கொந்தளிப்பில் கொழும்பு! | இலங்கை வன்முறை குறித்த தலையங்கம்

கொந்தளிப்பில் கொழும்பு!  | இலங்கை வன்முறை குறித்த தலையங்கம்

 ராஜபட்ச சகோதரர்களின் குடும்ப ஆட்சி ஏற்படுத்தியிருக்கும் பொருளாதார நெருக்கடி, அரசியல் குழப்பம் இவற்றால் சுனாமி போன்ற பேரழிவை சந்தித்து வருகிறது இலங்கை. அத்தியாவசிய பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டு, விலைவாசி அதிகரித்திருப்பதால் மக்கள் கொந்தளித்துப்போய் இருக்கிறார்கள். அதன் காரணமாக நாடு தழுவிய அளவில் இலங்கையில் வன்முறை எழுந்திருக்கிறது.
 நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்குப் பொறுப்பேற்று அதிபர் கோத்தபய ராஜபட்சவும், பிரதமர் மகிந்த ராஜபட்சவும் பதவி விலக வலியுறுத்தி கடந்த ஏப். 9-ஆம் தேதி தொடங்கிய பொதுமக்களின் தன்னெழுச்சிப் போராட்டம், சரியாக ஒரு மாத நிறைவில் வன்முறைப் போராட்டமாக மாறியிருக்கிறது. தலைநகர் கொழும்பில் அதிபர் அலுவலகம் அருகேயுள்ள காலிமுகத் திடலில் கட்சி பேதம், இன பேதமின்றி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் மீது, மகிந்த ராஜபட்ச ஆதரவாளர்கள் நடத்திய கொலைவெறித் தாக்குதலே நாடு முழுவதும் வன்முறைக்கு வித்திட்டதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
 இந்த வன்முறையில் இதுவரை ஆளுங்கட்சி எம்.பி. ஒருவர் உள்பட எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். அம்பந்தோட்டாவில் உள்ள ராஜபட்ச சகோதரர்களின் தந்தை நினைவிடமும், வீடுகளும் தீவைத்துக் கொளுத்தப்பட்டுள்ளன. 14 முன்னாள் அமைச்சர்கள், 18 எம்.பி.க்கள், ராஜபட்ச விசுவாசிகள் ஆகியோரின் வீடுகள் தாக்கப்பட்டுள்ளன. ஏராளமான சொத்துகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
 இலங்கை பல்வேறு சர்வதேச அமைப்புகளுக்கும், நாடுகளுக்கும் திருப்பித் தர வேண்டிய கடனின் அளவு சுமார் ஏழு பில்லியன் டாலர் (சுமார் ரூ.54,123 கோடி). இலங்கையின் ஜிடிபியில் 119% அளவில் வெளிநாட்டுக் கடன் காணப்படுகிறது. 2021 நிதியாண்டில், வருவாயைவிட 2.4 மடங்கு அதிக அளவிலான செலவினங்கள் காணப்பட்டன.
 பொருளாதார நெருக்கடி தொடங்கியபோது ராஜபட்ச சகோதரர்களின் அரசு அலட்சியமாக இருந்ததுதான் இலங்கையை இந்த அளவுக்கு மோசமான நிலைமைக்குக் கொண்டு சென்றது. நாட்டு மக்களின் எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொள்ளாமல் போராட்டத்தை ஒடுக்குவதிலேயே அதிபர் கோத்தபய குறியாக இருந்தார். ஏப். 1-ஆம் தேதி அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது.
 பொருளாதார பிரச்னைகளுக்குப் பொறுப்பேற்று பிரதமர் மகிந்தவைத் தவிர ஏனைய அமைச்சர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக ராஜிநாமா செய்தனர். தனது மற்றும் தன் சகோதரர் மகிந்த தலைமையில் அனைத்துக் கட்சிகள் அடங்கிய இடைக்கால அரசு அமைக்க அதிபர் கோத்தபய விடுத்த அழைப்பை எதிர்க்கட்சிகள் நிராகரித்தன. அதிபரும், பிரதமரும் பதவி விலக வேண்டும் என்பதுதான் எதிர்க்கட்சிகளின் பிரதான கோரிக்கை. மீண்டும் அவர்களின் தலைமையிலான அரசில் இடம்பெற எதிர்க்கட்சிகள் தயாராக இல்லை. இலங்கையின் அரசியல் நெருக்கடிக்கு எதிர்க்கட்சிகளின் முடிவு வழிகோலியிருக்கிறது.
