சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

விருது எழுப்பும் ஆதங்கம்! | நோபல் பரிசு அறிவிப்பு குறித்த தலையங்கம்

ஆல்பிரட் நோபல் என்பவருடைய உயிலின் அடிப்படையில் நாா்வீஜியன் நோபல் குழு ஆண்டுதோறும் சா்வதேச அளவில் மனிதகுல மேம்பாட்டுக்குப் பங்களித்தவா்களைத் தோ்ந்தெடுத்து விருதுகள் வழங்குகிறது.

News image
நோபல் பரிசு
Updated On :14 அக்டோபர் 2022, 5:54 am

ஆசிரியர்

ஆல்பிரட் நோபல் என்பவருடைய உயிலின் அடிப்படையில் நார்வீஜியன் நோபல் குழு ஆண்டுதோறும் சர்வதேச அளவில் மனிதகுல மேம்பாட்டுக்குப் பங்களித்தவர்களைத் தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்குகிறது. உலகில் எத்தனையோ விருதுகள் இருந்தாலும் ஆண்டுதோறும்  வழங்கப்படும் நோபல் விருதுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் அலாதியானது. 

ஆல்பிரட் பர்ன்ஹார்ட் நோபல் 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி, கண்டுபிடிப்பாளர். ஏறத்தாழ 300-க்கும் அதிகமான கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை வைத்திருந்தவர் அவர். டைனமைட் என்று சொல்லப்படும் வெடிகுண்டு அவரது கண்டுபிடிப்புதான். 

அமைதிக்கான நோபல் விருது 1901-ஆம் ஆண்டு வழங்குவது என்று முடிவெடுத்தபோது, அத்துடன் நின்றுவிடாமல் வேதியியல், இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், இலக்கியம் ஆகியவற்றுக்கு தலைசிறந்த பங்களிப்பை நல்கும் அறிஞர்களுக்கும் நோபல் விருது வழங்கி கெüரவிப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. இதற்காக நார்வே நாடாளுமன்றம் ஐந்து பேர் கொண்ட குழுவை அமைத்து, நார்வீஜியன் நோபல் குழு ஆண்டுதோறும் விருதுக்கான நபர்களை தேர்ந்தெடுத்து கெüரவிக்கிறது. 

2022-ஆம் ஆண்டுக்கான நோபல் விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. மருத்துவத்துக்கான நோபல் விருது, மனித சமூகத்தின் பரிணாமம் தொடர்பான ஆராய்ச்சிக்காக ஸ்வீடன்  விஞ்ஞானி ஸ்வான்டே பாபோவுக்கு வழங்கப்படுகிறது. நவீன மனிதர்களின் மரபணுக்களின் தொகுதியை (ஜீனோம்), மனிதர்களின் முந்தைய பரிணாமமான நியாண்டர்தால், டெனிசோவன் ஆகியவற்றின் மரபணுத் தொகுதிகளுடன் ஒப்பிட்டு, அவை இணைந்து மனித இனம் உருவானதாக தனது ஆய்வின் மூலம் தெரிவித்திருக்கிறார் பாபோ. 

வேதியியலுக்கான நோபல் விருது, கரோலின் ஆர். பெர்டோசி, மோர்டென் மெல்டல், பாரி ஷார்ப்லெஸ் ஆகிய மூவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கிறது. புற்றுநோய்க்கான மருந்தை உருவாக்கவும், டிஎன்ஏ வரைபடமாக்கலுக்கான "கிளிக் கெமிஸ்டரி' உள்ளிட்ட ஆராய்ச்சிகளில் ஈடுபட்டதற்காகவும் இந்த ஆண்டுக்கான நோபல் விருது அவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. இவர்களில் ஷார்ப்லெஸ் ஏற்கெனவே 2001-ஆம் ஆண்டு நோபல் விருது வென்றவர். ஷார்ப்லெஸ் உள்பட ஐந்து பேர் இதுவரை இரண்டு முறை நோபல் விருது பெற்றிருக்கிறார்கள். 

இயற்பியலுக்கான நோபல் விருது பிரான்ûஸச் சேர்ந்த அலைன் ஆஸ்பெக்ட், அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் கிளாசெர், ஆஸ்திரியாவைச் சேர்ந்த ஆன்டன் சீலிங்கெர் ஆகிய மூவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கிறது. 

