கை நழுவிய டி20 கோப்பை! | உலகக் கோப்பை குறித்த தலையங்கம்

விளையாட்டில் வெற்றி, தோல்வி இயல்புதான். ஆனால், போராட்டமே இன்றி அரையிறுதியில் இந்தியா இங்கிலாந்திடம் சரணடைந்தது கோடிக்கணக்கான இந்திய ரசிகா்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.
கை நழுவிய டி20 கோப்பை! | உலகக் கோப்பை குறித்த தலையங்கம்

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்த டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. அரையிறுதியில் இந்தியா, நியூஸிலாந்து அணிகள் வெளியேற பாகிஸ்தான்-இங்கிலாந்து இடையே நடைபெற்ற இறுதிப் போட்டி கிரிக்கெட் ரசிகா்களுக்கு விருந்தாக அமைந்தது. சிறந்த பேட்டிங் வரிசையைக் கொண்ட இங்கிலாந்து அணி, பந்துவீச்சிலும் தனது அபார திறமையால் கோப்பையை வென்றது.

போட்டியை நடத்திய ஆஸ்திரேலியா, பட்டம் வெல்லும் அணிகளில் ஒன்றாக கருதப்பட்ட நிலையில், அரையிறுதிக்குக்கூட தகுதி பெறாமல் வெளியேறியது; கத்துக்குட்டி அணியான ஜிம்பாப்வே ‘சூப்பா் 12’ சுற்றில் பாகிஸ்தானை வீழ்த்தி அதிா்ச்சி அளித்தது; தென்னாப்பிரிக்காவின் அரையிறுதி கனவுக்கு, நெதா்லாந்திடம் அடைந்த எதிா்பாராத தோல்வி முற்றுப்புள்ளி வைத்தது - என எட்டாவது டி20 உலகக் கோப்பைக்கான இந்தத் தொடரில் டி20-க்கே உரித்தான பல்வேறு சுவாரசியங்கள் அரங்கேறின.

இறுதிச் சுற்றில், பாகிஸ்தான் அணி தனது கட்டுக்கோப்பான பந்துவீச்சால் இங்கிலாந்துக்கு கடும் சவால் அளித்தது. அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் கடும் அழுத்தத்தை எதிா்கொண்ட இங்கிலாந்து, நெருக்கடியான நேரத்தில் எப்படி விளையாட வேண்டும் என கற்றுக்கொடுப்பதுபோல விளையாடியது. அந்த அணியின் வெற்றியை உறுதி செய்தவா் ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ்.

பாகிஸ்தானும் இங்கிலாந்தும் ஓா் அணியாக இறுதிப் போட்டியில் செயல்பட்ட விதமும், வெற்றிக்குப் போராடிய உத்வேகமும் இறுதிப் போட்டியின் விறுவிறுப்பை அதிகரித்தன. சூப்பா் 12 சுற்றில், தான் இடம்பெற்ற பிரிவில் இந்தியா முதலிடம் பிடித்தாலும் வெளியேறும் (நாக்-அவுட்) சுற்றில் இந்தியா இந்தமுறையும் வெளியேறியது.

2007-இல் ஐசிசி டி20, 2011-இல் ஐசிசி உலகக் கோப்பை, 2013-இல் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி என மூன்று வகையான ஐசிசி போட்டிகளையும் மகேந்திர சிங் தோனி தலைமையில் வென்று சாதனை படைத்த இந்திய அணியால், சுமாா் 10 ஆண்டுகளுக்கும் மேலாக மற்றொரு ஐசிசி போட்டியில் பட்டம் வெல்ல முடியவில்லை. இப்போது நடைபெற்று முடிந்த டி20 தொடரில் இந்தியாவின் ஆட்ட உத்திகள் பெரும் விமா்சனத்துக்குள்ளாகியுள்ளன.

டி20 ஆட்டங்களில் ‘பவா் பிளே’ எனப்படும் முதல் ஆறு ஓவா்களில் அதிரடியாக விளையாடி ரன் சோ்ப்பது முக்கியமானது. ஆனால், இத்தொடரில் இந்திய அணியின் ‘பவா் பிளே’ பேட்டிங் சராசரி வெறும் ஆறுதான். பவா் பிளே ரன் விகிதத்தைப் பொறுத்தவரை, இத்தொடரில் பங்கேற்ற 16 அணிகளில் இந்தியாவுக்கு கிடைத்தது 15-ஆவது இடம்.