 உள்நாட்டு பொருளாதாரத்துக்கு முக்கியப் பங்களித்த சுற்றுலாத்துறை, கரோனா பெருந்தொற்றால் முற்றிலும் முடங்கியது, பொருளாதார சீர்குலைவுக்கு மற்றொரு காரணம். கொள்ளை நோய்த்தொற்று காலத்துக்கு முன்பு வரை, ஆண்டுதோறும் 4.5 பில்லியன் டாலர் (சுமார் ரூ.35,000 கோடி) அளவில் இலங்கை சுற்றுலா மூலம் வருவாய் ஈட்டி வந்தது. இப்போது அந்த வருவாய் முற்றிலுமாக நின்றுவிட்டது. சர்வதேச நிதியம் கைகொடுக்காமல் போனால், 51 பில்லியன் டாலர் (சுமார் ரூ.3,95,000 கோடி) கடன் தொகைக்கு வட்டி செலுத்த முடியாத சூழலுக்கு இலங்கை தள்ளப்படும்.
 இலங்கையின் அந்நியச் செலாவணி இருப்பு கணிசமாகக் குறைந்துவிட்டதால் உணவுப் பொருள்கள், கச்சா எண்ணெய் இவற்றின் இறக்குமதி தடைபட்டுள்ளது. துறைமுகத்தில் கப்பல்கள் சரக்குகளுடன் காத்திருந்தாலும் அதற்கான தொகையைச் செலுத்தி இறக்குமதி செய்ய முடியாத நிலையில் இலங்கையின் பொருளாதாரம் தவிக்கிறது.
 அத்தியாவசியப் பொருள்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு விலைவாசி எட்ட முடியாத அளவில் உயர்ந்திருக்கிறது. சர்வதேச நிதியத்தை அணுகி மேலும் கடனுதவி பெற ராஜபட்ச சகோதரர்கள் அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு எழும்பியிருக்கிறது. சர்வதேச நிதியம் விதிக்கும் நிபந்தனைகள் இலங்கையை மேலும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாக்கக்கூடும் என்று மக்கள் அஞ்சுகிறார்கள்.
 பிரதமர் மகிந்த ராஜபட்ச பதவி விலகி இருக்கிறார். அதிபர் கோத்தபய போராட்டத்தை அடக்க முப்படைகளுக்கும் முழு அதிகாரம் வழங்கியிருக்கிறார். அதன் விளைவாக போராட்டம் ஓரளவுக்கு கட்டுக்குள் வந்திருக்கிறது என்றாலும் மக்கள் கொந்தளித்துப்போய் இருக்கிறார்கள்.
 விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதல்களை முன்னின்று நடத்திய மகிந்த, கோத்தபய சகோதரர்களை கொண்டாடிய சிங்கள மக்கள், இப்போது அவர்களுக்கு எதிராகக் கொதித்தெழுந்துள்ளனர். சர்வாதிகார மனநிலை கொண்ட ராஜபட்ச சகோதரர்கள், எளிதாக தங்களது அதிகாரத்தை இழக்க முன்வரமாட்டார்கள். அவசரநிலையைத் தொடர்ந்து அதிபர் கோத்தபய ராணுவ ஆட்சியை அறிவிக்கக்கூடும்.
 மக்களின் எதிர்ப்பு, பொருளாதாரப் பின்னடைவு, அந்நியச் செலாவணி வற்றிய கடன் சூழல் ஆகியவற்றின் பின்னணியில், ராணுவத்தை மட்டுமே நம்பி ராஜபட்ச சகோதரர்களால் நீண்ட காலம் ஆட்சி நடத்திவிட முடியாது. அதே நேரத்தில், ஆட்சி மாற்றத்தால் மட்டும் இலங்கையை மீட்டெடுக்க முடியுமா என்கிற கேள்வியும் மக்களை மிரட்டுகிறது. எப்போதும் தண்ணீரில் மிதக்கும் சிங்களத் தீவு, இப்போது கண்ணீரில் மிதக்கிறது!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com