அலட்சியம் ஆபத்து: இருமல் மருந்தால் காம்பியா குழந்தைகள் பலியானது தொடர்பான தலையங்கம்

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நான்கு இருமல் மருந்துகள் சாப்பிட்ட 69 குழந்தைகள் உயிரிழந்ததாக அந்த நாட்டு சுகாதாரத் துறை அமைச்சர் அகமதோ லாமின் சமடே அண்மையில் அறிவித்தது உலகெங்கும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நான்கு இருமல் மருந்துகள் சாப்பிட்ட 69 குழந்தைகள் உயிரிழந்ததாக அந்த நாட்டு சுகாதாரத் துறை அமைச்சர் அகமதோ லாமின் சமடே அண்மையில் அறிவித்தது உலகெங்கும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

ஹரியாணா மாநிலம், சோனிப்பட்டை சேர்ந்த மெய்டென் மருந்தியல் நிறுவனம் தயாரித்த 4 இருமல் மருந்துகள் நச்சுத்தன்மை வாய்ந்தவை என்றும் குழந்தைகளின் இறப்புக்கு காரணமான ரசாயனங்களைக் கொண்டிருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

இந்த நிறுவனம் கடந்த 32 ஆண்டுகளாக 41 நாடுகளுக்கு மருந்துகளை ஏற்றுமதி செய்துவந்துள்ளது. இதுவரை 25 பில்லியன் டாலர் (ஒரு பில்லியன் - ரூ.100 கோடி) அளவுக்கு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது. புரோமெத்தசைன் வாய்வழி மருந்து, கோஃபெக்ஸ்மாலின் பேபி இருமல் சிரப், மகாஃப் பேபி இருமல் சிரப், மேக்ரிப் என் கோல்ட் சிரப் ஆகிய நான்கு மருந்துகளில் உலக சுகாதார அமைப்பு ஆய்வு மேற்கொண்டதில் இவற்றில் டை எத்திலீன் கிளைக்கால், எத்திலீன் கிளைக்கால் ஆகிய ரசாயனங்கள் ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

டை எத்திலீன் கிளைக்கால், எத்திலீன் கிளைக்கால் ஆகியவற்றால் வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, சிறுநீர் கழிப்பதில் சிரமம், தலைவலி, சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்படுவதன் மூலம் உயிரிழப்பு நேரக்கூடும் என உலக சுகாதார அமைப்பின் வெளியீடு தெரிவிக்கிறது.

இதையடுத்து, மெய்டென் நிறுவனத்தில் மருந்து தயாரிப்புக்கு மத்திய, மாநில அரசுகள் தற்காலிகத் தடை விதித்துள்ளன. இது குறித்து விசாரிக்க மருந்துகளுக்கான மத்திய நிலைக்குழு துணைத் தலைவர் டாக்டர் ஒய்.கே.குப்தா தலைமையில் 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. 

டை எத்திலீன் கிளைக்கால் காரணமான இறப்பு என்பது புதிதல்ல. இந்தியா, அமெரிக்கா, வங்கதேசம், நைஜீரியா, பனாமா ஆகிய நாடுகளில் டை எத்திலீன் கிளைக்கால் கலந்த மருந்து உட்கொண்டதால் இறப்புகள் ஏற்கெனவே பதிவாகி உள்ளன.

ஜம்மு யூனியன் பிரதேசம், உதம்பூர் மாவட்டத்தில் கடந்த 2020-ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருமல் மருந்து உட்கொண்ட 12 குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். ஹிமாசல் பிரதேசத்தைச் சேர்ந்த மருந்து நிறுவனம் தயாரித்த அந்த இருமல் மருந்தில் டை எத்திலீன் கிளைக்கால் அதிகம் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று, 1986-இல் மும்பையில் 14 பேரும், 1998-இல் புது தில்லி அருகே உள்ள குருகிராமில் 36 பேரும் உயிரிழந்தனர்.

