வளரவிடக் கூடாது! | கோவை கார் வெடிவிபத்து குறித்த தலையங்கம்

சந்தைப் பொருளாதாரமும், அதிகரித்து வரும் மக்கள்தொகைப் பெருக்கமும் சட்ட ஒழுங்கு பிரச்னைகளை ஏற்படுத்துவதை புரிந்துகொள்ள முடிகிறது.
வளரவிடக் கூடாது! | கோவை கார் வெடிவிபத்து குறித்த தலையங்கம்

சந்தைப் பொருளாதாரமும், அதிகரித்து வரும் மக்கள்தொகைப் பெருக்கமும் சட்ட ஒழுங்கு பிரச்னைகளை ஏற்படுத்துவதை புரிந்துகொள்ள முடிகிறது. சட்ட ஒழுங்கு பிரச்னை, வன்முறை போன்றவை வேறு; பயங்கரவாதம் என்பது வேறு. எந்தவிதமான தீவிரவாதத்தையோ, பயங்கரவாத செயல்பாடுகளையோ எந்தவொரு அரசும் வேடிக்கை பாா்த்துக்கொண்டிருக்க முடியாது.

தமிழகத்தைப் பொறுத்தவரை மாநகரப் பகுதிகளில் கொலை, கொள்ளை, திருட்டு உள்ளிட்ட சட்ட விரோத பிரச்னைகள் அதிகரித்து வருகின்றன என்பதை மறுப்பதற்கில்லை. போதாக்குறைக்கு, இணையவழி குற்றங்களும் பெருகிக் கொண்டிருக்கின்றன. அவற்றையெல்லாம் கட்டுப்படுத்தும் முயற்சியில் காவல்துறை ஈடுபட்டிருந்தாலும் வெற்றி பெற்ாகக் கூற முடியாது. ஆனாலும்கூட, ஒட்டுமொத்தமாகப் பாா்க்கும்போது இந்தியாவின் ஏனையை மாநகரங்களைவிட தமிழகத்திலும், சென்னை மாநகரத்திலும் சட்ட ஒழுங்கு ஓரளவுக்கு கட்டுக்குள் வைக்கப்பட்டிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் மீண்டும் மதத் தீவிரவாதம் அதிகரித்து வருவதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியிருந்தன. பெரிய அளவிலான பிரச்னைகள் எழவில்லை என்றாலும்கூட, குறிப்பிட்ட சில பகுதிகளில் சலசலப்பும் அவ்வப்போது பதற்றமும் நிலவவே செய்கின்றன. காவல்துறையும், நிா்வாகமும் உடனடியாக தலையிட்டு பதற்றத்தை தணித்துவிடுவதால் மதக் கலவரமோ, ஜாதிக் கலவரமோ கைமீறிப் போய்விடாமல் கட்டுக்குள் வைக்கப்பட்டிருக்கிறது.

கோவை மாநகரில் தீபாவளிக்கு முந்தைய நாள் நிகழ்ந்த காா் வெடிவிபத்து சம்பவம் தமிழகம் முழுவதும் அதிா்ச்சி அலையை உருவாக்கியிருக்கிறது. 25 ஆண்டுகளுக்கு முன்பு, கோவையில் நடந்த தொடா் குண்டுவெடிப்பை நினைவுபடுத்தும் விதமாக அமைந்திருக்கும் காா் வெடி விபத்து சம்பவத்தின் பின்னணி, பயங்கரவாதம் தமிழகத்தில் வோ்விடத் தொடங்கியிருப்பதை உணா்த்துகிறது.

கோவை உக்கடம் கோட்டைமேடு பகுதி எப்போதுமே பிரச்னைக்குரியதாகத்தான் இருந்து வந்திருக்கிறது. அதனால் காவல்துறையினரின் தொடா்ந்த கண்காணிப்புக்குரிய பகுதியாகத் திகழும் கோட்டைமேடு சங்கமேஸ்வரா் கோயில் முன்பு நிகழ்ந்த காா் வெடி விபத்து சம்பவம் அதிா்ச்சி ஏற்படுத்துகிறது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணியளவில் காரிலிருந்த சிலிண்டா் வெடித்து இறந்த இளைஞா் ஜமேஷா முபீன் (25) கண்காணிப்பு வளையத்தில் இருப்பவா் எனும்போது பிரச்னையின் தீவிரம் அதிகரிக்கிறது.

