பாரதத்தின் பெருமிதம்! | "ஐஎன்எஸ் விக்ராந்த்' போர்க்கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது குறித்த தலையங்கம்

ஐஎன்எஸ் விக்ராந்த்
ஐஎன்எஸ் விக்ராந்த்

ஒவ்வோர் இந்தியனும் பெருமிதம் கொள்ள வேண்டிய தருணம் இது. முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்ட முதல் விமானம் தாங்கிப் போர்க்கப்பல் "ஐஎன்எஸ் விக்ராந்த்' பிரதமரால் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது.
262.5 மீட்டர் நீளம், 62.5 மீட்டர் அகலம், 59 மீட்டர் உயரம், சுமார் 43,000 டன் எடை கொண்ட இந்த பிரம்மாண்டமான விமானம் தாங்கிப் போர்க்கப்பல், கொச்சி கப்பல் கட்டும் நிறுவனத்தால் வெற்றிகரமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. 333 திமிங்கிலங்களின் நீளத்தைக் கொண்டது இந்த "ஐஎன்எஸ் விக்ராந்த்'.
இதன் 76% பாகங்களும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை. 23,000 டன் உருக்கு, 2,500 கி.மீ. நீளம் வரும் அளவிலான மின்சார கேபிள்கள், 150 கி.மீ. நீளம் வரக்கூடிய அளவிலான குழாய்கள், 2,000 வால்வுகள் தொடங்கிய பெரும்பாலான பாகங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. டெல், ஜிஆர்எஸ்இ, கெல்ட்ரான், கிர்லோஸ்கர், எல் அண்ட் டி உள்ளிட்ட 100-க்கும் அதிகமான சிறிய, பெரிய நிறுவனங்களின் பங்களிப்பு "ஐஎன்எஸ் விக்ராந்த்'தில் இருக்கிறது.
விக்ராந்த் போர்க்கப்பலுக்கான ரூ.23,000 கோடி செலவில் 80% முதல் 85% வரை இந்திய நிறுவனங்களுக்கே சென்றிருப்பதால், அதன் மூலம் பொருளாதாரமும் பயனடைந்திருக்கிறது. நமது பொறியியல் நிபுணர்களின் கப்பல் கட்டுமானத் திறன் மேம்பாட்டுக்கு உதவியிருப்பது மட்டுமல்லாமல், வருங்காலத்தில் பிற நாடுகளுக்கான விமானம்தாங்கி போர்க்கப்பல்களைத் தயாரித்துக் கொடுக்கும் ஆற்றலையும் இதனால் இந்தியா பெற்றிருக்கிறது.
88 மெகா வாட் என்ஜின் திறன் கொண்ட "ஐஎன்எஸ் விக்ராந்த்', மணிக்கு 28 கடல் மைல் வேகத்தில் (அதாவது சுமார் 52 கி.மீ.) பயணிக்கக் கூடியது. ஒரு முறை எரிபொருள் நிரப்பினால், சுமார் 7,500 கடல் மைல் தொலைவு செல்லக்கூடியது. மிக்-29கே, கமோவ் 31 போர் விமானங்களையும், எம்எச் 60ஆர் உள்ளிட்ட ஹெலிகாப்டர்
களையும் இயக்கவல்ல இந்தக் போர்க்கப்பலில் 30 போர் விமானங்களை நிறுத்த முடியும். 18 அடுக்குகள் கொண்ட இந்தக் கடல் பிரம்மாண்டத்தில் 2,300 அறைகள் இருக்கின்றன.
இந்தியா சுதந்திரம் அடைந்த 75 ஆண்டுகளில் இதுவரை நமது கடற்படைக்கு மூன்று விமானம் தாங்கிக் கப்பல்கள்தான் வாங்க முடிந்திருக்கிறது. அவற்றில் செயல்பாட்டில் உள்ளது சோவியத் யூனியனிலிருந்து பெறப்பட்ட "ஐஎன்எஸ் விக்ரமாதித்யா' மட்டும்தான். "ஐஎன்எஸ் விராட்'டைவிட இரண்டு மடங்கு பெரிதான "ஐஎன்எஸ் விக்ரமாதித்யா'வைவிட இப்போது இந்தியாவில் தயாரிக்கப்பட்டிருக்கும் "ஐஎன்எஸ் விக்ராந்த்' அதிநவீன தொழில்நுட்பங்களுடன் உருவாக்கப்பட்டிருக்கிறது.
