மெத்தனம் வேண்டாம்! | இந்திய பொருளாதாரம் பற்றி சர்வதேச நிதியத்தின் கணிப்பு குறித்த தலையங்கம்

மெத்தனம் வேண்டாம்! | இந்திய பொருளாதாரம் பற்றி சர்வதேச நிதியத்தின் கணிப்பு குறித்த தலையங்கம்

 சர்வதேச அளவில் பொருளாதாரம் தேக்க நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. வளர்ச்சி அடைந்த உலக நாடுகள் பலவும் விலைவாசி உயர்வாலும், எரிசக்தி தட்டுப்பாட்டாலும் செய்வதறியாது திகைக்கின்றன. அவற்றுடன் ஒப்பிடும்போது இந்தியா சாமர்த்தியமாக தன்னை பாதுகாத்துக் கொள்கிறது என்றாலும்கூட, நாமும் பெரும் பொருளாதார சவால்களை எதிர்கொள்கிறோம் என்பதை மறந்துவிடக் கூடாது.
 ஆண்டுதோறும் சர்வதேச நிதியம் வருடாந்திர உலக பொருளாதாரக் கணிப்பை வெளியிடுவது வழக்கம். 2022-க்கான கணிப்பில் ஜூலை மாத கணிப்பை 0.6% குறைத்து 6.8%-ஆக நமது வளர்ச்சி இருக்கும் என்று கூறியிருப்பது கவலையளிக்கிறது.
 2021-22 நிதியாண்டில் நமது வளர்ச்சி 8.7%-ஆக இருந்தது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். சர்வதேச நிதியம் ஜனவரி மாதம் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சியை 8.2%-ஆக கணித்திருந்தது. ஏப்ரல் மாதம் அதை 7.4%-ஆகக் குறைத்தது. நேற்று, 2022 நிதியாண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.8% அளவில்தான் இருக்கும் என்கிற கணிப்பை சர்வதேச நிதியம் இப்போது வெளியிட்டிருக்கிறது.
 சர்வதேச வளர்ச்சியும், 2021-இல் இருந்த 6%-லிருந்து நடப்பு நிதியாண்டில் 3.2%-ஆகக் குறைக்கப்பட்டிருக்கிறது. அடுத்த 2023 நிதியாண்டில் மேலும் குறைந்து 2.7% அளவில்தான் இருக்கும் என்பது சர்வதேச நிதியத்தின் கணிப்பு. 2001-க்குப் பிறகு இந்த அளவுக்கு பலவீனமான வளர்ச்சி இருந்ததில்லை. உலக நிதிநெருக்கடி, கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்று காலம் ஆகியவை மட்டுமே விதிவிலக்கான சில கட்டங்கள்.
 உலகின் பெரிய பொருளாதாரங்கள் எல்லாமே தள்ளாடுகின்றன. 2022 நிதியாண்டின் முதல் அரையாண்டில் அமெரிக்கா, ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளின் ஜிடிபி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. சீனாவில் தொடர்ந்து காணப்படும் கொவைட் 19 காரணமான பொது முடக்கங்களும், மனைவணிகத் துறையின் அதிகரித்த பிரச்னைகளும் சீனாவின் வளர்ச்சியைப் பாதித்திருக்கின்றன.
 உலகப் பொருளாதாரம் கடுமையான சவால்களை எதிர்கொள்வதற்கு, சர்வதேச நிதியம் மூன்று காரணங்களைச் சுட்டுகிறது. ரஷிய - உக்ரைன் போரால் ஏற்பட்டிருக்கும் எரிசக்தி தட்டுப்பாடு, விலைவாசி உயர்வால் பல வளர்ச்சி அடைந்த நாடுகளில் காணப்படும் அன்றாட வாழ்க்கை பாதிப்பு, சீனப் பொருளாதாரத்தின் பின்னடைவு ஆகிய மூன்றும் முக்கியமான காரணிகளாகக் கூறப்படுகின்றன.