இலக்கியத்துக்கான நோபல் விருது பிரெஞ்சு எழுத்தாளர் ஆன்னி எர்னாக்ஸýக்கு வழங்கப்பட்டிருக்கிறது. தொடக்கத்தில் சுயசரிதைகள் சார்ந்த புனைகதைகளை பிரெஞ்சு மொழியில் எழுதி வந்த ஆன்னி எர்னாக்ஸ், தனது வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்களின் அடிப்படையில் எழுதிய 20-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. உணர்வுகளை பிரதிபலிக்கும் சமூகம், குடும்பம் சார்ந்த விஷயங்களைப் பதிவு செய்வதால், ஆன்னி எர்னாக்ஸ் ஐரோப்பாவைக் கடந்து சர்வதேச அளவில் தாக்கம் ஏற்படுத்தினார் என்பதுதான் அவருக்கு நோபல் விருது வழங்குவதற்கான காரணம். 

இந்த ஆண்டுக்கான நோபல் விருதுகளில் குறிப்பிடத்தக்கது பொருளாதாரத்துக்காக வழங்கப்பட்டிருக்கும் விருது. வங்கிகள் குறித்தும், நிதி நெருக்கடி தொடர்பாகவும் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டதற்காக அமெரிக்காவைச் சேர்ந்த பென் பெர்னன்கே, டக்ளஸ் டபிள்யு. டைமண்ட், பிலிப் ஹெச். டிப்விக் ஆகியோருக்கு பொருளாதாரத்துக்கான நோபல் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

2008-ஆம் ஆண்டில் உலக நாடுகள் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தபோது அதிலிருந்து மீள்வதற்கு பெர்னன்கே, டைமண்ட், டிப்விக் ஆகியோரின் ஆராய்ச்சிகள் முக்கியத்துவம் பெற்றன. வங்கிக் கடன்களுக்கு அரசு உத்தரவாதம் அளிப்பதன் மூலம் நிதி நெருக்கடியின் விளைவுகளைத் தடுக்க முடியும் என்பது அவர்களது தேர்ந்த முடிவு. 

நோபல் விருதுகளில் எப்போதுமே அதிக கவனம் பெறுவது அமைதிக்கான விருதுதான். நடப்பாண்டுக்கான அமைதிக்கான நோபல் விருது, பெலாரஸ் மனித உரிமை ஆர்வலர் அலெஸ் பியலியட்ஸ்கிக்கும், ரஷியாவைச் சேர்ந்த குரூப் மெமோரியல் அமைப்புக்கும், உக்ரைனைச் சேர்ந்த மனித சுதந்திர மையத்துக்கும் வழங்கப்படுகிறது. பயங்கரவாதத்துக்கு எதிராகவும், மனித உரிமைகளை பாதுகாக்கவும், சட்டவிதிகளைக் காக்கவும், விருதாளிகள் போராடியதாக விருதுக்குழு தெரிவிக்கிறது. 

அமைதிக்கான நோபல் விருது பெறும் அலெஸ் பியலியட்ஸ்கி, பெலாரஸில் ஜனநாயகத்துக்காகப் போராடுபவர். இவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். ரஷியாவில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்தும், அரசியல் கைதிகளின் நிலை குறித்தும் ஆய்வு நடத்துகிறது "மெமோரியல்' அமைப்பு. உக்ரைனில் ரஷியாவின் போர் விதிமீறல்களுக்கு எதிராகச் செயல்படுகிறது "மனித சுதந்திர மையம்'. 

தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக நோபல் விருது குழு, ரஷிய அரசுக்கும் அதன் அதிபர் விளாதிமீர் புதினுக்கு எதிராகவும் செயல்படுபவர்களுக்கு விருது வழங்குகிறது என்கிற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. அது உண்மையாக இருந்தாலும்கூட, விருது பெறுபவர்கள் அதற்குத் தகுதியானவர்கள் என்பதை மறுத்துவிட முடியாது. 

இந்தியா சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் கடந்துவிட்டன. காலனிய இந்தியாவில் சர் சி.வி. ராமன் இயற்பியலுக்கு விருது பெற்ற பிறகு, இந்தியாவிலிருந்து இந்திய குடிமகனால் அறிவியல் கண்டுபிடிப்புக்காக நோபல் விருது பெற முடியவில்லை என்கிற குறை எப்போதுதான் அகலுமோ தெரியவில்லை...!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.