வக்கிர வன்முறை! ! காதல் பெயரில் நிகழும் மரணங்கள் குறித்த தலையங்கம்

சமூக ஊடகங்களின் தாக்கம் காரணம் என்றாலும்கூட, இளைஞர்கள் மனதில் நல்லொழுக்க சிந்தனைகள் இல்லாமல் இருப்பது இன்னொரு காரணம்.
வக்கிர வன்முறை! ! காதல் பெயரில் நிகழும் மரணங்கள் குறித்த தலையங்கம்

பாலியல் கவர்ச்சி கொலையில் முடியும் வேதனை தரும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. சமூக ஊடகங்களின் தாக்கம் 
காரணம் என்றாலும்கூட, இளைஞர்கள் மனதில் நல்லொழுக்க சிந்தனைகள் இல்லாமல் இருப்பது இன்னொரு காரணம். அனைவருக்கும் கல்வி என்று ஒருபுறம் மார் தட்டிக் கொண்டாலும், தரமான கல்வி வழங்கப்படவில்லை என்பதற்காக நாம் தலைகுனிய வேண்டும். 


பாலியல் கவர்ச்சி என்பது இயற்கை நியதி. மனித இனம் தனது மேம்பட்ட ஆறறிவாலும், மூதாதையர்கள் உருவாக்கித் தந்த ஒழுக்க நெறிகளாலும் பண்படுத்தப்பட்டு பாலியல் கவர்ச்சியை முறைப்
படுத்தி வாழ கற்றுக் கொண்டிருக்கிறது. அறிவியல் வளர்ச்சியும், பொருளாதார மேம்பாடும் மீண்டும் மனித இனத்தை கற்கால 
சிந்தனைக்கு பின்னோக்கி இட்டுச் செல்கின்றனவோ என்கிற 
ஐயப்பாட்டை எழுப்பும் விதத்தில் அமைகின்றன, அவ்வப்போது நடைபெறும் நிகழ்வுகள். 

கல்லூரியில் இரண்டாமாண்டு பயிலும் மாணவி சத்யா (20), சென்னை, பரங்கிமலை ரயில்நிலையத்தில் அக்டோபர் 13 அன்று ஓடும் ரயிலில் தள்ளிக் கொல்லப்பட்டது தமிழகத்தையே உறைய வைத்திருக்கிறது. தன்னைக் காதலிக்க மறுத்த சத்யாவை தனது நிலைபிறழ்ந்த செய்கையால் கொன்றிருக்கிறான் சதீஷ் (23) என்ற இளைஞன். அவர்கள் இருவருமே காவல்துறை பணியாளர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்பது கூடுதல் தகவல். 

கடந்த இரண்டாண்டுகளாகவே மாணவி சத்யாவைக் காதலிப்பதாகக் கூறி தொடர்ந்து தொந்தரவு செய்து வந்திருக்கிறான் சதீஷ். காதலிக்க மறுத்த மாணவியைத் தாக்கியும் இருக்கிறான் அவன். இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டு, இளைஞனை எச்சரித்து அனுப்பி இருக்கின்றனர். இந்த நிலையில் தான், சத்யாவை ஓடும் ரயிலில் தள்ளிக் கொலை செய்திருக்கிறான், ஒருதலைக் காதலால் மிருகமாகிவிட்ட அந்த இளைஞன். தனது மகள் கொல்லப்பட்டதை அறிந்த அவளது தந்தையும் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். 

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு (2016 ஜூலை) தன்னைக் காதலிக்க மறுத்த மென்பெருள் பொறியாளரான சுவாதியை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிக் கொன்றான் ராம்குமார் என்ற இளைஞன். பிறகு சிறையில் அவனும் தற்கொலை செய்துகொண்டான். அந்தக் கொலைக்கு ஜாதிசாயம் பூசி நியாயப்படுத்திய கொடுமையும் அப்போது நிகழ்ந்தது.
தன்னை காதலிக்க மறுத்தாள் என்ற ஒரே காரணத்துக்காக விழுப்புரத்தை அடுத்த வ. பாளையத்தில் சிறுமி நவீனாவை, தீயிட்டு எரித்துக் கொன்றான் செந்தில் என்பவன் (2016 ஜூன்). அவனுக்கு ஆதரவாக பல ஊடக அறிஞர்களே பேசியதையும் நாம் பார்த்தோம். சிறுமி நவீனா மீண்டும் மீண்டும் அவர்களால் எரிக்கப்பட்டாள். 