விடுதலை பெற்றவுடன் நாம் வாங்கிய முதலாவது போர்க்கப்பலுக்கு "ஐஎன்எஸ் விக்ராந்த்' என்றுதான் பெயரிடப்பட்டது. 1942-இல் பிரிட்டன் அந்தக் கப்பலை நிர்மாணிக்கத் தொடங்கியது. இரண்டாம் உலகப்போர் முடிந்துவிட்டதால், அதன் நிர்மாணம் பாதியில் கைவிடப்பட்டது. "எச்எம்எஸ் ஹெர்குலீஸ்' என்கிற பெயருடைய அந்தக் கப்பலை அரைகுறை நிலையில் 1957-இல் வாங்கி, அயர்லாந்தில் முழுமையாக நிர்மாணித்து, 1961-இல் "ஐஎன்எஸ் விக்ராந்த்' என்கிற பெயரில் அது இந்திய கடற்படையில் இணைந்தது.
1997-இல் முதலாவது "ஐஎன்எஸ் விக்ராந்த்' ஓய்வுபெற்றபோது அதற்கு பதிலாக இந்தியாவிலேயே இன்னொரு போர்க்கப்பலை நிர்மாணிக்க வேண்டும் என்கிற முடிவு எடுக்கப்பட்டது. 1999-இல் அன்றைய வாஜ்பாய் அரசால் முடிவெடுக்கப்பட்டு, 2002- 03-இல் கப்பல் கட்டும் திட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. கால் நூற்றாண்டுக்குப் பிறகு இப்போது "ஐஎன்எஸ் விக்ராந்த்' புனர்ஜென்மம் எடுத்திருக்கிறது.
இதைவிடப் பெரிய அளவிலான போர்க்கப்பல்களை நான்கு ஆண்டுகளில் சீனா கட்டி முடிக்கிறது என்பதையும், "ஐஎன்எஸ் விக்ராந்த்'தின் அனுமதிக்கும், அர்ப்பணிப்புக்கும் இடையே 23 ஆண்டு இடைவெளி இருக்கிறது என்பதையும் நாம் எண்ணிப் பார்க்கும்போது நமது பலவீனம் தெரிகிறது.
உலகில் போர்க்கப்பல்கள் வைத்திருக்கும் நாடுகள் 10 மட்டுமே. அமெரிக்கா (11), சீனா (3), பிரிட்டன் (2), இந்தியா (2), பிரேஸில் (1), பிரான்ஸ் (1), இத்தாலி (1), ஸ்பெயின் (1), ரஷியா (1), தாய்லாந்து (1). அவற்றில் சொந்தமாக போர்க்கப்பலை நிர்மாணிக்கும் ஆற்றல் பெற்ற ஆறாவது நாடாக இந்தியா உயர்ந்திருக்கிறது. அமெரிக்கா, பிரிட்டன், ரஷியா, பிரான்ஸ், சீனா ஆகியவை ஏனைய நாடுகள்.
இந்தோ - பசிபிக் கடல் பகுதியில் தனது மேலதிகாரத்தை நிலைநாட்டத் துடிக்கிறது சீனா. அதன் போர்க்கப்பல்கள் அடிக்கடி இந்தியாவைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் வளையவரத் தொடங்கியிருக்கின்றன. இந்தப் பின்னணியில் எந்த சவாலையும் எதிர்கொள்ளும் நிலையில் இருந்தாக வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு இருக்கிறது.
சீனாவிடம் 355 போர்க்கப்பல்கள் இருக்கின்றன. 2030-க்குள் 460-ஆக அதை அதிகரிக்கத் திட்டமிடுகிறது. அடுத்த 10 ஆண்டுகளில் இரண்டு விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் அல்லாமல், மேலும் 40 போர்க்கப்பல்களை இணைத்து 170 போர்க்கப்பல்கள் கொண்ட கடற்படையை உருவாக்கும் முயற்சியில் நரேந்திர மோடி அரசு முனைப்பு காட்டுவதன் பின்னணி இதுதான்.
"ஐஎன்எஸ் விக்ராந்த்' என்கிற அதிநவீன விமானம் தாங்கி போர்க்கப்பல் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டிருப்பது இந்தியாவின் தன்னம்பிக்கையை மட்டுமல்ல, தொழில்நுட்ப தேர்ச்சியையும் உலகுக்கு பறைசாற்றுகிறது.

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com