மாற்றம் தவிர்க்க முடியாதது! | மின்சார வாகன பயன்பாடு குறித்த தலையங்கம்

இந்தியாவின் பெருநகரங்களில் காற்று மாசு பிரச்னை விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இந்த பிரச்னைக்குத் தீர்வுகாண மாற்று எரிசக்திக்கு மாற வேண்டும் என்று அரசு அழைப்பு விடுத்து வருகிறது.
மாற்றம் தவிர்க்க முடியாதது! | மின்சார வாகன பயன்பாடு குறித்த தலையங்கம்

இந்தியாவின் பெருநகரங்களில் காற்று மாசு பிரச்னை விஸ்வ
ரூபம் எடுத்து வருகிறது. இந்த பிரச்னைக்குத் தீர்வுகாண மாற்று எரிசக்திக்கு மாற வேண்டும் என்று அரசு அழைப்பு விடுத்து வருகிறது. அதன் அடிப்படையில், மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க அரசு முனைப்புக் காட்டுகிறது. 

போக்குவரத்து மூலம் ஏற்படும் கரியமிலவாயு மாசைக் குறைத்து சுற்றுப்புறச்சூழலை தூய்மையானதாக்குவதே மின்சார வாகனங்களைப் பயன்படுத்துவதன் நோக்கமாகும். கிளாஸ்கோ உச்சி மாநாட்டில் கரியமிலவாயு உமிழ்வை வெகுவாகக் குறைக்க இந்தியா உறுதியளித்தது. இந்த உறுதிமொழிகளை நிறைவேற்ற மின்சார வாகனங்களைப் பயன்படுத்தவும், அவற்றின் உற்பத்தியை அதிகரிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. 

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மின் வாகனங்களில் சுற்றுச்சூழலின் செயல்திறனை மேம்படுத்துவதற்காக மின்கலம் மாற்றும் கொள்கை அறிமுகப்படுத்தப்படும் என 2022-23 ஆண்டு பட்ஜெட்டில் அறிவித்தார். இந்த நிலையில், இரு சக்கர வாகனப் பிரிவில் மட்டும் இந்த மார்ச் மாதத்தில் விற்பனை 50,000-ஐ எட்டியுள்ளது. 2021 மார்ச்சுடன் ஒப்பிடுகையில், இது நான்கு மடங்கு அதிகமாகும். இருப்பினும், ஆரம்ப அனுபவம் சவாலானதாக இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.  

ஓலா மின்சார ஸ்கூட்டர் தீப்பிடித்ததையடுத்து, ஜிதேந்திரா மின்சார இருசக்கர வாகனங்கள் நிறைந்த லாரி முழுவதும் புகை மண்டலமாக மாறியது. மின்சார ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்யும் பிரபல நிறுவனமான ஒகினாவா ஆட்டோடெக் நிறுவனம், பிரச்னை இருப்பதை ஒப்புக்கொண்டு 3,125 ஸ்கூட்டர்களை திரும்பப் பெற்றுள்ளது. 

இதுபோன்ற நிகழ்வுகளால் விற்பனை 10%-க்கும் அதிகமாகக் குறைந்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கிறார்கள். மின்சாரத்தில் இயங்கக் கூடிய கார்களை வாங்கும் நுகர்வோரும் பல பிரச்னைகளை எதிர்கொள்கிறார்கள். மின் வாகனங்களுக்கான கட்டமைப்பு உருவாகாமல் இருப்பது முக்கியமான காரணம்.

மின்சார வாகனங்களுக்கு மின்னூட்டம் (சார்ஜிங்) மற்றும் பழுது பார்க்கும் நிலையங்களின் பற்றாக்குறை காணப்படுகிறது. அந்த வாகனங்களின் மின்கலம் 150 கி.மீ. வரை செல்லும் திறன் கொண்டவை என்று கூறப்பட்டாலும், பெரும்பாலும் 100 கி.மீ. மட்டுமே செயல்படுகின்றன. இதனால், அடிக்கடி மின்னூட்டம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. 