மெய்டென் நிறுவனம் தரக்குறைவான மருந்துகளை விநியோகித்துள்ளது என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாவது இது முதல் முறையல்ல. கடந்த சில ஆண்டுகளில், குறைந்தது 5 முறை கேரளத்தில் தரக் குறைவான மருந்துகளை விநியோகித்ததாக இந்த நிறுவனம் மீது குற்றம்சாட்டப்பட்டது. பிகாரில் கடந்த 2011-ஆம் ஆண்டு கருப்புப் பட்டியலில் இந்த நிறுவனம் வைக்கப்பட்டது. தரக் கட்டுப்பாடு, மருந்துக் கட்டுப்பாடு விதிகளை மீறியதாக வியட்நாம் அரசால் கடந்த 2014-இல் கருப்புப் பட்டியலில் வைக்கப்பட்ட 66 இந்திய நிறுவனங்களில் மெய்டென் நிறுவனமும் ஒன்று. 

அளவு ரீதியாகப் பார்த்தால், மருந்துப் பொருள்கள் தொடர்பான தொழிலில் உலகில் 3-ஆவது இடத்தில் இந்தியா உள்ளது. ஆண்டுக்கு சுமார் 40 பில்லியன் டாலர் புழங்கும் துறையாக இது உள்ளது. 200-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மருந்துகளை இந்தியா ஏற்றுமதி செய்கிறது. 2021-22-இல் இந்திய மருந்து நிறுவனங்கள் 24.6 பில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்துள்ளன. இந்திய மருந்துகளைப் பெறுவதில் 3.83 பில்லியன் டாலர் மதிப்புடன் ஆப்பிரிக்கா 3-ஆவது இடத்தில் உள்ளது.

மருந்துப் பொருள்கள் தயாரிப்பில் - லஞ்சம், ஊழல் காரணமாக - முறையான பரிசோதனைகள் நடைபெறுவதில்லை. மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள், மருந்துகளுக்கு தரச் சான்று அளிக்கும் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஓ) அதிகாரிகள் இதற்குப் பொறுப்பாளியாக்கப்பட வேண்டும். குழந்தைகள் இறந்தாலும்கூட அந்த சம்பவத்தை மூடி மறைக்கத்தான் முயல்கிறார்களே தவிர, பொறுப்பானவர்கள் யாரும் தண்டனை பெற்றதாகத் தெரியவில்லை.

செலவினத்தைக் குறைக்க புரொபிலின் கிளைக்காலுக்கு பதிலாக டை எத்திலீன் கிளைக்கால், எத்திலீன் கிளைக்கால் ஆகிய ரசாயனங்களை மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் பயன்படுத்தக் கூடும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். அமெரிக்காவில் சோதனை தொடர்பான விவரங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் வெளியிடுகின்றனர். மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் ஆண்டுதோறும் சோதனை நடத்தப்பட வேண்டும் என்று இந்திய சட்டமும் வலியுறுத்துகிறது. ஆனால், சோதனை தொடர்பான அறிக்கைகள் இந்தியாவில் வெளியிடப்படுவதில்லை. 

2022-23-ஆம் ஆண்டில் 27.4 பில்லியன் டாலர் மதிப்பில் மருந்துகளை ஏற்றுமதி செய்ய இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில் காம்பியா சம்பவம் மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தக்கூடும். இந்த நிலை மாற வேண்டுமெனில், மருந்துத் தயாரிப்பு, அனுமதி, விநியோகம் தொடர்பான கொள்கைகளை முனைப்புடன் அமல்படுத்த வேண்டும்.

கொவைட் 19 தீநுண்மி பரவியபோது பொருளாதாரத்தில் பின்தங்கிய பல நாடுகளுக்கு இந்தியா இலவசமாக தடுப்பூசி வழங்கியது. அந்த நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் காம்பியா சம்பவம் இந்திய மருந்துத் தயாரிப்பு துறைக்கு கரும்புள்ளியாக அமைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com