விருத்தாசலம் அருகே கறிவேப்பிலைக்குறிச்சியில் கல்லூரி மாணவி திலகவதியை கத்தியால் குத்திக் கொன்றான் ஆகாஷ் 
என்பவன் (2019 மே). காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி 
ஸ்வேதாவை தாம்பரம் ரயில் நிலையத்தில் குத்திக் கொன்றான் ராமசந்திரன் என்ற இளைஞன் (2021 செப்டம்பர்). காதலிக்க மறுத்த உறவுப்பெண்ணான கல்லூரி மாணவி கீர்த்தனாவை, புதுவை, சந்நியாசிக்குப்பத்தில் வெட்டிக் கொன்றான் முகேஷ் என்ற இளைஞன் (2022 ஜூலை). இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. 

தமிழகம் மட்டுமல்ல, உலகம் முழுவதிலுமே பெண்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் சிறந்து விளங்குகின்றனர். கடந்த நூற்றாண்டு வரை தங்களுக்கு மறுக்கப்பட்ட ஆண்களுக்கு இணையான கல்வி கிடைப்பதால், அதனை அவர்கள் மிகவும் விரும்பி அரவணைத்துக் கொண்டு முன்னேறுகின்றனர். பெண் விடுதலையும், மகளிர் மேம்பாடும் போற்றப்படும் அதேவேளையில், அவர்களுக்கான பாதுகாப்பு இல்லாமல் இருப்பதன் வெளிப்பாடுதான் அவர்கள் மீதான பாலியல் தாக்குதல்களும், வன்முறைகளும், கொலைகளும். 

"மலரினும் மெல்லிது காமம்' என்று தெய்வப்புலவர் திருவள்ளுவர் கூறியிருக்கிறார். ஆணும் பெண்ணும் ஒருவர்பால் இன்னொருவர் இயல்பாக அன்புகூர்ந்து உருவாவதே மெல்லிய காதல். ஆனால், ஒருதலைக் காதலும், விருப்பமில்லாத பெண்கள் மீதான தாக்குதல்களும் இளைஞர்கள் மத்தியில் ஒருவித வக்கிரம் அதிகரிப்பதை உணர்த்துகின்றன. 
பெண்ணை ஒரு நுகர்பொருளாகக் கருதும் மனப்பான்மையே சத்யாவைக் கொன்ற சதீஷின் வாக்குமூலத்தில் வெளிப்படுகிறது. ""எனக்குக் கிடைக்காதவள் வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது என்பதற்காகவே அவளைக் கொலை செய்தேன்'' என்று அவன் கூறியிருக்கிறான். 
பெண்களின் மீதான பாலியல் தாக்குதல்கள் பெரும்பாலும் 
இத்தகைய வக்கிர சிந்தனையின் வெளிப்பாடாகவே இருக்கிறது. வீட்டில் இறை உணர்வையும், கல்வி நிலையங்களில் ஒழுக்க நெறிகளையும் கற்றுக்கொடுக்காததன் விளைவுதான் இதுபோன்ற வக்கிர சிந்தனைகளின் வெளிப்பாடு என்று சுட்டிக்காட்டினால் அதை பிற்போக்குத்தனம் என்று சிலர் வர்ணிக்க முற்படக் கூடும். 

காதல் திருமணம் என்பது இருபாலரும் ஒருவரையொருவர் முழுமையாகப் புரிந்துகொண்டு முறையான வாழ்க்கையை அமைத்துக் கொள்வது. பாலியல் கவர்ச்சியால் ஏற்படும் காதல், விரைவிலேயே கசந்துவிடும் என்பதை இளைஞர்கள் உணர வேண்டும்; அவர்களுக்கு உணர்த்த வேண்டும். 
திரைப்படங்களும், காட்சி ஊடகங்களும், அறிதிறன்பேசியால் அதிகரித்திருக்கும் சமூக ஊடகங்களும், காதலையும் கவர்ச்சியையும் பரப்புரை செய்து வருவாயைப் பெருக்குவதில் காட்டும் முனைப்பை, முறையான காதலை உணர்த்துவதில் காட்டுவதில்லை. காதலை வியாபாரமாக்கும் ஊடகங்களும் கொலையாளிகள் உருவாவதற்கு காரணம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com