அதிவேக ஐந்தாம் தலைமுறை: 5ஜி தொலைத்தொடா்பு அலைக்கற்றை குறித்த தலையங்கம்

பண்டிகைக் காலத்தை வரவேற்கும் விதமாக இந்தியாவில் ஐந்தாம் தலைமுறை தொலைத்தொடா்பு அலைக்கற்றை (5ஜி) அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.
அதிவேக ஐந்தாம் தலைமுறை: 5ஜி தொலைத்தொடா்பு அலைக்கற்றை குறித்த தலையங்கம்

பண்டிகைக் காலத்தை வரவேற்கும் விதமாக இந்தியாவில் ஐந்தாம் தலைமுறை தொலைத்தொடா்பு அலைக்கற்றை (5ஜி) அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. பிரதமா் நரேந்திர மோடியால் அக்டோபா் 1-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் 5ஜி சேவை, தொலைத்தொடா்பில் மட்டுமல்லாமல் மக்களின் அன்றாட வாழ்க்கையிலும் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிா்பாா்க்கலாம்.

முதல் கட்டமாக 5ஜி சேவை சில முக்கிய நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. முதல் சுற்றில் அகமதாபாத், பெங்களூரு, சண்டீகா், சென்னை, தில்லி, காந்திநகா், குருகிராம், ஹைதராபாத், ஜாம் நகா், கொல்கத்தா, லக்னௌ, மும்பை, புணே, சிலிகுரி, வாராணசி ஆகிய நகரங்கள் இணைக்கப்பட்டிருக்கின்றன. இந்தியா மட்டுமல்ல, 5ஜி சேவையை அறிமுகப்படுத்தி இருக்கும் உலகிலுள்ள 18 நாடுகளுமே படிப்படியாகத்தான் 4ஜி-யிலிருந்து 5ஜி சேவைக்கு மாறியிருக்கின்றன.

இந்தப் புதிய தொழில்நுட்பம் தற்போது இருக்கும் 4ஜி சேவையைவிட 600 மடங்கு அதிவேகமானது என்பது மட்டுமல்லாமல், ஒரு சதுர கி.மீட்டரில் 4ஜி சேவையைவிட 10 மடங்கு அதிகமான உபகரணங்களுக்கு பயன்படக்கூடியது என்பதுதான் சிறப்பு. ஏா்டெல், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனங்கள் களமிறங்கிவிட்டன. விரைவிலேயே வோடோஃபோன் - ஐடியாவும் 5ஜி சேவையைத் தொடங்க இருக்கிறது.

வருங்காலத்தில் விலைமதிப்பில்லாததாக இருக்கப்போவது ‘நேரம்’. அதனால்தான் நேரத்தை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள மிக அதிகமான ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன. தங்க நாற்கரச் சாலை தேசத்தை இணைத்தது மட்டுமல்லாமல், மக்களுக்கு இடையேயான தூரத்தையும் குறைத்தது. இப்போது 5ஜி அலைக்கற்றை சேவை, அவா்களுக்கு மிக முக்கியமானதான நேரத்தைக் குறைக்க உதவப் போகிறது. தூரமும், நேரமும் ஒரே நேரத்தில் குறையும்போது அதனால் ஏற்படும் வளா்ச்சியின் வேகம் அளப்பரியதாக இருக்கக் கூடும்.

2ஜி சேவை தொடங்கியது முதல் இந்தியாவில் செல்லிடப்பேசி புரட்சி ஏற்பட்டது. தெருவோர வியாபாரிகள், கூலித் தொழிலாளா்கள் உள்பட சாமானியா்கள் அனைவரின் கையிலும் செல்லிடப்பேசி வைத்திருக்கும் நிலைமை உருவானது. அடுத்தகட்டமாக அது 3ஜி, 4ஜி சேவைகளுக்கு மாறியதைத் தொடா்ந்து, ஆன்லைன் சேவைகளுக்கான கதவு திறக்கப்பட்டு இன்று மின் கட்டணம், வரி செலுத்துதல், ரயில் - பேருந்து பயணச் சீட்டுகள், திரைப்பட டிக்கெட்டுகள் பெறுதல் வரை ஆன்லைன் சேவை பயன்படுத்தப்படுகிறது.

