிதியாக தன்னைக் கருதிக் கொள்ளும் அசாதுதீன் ஒவைசி கூறியிருக்கிறார். இது தேர்தல் முடிவுகளை மதரீதியாக விமர்சிப்பதாக இருக்கிறது.
 பெரும்பாலான கட்சிகள் தேர்தலில் வெல்ல ஜாதி, மதம், மொழி, இனம் ஆகியவற்றைப் பயன்படுத்தவே செய்கின்றன. நமது மக்களாட்சி முறை இன்னமும் நல்லாட்சிக்கான போட்டியாக மாறவில்லை. உண்மையில், இந்தச் சூழலை உருவாக்கியவர்களே அசாதுதீன் ஒவைசி போன்றவர்கள்தான் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.
 403 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட உத்தர பிரதேசத்தில் 15.05 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 19.3% இஸ்லாமியர்கள். மாநிலம் முழுவதிலும் பரவலாக இஸ்லாமியர்கள் இருந்தாலும், 20 - 40 % இஸ்லாமியர்கள் சுமார் 110 தொகுதிகளில், வெற்றியைத் தீர்மானிப்போராக உள்ளனர்.
 இவர்களின் ஒட்டுமொத்த வாக்குகளைக் கவர சமாஜவாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ் கட்சி ஆகியவை போட்டியிடுகின்றன. நடந்து முடிந்த தேர்தலில் இப்போட்டியில் சமாஜவாதி கட்சி பிற கட்சிகளை பின்னுக்குத் தள்ளி அதிகபட்ச இஸ்லாமியர்களின் ஆதரவைப் பெற்றிருக்கிறது. ஹிந்துத்துவக் கட்சியான பாஜகவை வெல்ல வாய்ப்புள்ளவராக தன்னை முன்னிறுத்தியதால் இந்த ஆதரவை அகிலேஷ் யாதவ் உறுதி செய்தார்.
 அதனால்தான் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை இம்முறை பெரும் வீழ்ச்சி கண்டன. அதுமட்டுமல்ல, உத்தர பிரதேசத்தில் உள்ள இஸ்லாமியர்களின் வாக்குகளை இலக்காகக் கொண்டு 97 தொகுதிகளில் களமிறங்கிய ஏஐஎம்ஐஎம் கட்சி வெறும் 4.51 லட்சம் வாக்குகளை (0.49%) மட்டுமே பெற்று தோல்வியுற்றது.
 வழக்கமாகவே சமாஜவாதி கட்சி இஸ்லாமியர்களின் ஆதரவைப் பெற்ற கட்சியாகும். இடைக்காலத்தில் அவர்களின் வாக்குகள் பகுஜன் சமாஜ் கட்சிக்குச் சென்றபோதும், அவர்கள் முழுமையாக சமாஜவாதி கட்சியைக் கைவிட்டதில்லை. முஸ்லிம் - யாதவர் கூட்டணி என்றே அக்கட்சி ஊடகங்களால் குறிப்பிடப்படுவது வழக்கம்.
 இம்முறை சமாஜவாதி கட்சிக் கூட்டணி சார்பில் 34 இஸ்லாமியர்கள் வென்று சட்டப்பேரவைக்குச் செல்ல உள்ளனர். இத்தேர்தலில் வென்ற முஸ்லிம் எம்.எல்.ஏ.க்கள் இவர்கள் மட்டுமே. காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் நிறுத்தப்பட்ட இஸ்லாமியர்கள்
 எவரும் வெல்லவில்லை. ஆளும் கட்சியான பாஜக ஒரு இஸ்லாமியரைக் கூட வேட்பாளராக நிறுத்தவில்லை; அதன் கூட்டணிக் கட்சியான அப்னாதளம் நிறுத்திய ஒரே இஸ்லாமியரும் தோல்வி அடைந்தார்.
 உத்தர பிரதேசத்தில் பாஜகவின் ஆட்சியில் மதரீதியான பாகுபாடு காட்டப்பட்டதாக புகார் ஏதுமில்லை. பிரதமர் நரேந்திர மோடி அனைவருக்குமான வளர்ச்சி குறித்துப் பேசி வருகிறார். மத்திய, மாநில அரசுகள் நாடு முழுவதும் சிறுபான்மையினர் நலனுக்காக பல கோடி ரூபாய்களைச் செலவிடுகின்றன. அவ்வாறு இருந்தாலும், சிறுபான்மையினரின் நம்பிக்கையை பாஜகவால் பெற முடிவதில்லை.
 இதற்கு பாஜக தலைவர்களின் பொறுப்பற்ற பேச்சுகளும் ஒரு காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. அதேசமயம், மதவெறியைத் தூண்டும் தலைவர்கள் எதிர்க்கட்சிகளிலும் இருக்கிறார்கள் என்பதற்கு அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசியே ஓர் உதாரணம்.
 பெரும்பான்மையினரின் சமய நம்பிக்கைகளை இழிவுபடுத்தினால், சிறுபான்மையினரின் வாக்குகளைக் கவர முடியும் என்று இதர கட்சிகள் கருதுகின்றன. இதுவே பெரும்பான்மை ஹிந்து சமூகத்தினரை பாஜகவை நோக்கி அணிதிரளச் செய்கிறது என்ற உண்மையைப் பலரும் பேசுவதில்லை. இன்று உத்தர பிரதேச மாநிலத்தில் நடந்திருப்பது இதுவே.
 இந்தத் தேர்தல் நடப்பதற்கு பல மாதங்கள் முன்னதாகவே சிறுபான்மையினரின் ஆதரவை வெல்ல சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பல முயற்சிகளை மேற்கொண்டார். அக்கட்சியின் முஸ்லிம் தலைவரான ஆஸம் கானின் பங்களிப்பு இதில் அதிகம். கூடவே பல்வேறு ஜாதிக் கட்சிகளை ஒருங்கிணைத்து வானவில் கூட்டணியை அகிலேஷ் யாதவ் உருவாக்கினார்.
 இதைக் கண்டு விழிப்படைந்த முதல்வர் யோகி ஆதித்யநாத், அகிலேஷின் வியூகத்தை முறியடிக்க "80:20-க்கான போட்டி' என்ற அஸ்திரத்தை எடுத்தார். மக்களாட்சியில் அதிகபட்ச மக்கள் ஆதரிக்கும் கட்சியே வெற்றிமாலை சூடும். ஆதித்யநாத்தின் வியூகம் வென்றதால் பெரும்பான்மையினரின் வாக்குகளுடன் தற்போது பாஜக வென்றிருக்கிறது. இதைக் குறை கூறி லாபமென்ன?
 ஆட்சி நிர்வாகத்தின் அடிப்படையில் சீர்தூக்கி வாக்களிக்காமல் சிறுபான்மையினர் ஒட்டுமொத்தமாக வாக்களிக்கும்போது, அதற்குப் பதிலடியாக பெரும்பான்மையினரின் ஒருங்கிணைவு இயல்பாக நடந்தேறுகிறது. அதை பாஜக பயன்படுத்திக் கொள்கிறது.
 உத்தர பிரதேசத்தில் வாக்குகள் மதரீதியாகப் பிளவுபட்டதற்கு மதச்சார்பின்மை பேசும் கட்சிகளும் காரணம் என்பதை மறுக்க முடியாது. தேர்தல் முடிவுகளை மதரீதியாக விமர்சிப்போர், முதலில் தமது நடுநிலைமையை அலசி ஆராய வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com