 2023-இல் உலகப் பொருளாதாரம் மூன்றில் ஒரு பங்குக்கும் கீழே சுருங்கலாம் என்பது சர்வதேச நிதியத்தின் அறிக்கையில் காணப்படும் அதிர்ச்சி தரும் தகவல். அமெரிக்கா, ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள், சீனா மூன்றுமே தொடர்ந்து பொருளாதாரச் சரிவை எதிர்கொள்ளும் என்றும், 2023 மிகப் பெரிய தேக்கத்திற்கு உலகை உள்ளாக்கும் என்றும் தெரிவிக்கிறது அந்த அறிக்கை.
 இந்தியா மட்டுமல்ல சீனாவும் சர்வதேச நிதியத்தின் அறிக்கையில் முக்கியத்துவம் பெறுகிறது. 2021-இல் 8.1% அளவிலான வளர்ச்சி இருக்கும் என்று கணிக்கப்பட்ட சீனாவின் தற்போதைய வளர்ச்சி கணிப்பு வெறும் 3.2% மட்டுமே. சீனப் பொருளாதாரத்தில் ஐந்தில் ஒரு பங்கு வகிக்கும் மனைவணிகத் துறை, மிகப் பெரிய சரிவை எதிர்கொள்வதன் விளைவு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சர்வதேச விநியோகச் சங்கிலியில் சீனா முக்கிய பங்கு வகிப்பதால், ஏனைய நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்படுவது தவிர்க்க முடியாதது என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
 ரஷியாவின் உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு ஏழு மாதங்கள் கடந்திருக்கும் நிலையில், அதனால் ரஷியாவைப் போலவே ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளும் பெரும் பிரச்னைகளை எதிர்கொள்கின்றன. மிக முக்கியமாக எரிசக்தி பிரச்னை ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளையே பாதித்திருக்கிறது.
 இலங்கை அளவுக்கு இல்லாவிட்டாலும்கூட, பல ஐரோப்பிய நாடுகளில் அவ்வப்போது ஏற்படும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகிறார்கள். டிசம்பர் 5-ஆம் தேதி முதல் 27 நாடுகள் அடங்கிய ஐரோப்பிய கூட்டமைப்பு, ரஷிய கச்சா எண்ணெய்யைத் தவிர்க்க முடிவெடுத்திருக்கும் நிலையில், நிலைமை மேலும் மோசமாகலாம்.
 ஐரோப்பாவில், உக்ரைன் போருக்குப் பிறகு, எரிசக்தி தொடர்பான விலைவாசி சமீப மாதங்களில் 40% அளவுக்கு அதிகரித்திருக்கிறது. மொத்த விலைவாசியும், உணவுப் பொருள் தொடர்பான விலைவாசியும் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகரித்திருக்கின்றன. அவற்றைவிட எரிசக்தி விலை உயர்வு அதிகம். பெட்ரோல் - டீசல் விலை பிரிட்டனில் 70%, ஸ்பெயினில் 60% என்றால் நெதர்லாந்தில் 100%-க்கும் அதிகமாக உயர்ந்திருக்கிறது.
 ஐரோப்பிய நாடுகள் பெரும்பாலும் ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதியை நம்பியிருக்கும் நிலைமை. ஜெர்மனி தனது உள்நாட்டுத் தேவையில் 38% ரஷிய கச்சா எண்ணெய்யை நம்பியிருக்கிறது. பெல்ஜியம், ஃபின்லாந்து, நெதர்லாந்து ஆகியவை 50%-க்கும் அதிகம். வேறு பல ஐரோப்பிய நாடுகள் ரஷிய கச்சா எண்ணெய்யை மட்டுமே நம்பியிருப்பவை.
 பல ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் நிலைமை அந்த அளவுக்கு மோசமில்லை என்றாலும், அதை நினைத்து நாம் மகிழ்ச்சி அடையவோ, அசிரத்தையாகவோ இருக்க முடியாது. ஏனென்றால், சாமானிய இந்தியன் சர்வதேச அரசியலை புரிந்துகொள்பவன் அல்ல. அவனது அன்றாட வாழ்க்கையை விலைவாசியும், எரிசக்தித் தட்டுப்பாடும், வேலைவாய்ப்பும் பாதிக்கின்றன.
 சர்வதேச நிதியத்தின் கணிப்பு நிதியமைச்சகத்துக்கு வழங்கப்பட்டிருக்கும் எச்சரிக்கை மணி!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com