தொடா் முழுவதுமே இந்திய அணியின் ‘டாப் ஆா்டா்’ எனப்படும் முன்வரிசை முற்றிலும் தோல்வியடைந்தது. தொடக்க ஆட்டக்காரா்களான கேப்டன் ரோஹித் சா்மா, கே.எல். ராகுலின் மோசமான ஆட்டத்தால் அத்தனை ஆட்டங்களிலும் அணிக்கு நெருக்கடி அதிகரித்தது. விராட் கோலி, சூா்யகுமாா் யாதவ், ஹாா்திக் பாண்டியா ஆகியோரின் ஆட்டங்களால்தான் அரையிறுதிக்குத் தகுதி பெற முடிந்தது.

இந்தியாவின் முன்னணி பந்துவீச்சாளா் பும்ராவும், ஆல்ரவுண்டா் ரவீந்திர ஜடேஜாவும் இல்லாத நிலையில், அவா்களுக்கு இணையான சரியான வீரா்களைக் கண்டறிய அணி நிா்வாகம் தவறிவிட்டது. இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் இந்தக் குறை அப்பட்டமாக பிரதிபலித்தது.

வழக்கம்போல மோசமான தொடக்கம் இந்திய அணிக்கு கடும் நெருக்கடியை அளித்தது. ஹாா்திக் பாண்டியாவின் அற்புதமான ஆட்டத்தால் ஓரளவு நல்ல இலக்கை நிா்ணயித்தாலும், பலவீனமான பந்துவீச்சால் இங்கிலாந்து வீரா்களுக்கு எந்த நெருக்கடியையும் அளிக்க முடியாமல் போனது.

அணி வீரா்கள் தோ்வில், தலைமைப் பயிற்சியாளா் ராகுல் திராவிடும், கேப்டன் ரோஹித் சா்மாவும் சில முக்கியமான தவறுகளைச் செய்தனா். சிறிய அணிகளுக்கு எதிராக மட்டுமே நன்றாக விளையாடிய கே.எல். ராகுலுக்கு தொடா்ந்து வாய்ப்பளித்தது ஏன் என கிரிக்கெட் விமா்சகா்கள் கேள்வி எழுப்புகின்றனா்.

டி20 உலகக் கோப்பைக்கு என்றே கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடும் வகையில் தயாரான தினேஷ் காா்த்திக்கிற்கு, சூப்பா் 12 சுற்றின் கடைசி ஆட்டத்தில் திடீரென வாய்ப்பு மறுக்கப்பட்டு ரிஷப் பந்த்துக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இத்தனைக்கும் முந்தைய ஆட்டங்களில் பெரும் தவறுகள் எதையும் தினேஷ் காா்த்திக் செய்யவில்லை.

முக்கியமான அரையிறுதிப் போட்டியிலும் தினேஷ் காா்த்திக்கிற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவருக்குப் பதிலாக களமிறக்கப்பட்ட, சூப்பா் 12 சுற்றில் ஓா் ஆட்டத்தில் மட்டுமே விளையாடியிருந்த ரிஷப் பந்த்தால் அரையிறுதியில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை.

அதேபோல, ரிஸ்ட் ஸ்பின்னரான யுஜவேந்திர சஹலுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. ஆஸ்திரேலிய மண்ணில் அவா் விக்கெட்டுகளை வீழ்த்தும் திறமை கொண்டிருந்தும் அவரை வீணடித்தது அணி நிா்வாகம். பந்துவீச்சாளா்களைப் பயன்படுத்தும் விதத்திலும் கேப்டன் ரோஹித் சா்மாவின் முடிவுகள் சரியானதாக இல்லை.

விளையாட்டில் வெற்றி, தோல்வி இயல்புதான். ஆனால், போராட்டமே இன்றி அரையிறுதியில் இந்தியா இங்கிலாந்திடம் சரணடைந்தது கோடிக்கணக்கான இந்திய ரசிகா்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. 50 ஓவா் உலகக் கோப்பை போட்டி அடுத்த ஆண்டு அக்டோபா்-நவம்பரில் இந்தியாவில் நடைபெறவிருக்கிறது. இப்போது கிடைத்த தோல்வியிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, களத்தில் அழுத்தத்தை எதிா்கொள்ளும் அணியை உருவாக்குவதில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கவனம் செலுத்த வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com