இந்த கார்களை விற்கும் நிறுவனங்கள் வீடுகளில் மின்னூட்டம் செய்யும் அமைப்புகளை எளிதாக்குவதில்லை. அதே சமயம் பொதுவான பகுதிகளில் இந்த வசதிகளை எவ்வாறு வழங்குவது என்பது பற்றி வீட்டுவசதி சங்கங்களும் மெளனமாகத்தான் உள்ளன. நம் நாட்டில் லட்சக்கணக்கான கார் உரிமையாளர்களுக்கு, கார்களை நிறுத்துவதற்கான சரியான பார்க்கிங் வசதிகள் இல்லாத நிலையில், மின்னூட்டப் பிரச்னை மிகப் பெரிய தடையாக இருக்கிறது.

மின்சார வாகன உற்பத்தி நிறுவனங்களும், அரசும் சில தீவிர தொழில்நுட்பம் மற்றும் நடைமுறை இடையூறுகளைக் களைய முன்வர வேண்டும். வணிக நோக்கத்தில் அவசரகதியில், பல மின்சார வாகன உற்பத்தி நிறுவனங்கள் பாதுகாப்பு அம்சங்களைப் புறக்கணித்து விடுகின்றன. மின்சார வாகனம் என்பதால் பிரச்னைகள் அதிகமாகவே காணப்படுகிறது.
அதிக அளவிலான மின்னூட்டத்தைச் சேமிக்கும் திறன்மிக்க மின்கலங்களை உற்பத்தி செய்ய வேண்டியது அவசியமாகும். 2030-ஆம் ஆண்டுக்குள் பழைய வாகனங்களை படிப்படியாக அகற்ற அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்தச் சூழ்நிலையில், மின்சார வாகனங்களின் பாதுகாப்பு விஷயத்தில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். 

மின்சார வாகனங்களுக்கான மின்கலங்கள் மாற்றும் வரைவுக் கொள்கையை நீதி ஆயோக் அண்மையில் வெளியிட்டுள்ளது. மின்சார வாகனங்கள் மின்னூட்டம் செய்யப்படுவதற்கு பதிலாக எந்தவொரு தனிநபரும் அல்லது நிறுவனமும் எந்த இடத்திலும் மின் கலத்தை மாற்றும் வசதிகளுக்கான மின்கல நிலையங்களை அமைப்பதுதான் இந்தக் கொள்கையின் நோக்கமாகும்.  

மின்சார வாகனங்களுக்கு நகர்ப்புறங்களில் மின்னூட்ட நிலையங்கள் (சார்ஜிங் ஸ்டேஷன்) அல்லது தனியார் குடியிருப்புப் பகுதிகளில் மின்னூட்ட வசதி செய்யப்படுகிறது. இதில் சில நேரங்களில் தொழில்நுட்ப பிரச்னைகள் ஏற்பட்டு மின்னூட்டத்தின்போது விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும், எதிர்காலத்தில் வாகனங்கள் அதிகரிக்கும்போது இதற்கான நிலையங்கள் அமைப்பதற்கான இட நெருக்கடி ஏற்படக்கூடும்.

இதைக் கருத்தில் கொண்டுதான், வாகனங்களில் நேரடியாக மின்னூட்டம் செய்வதற்கு பதிலாக ஏற்கெனவே மின்னூட்டம் செய்யப்பட்ட மின்கலங்களை மாற்றிக் கொள்ளும் நடைமுறையை இந்தப் புதிய வரைவுக் கொள்கை தெரிவிக்கிறது. இதற்கான ஆலோசனைகள், கருத்துகளை வருகின்ற ஜூன் 5-ஆம் தேதிக்குள் வழங்கும்படியும் பொதுமக்களை நீதி ஆயோக் கேட்டுக் கொண்டுள்ளது.  

மின்சார வாகனங்களால் மின்சாரத்திற்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், நிலக்கரி போன்ற புதைபடிவ எரிபொருள்களால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கு அனுமதி அளிக்கக் கூடாது. அதே சமயம், சூரிய ஒளி, காற்றாலை போன்ற தூய்மையான மின்சாரத்திற்கான மாற்றத்தை திட்டமிடுவது காலத்தின் கட்டாயமாக உள்ளது.
எந்தவொரு புதிய தொழில்நுட்பமும் தொடக்கத்தில் சில பிரச்னைகளை எதிர்கொள்வது இயல்பு. புதைபடிவ எரிசக்தியிலிருந்து தூய்மையான மின்சாரத்துக்கு மாறுவதன் மூலம்தான் கரியமில வாயு உமிழ்வைக் குறைக்க முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com