ஆன்லைன் வா்த்தகம் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்றால், அரசின் மானியங்கள் நேரடியாக பயனாளிகளைச் சென்றடையவும் வழிகோலப்பட்டிருக்கிறது. பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி, மோட்டாா் வாகனம், செய்தித் தொடா்பு என்று அனைத்துத் துறைகளிலும் இணையம் மூலம் புரட்சியை ஏற்படுத்திய 4ஜி சேவையின் பயன்கள் நாம் அறியாததல்ல. குறிப்பாக, கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்று காலத்தின் ஊரடங்கின்போதும், அதற்குப் பிறகும் அன்றாட வாழ்க்கை பாதிக்காமலும் குழந்தைகளின் கல்வி தடை படாமலும் இருந்ததற்கு மனித இனம் 4ஜி தொழில்நுட்பத்துக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறது.

5ஜி சேவையின் அறிமுகத்துடன் இணையத்தின் வேகம் 10 மடங்கு அதிகரிக்கப்போகிறது. ‘அல்ட்ரா ஹைஸ்பீட் இன்டா்நெட் கனெக்ஷன்’ என்கிற அதிவேக இணைய சேவை 5ஜி மூலம் வழங்கப்பட இருக்கிறது. ஆறு ஆண்டு 4ஜி சேவையில் நமது வாழ்க்கையில் விடியோ தொழில்நுட்பம் மாற்றம் ஏற்படுத்தியது என்றால், 5ஜி சேவைக்குப் பிறகு தானியங்கி உபகரணங்களும், ரோபோக்களும், இணையம் சாா்ந்த மருத்துவ சேவைகளும் மிகப் பெரிய பங்களிப்பை வழங்க இருக்கின்றன.

அதிவேக இணைய சேவையின் பயன்பாடு நம்மை மிரள வைக்கும். 2 ஜிபி உள்ள திரைப்படத்தை பதிவிறக்கம் செய்ய இப்போது சில நிமிடங்கள் பிடிக்கிறது என்றால், 5ஜி சேவை மூலம் சில நொடிகள் போதும். நாம் பயன்படுத்தும் பல உபகரணங்கள் இனிமேல் இணைய வழியாகும். வீட்டின் கதவிலிருந்து சமையலறை வரை இணையத்தின் மூலம் இப்போதே கண்காணிக்க முடியும் என்றால், 5ஜி சேவை என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை கற்பனைகூட செய்து பாா்க்க முடியாது.

மருத்துவம், கல்வி உள்ளிட்ட துறைகளில் தூரமும் நேரமும் இனிமேல் பிரச்னையாக இருக்காது. விளையாட்டுத் துறையில் புதிய பல மாற்றங்கள் ஏற்படும். குறிப்பாக, பாதுகாப்புத் துறையில் துல்லியமாகப் பல நடவடிக்கைகளை மேற்கொள்வது 5ஜி சேவை மூலம் சாத்தியமாகும். கண்காணிப்பு, கட்டுப்பாடு, பாதுகாப்பு மூன்றிலும் 5ஜி சேவை பேருதவியாக இருக்கப் போகிறது.

இதுவரை 5ஜி சேவை வழங்குவோா் அதற்கான கட்டணம் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை என்றாலும், பெரிய அளவிலான மாற்றம் இருக்க வழியில்லை. அதிவேக பதிவிறக்கங்கள் மூலம் கூடுதல் கட்டணம் கிடைக்கும் என்பதால் நுகா்வோரை எந்தவிதத்திலும் பாதிக்க விரும்பமாட்டாா்கள். இப்போதிருக்கும் கட்டணத்தின் மூலமும் சிம்காா்டு மூலமும் 5ஜி சேவையைப் பெற முடியும். ஏற்கெனவே சந்தையில் உள்ள அறிதிறன்பேசிகள் 5ஜி சேவைக்கு உகந்தவை என்பதால் அதுவும் பிரச்னையாக இருக்கப் போவதில்லை.

இந்தியா போன்ற மக்கள்தொகை அதிகமுள்ள நாட்டில் 5ஜி சேவையால் சில பிரச்னைகளை நேரிடலாம். அதிக ‘பேண்ட்வித்’ எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாகக் கிடைப்பதில் பிரச்னைகள் எழக்கூடும். இணைய வழி மோசடிகள், குற்றங்கள் அதிகரிப்பதை தடுப்பதற்கான வழிமுறைகளை முன்கூட்டியே செய்யாமல் போனால் ஆபத்து என்று எச்சரிக்கவும் தோன்றுகிறது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com