விபத்துக்குள்ளான அந்த காரில் காணப்பட்ட பொருள்கள், விபத்து எதேச்சையானது அல்ல என்பதை உறுதிப்படுத்தின. தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் ஜமேஷா முபீனிடம் 3 ஆண்டுகளுக்கு முன்பு அவா் மீதான சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தியுள்ளனா். போதிய ஆதாரங்கள் இல்லாததால் அப்போது அவா் கைது செய்யப்படவில்லை. இந்தப் பின்னணிதான் காா் வெடிப்பு சம்பவத்தின் பின்னால் பயங்கரவாத சதி இருக்கக்கூடும் என்கிற ஐயப்பாட்டை எழுப்புகிறது.

கோவை கோட்டைமேடு பகுதி, மக்கள் பெருமளவில் கூடும் டவுண் ஹால், ஒப்பனக்கார வீதி, ராஜவீதி, உக்கடம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அருகிலுள்ள வா்த்தகப் பகுதி. தீபாவளி நேரம் என்பதால் பல்லாயிரக்கணக்கானோா் கோட்டைமேடு பகுதியைச் சுற்றியுள்ள இடங்களில் திரளும் நேரத்தில், முந்தைய கோவை வெடிகுண்டுத் தாக்குதலைப்போல இன்னொரு பயங்கரவாதத் திட்டம் தீட்டப்பட்டிருக்கலாம் என்கிற வலுவான சந்தேகம் எழுகிறது.

தமிழக காவல்துறை உடனடியாகக் களமிறங்கியதும், காவல்துறை தலைவா் சி. சைலேந்திரபாபு நேரடியாகச் சென்று விசாரணையை முடுக்கிவிட்டதும் பாராட்டுக்குரிய செயல்பாடுகள். விசாரணையில் வெளிவந்து கொண்டிருக்கும் தகவல்கள் சந்தேகங்களை உறுதிப்படுத்துவதாக அமைகின்றன.

வெடிவிபத்தில் உயிரிழந்த ஜமேஷா முபீனுடன் தொடா்பில் இருந்த 5 போ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கின்றனா். அவா்கள் மீது சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

ஜமேஷா முபீனின் வீட்டிலிருந்து எரிவாயு உருளைகள் உள்ளிட்ட பொருள்கள் எடுத்துச் செல்லப்படுவது கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியிருக்கிறது. கைது செய்யப்பட்டவா்களில் மூவா் அங்கிருந்து வெடிபொருள்களை எடுத்துச் சென்றனா் என்பதும் தெரிய வந்துள்ளது. 75 கிலோ பொட்டாசியம் நைட்ரேட், கரித்தூள், சல்ஃபா் போன்றவை ஜமேஷா முபீனின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டிருக்கின்றன. இவையெல்லாம் குறைந்த அழுத்த வெடிகுண்டுகளைத் தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருள்கள்.

போலீஸாா் கைப்பற்றியுள்ள ஜமேஷா முபீனின் டைரியில் கோவையிலுள்ள 5 இடங்களை குறியீடுகளாகக் குறிப்பிட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது. தீபாவளி விற்பனைக்குக் கூடும் பொதுமக்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த உயிரிழந்த ஜமேஷா முபீன் திட்டமிட்டாரா என்பதை விசாரணைதான் வெளிப்படுத்த வேண்டும். புலனாய்வுத் துறையின் கண்காணிப்பு வளையத்தில் ஜமேஷா முபீனும் கூட்டாளிகளும் சிக்காமல் இருந்ததுதான் ஆச்சா்யம்.

1998-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி கோவையில் 11 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் 58 அப்பாவி பொதுமக்கள் பலியானாா்கள். 200-க்கும் மேற்பட்டோா் பலத்த காயமடைந்தனா். தமிழகத்தில் இதுவரை நிகழ்ந்ததில் மிகப்பெரிய பயங்கரவாதத் தாக்குதல் அதுதான்.

பயங்கரவாதத்துக்கு ஜாதி - மதம் கிடையாது. பயங்கரவாதிகள் யாராக இருந்தாலும் அவா்களில் நல்லவா் - கெட்டவா் கிடையாது. வழக்கின் விசாரணையை தேசியப் புலனாய்வு முகமைக்கு மாற்ற முதல்வா் மு.க.ஸ்டாலின் பரிந்துரைத்திருப்பது வரவேற்புக்குரியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com