ஆட்டம் தொடருமா? முடியுமா? | இம்ரான் கான் மீது எதிர்க்கட்சிகள் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்த தலையங்கம்

ஆட்டம் தொடருமா? முடியுமா? | இம்ரான் கான் மீது எதிர்க்கட்சிகள் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்த தலையங்கம்

 பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்துள்ள நிலையில், அவர் பதவியில் நீடிப்பது குறித்த கேள்வி எழுந்துள்ளது. கிரிக்கெட் வீரராக இருந்து அரசியல்வாதியாகி ஆட்சியைப் பிடித்த இம்ரான் கான், தனது சொந்தக் கட்சிக்குள்ளேயே எழுந்துள்ள எதிர்ப்பை எவ்வாறு சமாளிக்கப் போகிறார் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
 நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்), பிலாவல் புட்டோ சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி), ஜமாத்-உலேமா-இஸ்லாம் (எஃப்) ஆகிய கட்சிகள் இணைந்து பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சி (பிடிஐ) ஆட்சியின் மீது கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது விவாதம் நடத்துவதற்காக பாகிஸ்தான் நாடாளுமன்றம் மார்ச் 25-ஆம் தேதி கூடுகிறது. அன்றைய தினத்திலிருந்து மூன்று முதல் ஏழு நாள்களுக்குள் தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 342 உறுப்பினர்களைக் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்ற கீழவையில் இம்ரான் கான் கட்சிக்கு 155 உறுப்பினர்கள் உள்ளனர். ஆறு கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த 21 உறுப்பினர்களின் ஆதரவுடன் இம்ரான் கானுக்கு 176 உறுப்பினர்கள் ஆதரவு இருந்து வந்தது. ஆனால், சொந்தக் கட்சியைச் சேர்ந்த சுமார் 20 அதிருப்தி உறுப்பினர்கள் அண்மைக்காலமாக இம்ரான் கானுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். அவர்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, அதன் விளைவாக கடும் விலைவாசி உயர்வு ஆகியவையே எதிர்க்கட்சிகளின் பிரதான குற்றச்சாட்டுகள். உலகையே கதிகலங்கச் செய்த கரோனாவின் தாக்கத்திலிருந்து பாகிஸ்தான் தப்பினாலும், பொருளாதார நெருக்கடி, அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியதால் பாகிஸ்தானில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் தாக்குதல் அதிகரிப்பு என பெரும் பிரச்னைகளை எதிர்கொண்டு வந்த இம்ரான் கானின் தலைக்கு மேல் கத்தியாக இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொங்கிக் கொண்டிருக்கிறது.
 இந்த நெருக்கடியிலிருந்து தப்பிக்க இம்ரான் தரப்பு சில நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தாலும் அது எந்த அளவுக்குப் பலன் தரப்போகிறது என்பது தெரியவில்லை. பாகிஸ்தான் அரசியலமைப்புச் சட்டத்தின் 63-ஏ பிரிவின்படி, முக்கிய பிரச்னைகளில் கட்சித் தலைமையின் உத்தரவை மீறி வாக்களிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவர்.
 ஆனால், இந்த முறை கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நாடாளுமன்ற உறுப்பினர்களை முன்கூட்டியே தகுதி நீக்கம் செய்ய முடியுமா என விளக்கம் கோரி உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளது ஆளும் கட்சி. இது தொடர்பாக விசாரிக்க 5 பேர் கொண்ட அமர்வை உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது.
 இறுதி முயற்சியாக, ராணுவத்தின் உதவியுடன் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள முடியுமா என்கிற பாகிஸ்தான் கட்சிகளின் வழக்கமான உத்தியையும் இம்ரான் கான் கையில் எடுத்துள்ளார். கடந்த வாரம் ராணுவ தலைமைத் தளபதி கமர் ஜாவேத் பஜ்வாவை இம்ரான் கான் சந்தித்ததும், இதன் ஒரு பகுதியாகவே பார்க்கப்பட்டது.
 ஆனால், அதில் வழக்கத்துக்கு மாறாக இந்த முறை சிக்கல் ஏற்பட்டுள்ளது. இம்ரான் கானுக்கும் ராணுவத் தலைமைக்கும் அண்மைக்காலமாக உறவில் விரிசல் விழுந்துள்ளதே அதற்குக் காரணம்.
 இரு பெரும் கட்சிகளை வீழ்த்திவிட்டு 2018-இல் இம்ரான் கான் ஆட்சியைப் பிடித்தபோது, உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தார். ஆனால், பாகிஸ்தானின் கடந்த கால வரலாற்றைப் போலவே அவரது ஆட்சியின் பிடியும் ராணுவத்தின் வசமே இருந்து வருகிறது. இரு தரப்புக்குமான உறவில் கடந்த ஆண்டு விரிசல் விழுந்தது.
 நாட்டின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ தலைவராக இருந்த ஃபயஸ் ஹமீதை மாற்றிவிட்டு அவருக்கு பதிலாக நதீம் அன்ஜுமை ராணுவ தலைமைத் தளபதி கமர் ஜாவேத் பஜ்வா நியமித்தபோது அதற்கு இம்ரான் கான் பகிரங்கமாக எதிர்ப்புத் தெரிவித்தார். அந்த உத்தரவில் கையொப்பமிடாமல் மூன்று வாரங்கள் காலம் தாழ்த்தினார்.
 இம்ரான் உதவியுடன் ராணுவ தலைமைத் தளபதி ஆவதற்கு ஃபயஸ் ஹமீதும், ஃபயஸ் ஹமீது உதவியுடன் மீண்டும் பிரதமர் ஆவதற்கு இம்ரானும் மறைமுக ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் சந்தேகம் எழுப்பின. அதன்பிறகு ஐஎஸ்ஐ புதிய தலைவராக நதீம் அன்ஜும் நியமனத்தை இம்ரான் கான் அங்கீகரித்தாலும், அவருக்கும் ராணுவத்துக்குமான உறவில் விரிசல் தொடர்கிறது.
 இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட எதிர்க்கட்சிகள், இம்ரானுக்கு எதிராக ஒன்று திரண்டன. படிப்படியாக பல கட்ட போராட்டங்களை நடத்தி வந்த நிலையில், இப்போது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கையில் எடுத்துள்ளன.
 தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் நாளில் நாடாளுமன்றத்துக்கு வெளியே பலத்தைக் காட்ட இரு தரப்பும் முடிவு செய்துள்ளன. தலைநகரில் ஆதரவாளர்கள் திரள வேண்டும் என இம்ரான் கானும், எதிர்க்கட்சிக் கூட்டணியும் அறிவிப்பு வெளியிட்டுள்ளதால், இம்ரான் கான் தனது ஆட்டத்தைத் தொடர்வாரா அல்லது முடித்துக் கொள்வாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது. நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் வெற்றி தோல்வி ஒருபுறம் இருந்தாலும், அத்துடன் பாகிஸ்தானின் அரசியல் பிரச்னை முடிந்துவிடப் போவதில்லை என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com