போதும் பரிசோதனைகள்! | ஆசிய கோப்பை தோல்வி குறித்த தலையங்கம்

போதும் பரிசோதனைகள்! | ஆசிய கோப்பை தோல்வி குறித்த தலையங்கம்

 ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் எதிர்பார்ப்புக்கு மாறாக இலங்கை அணி வெற்றிவாகை சூடியுள்ளது. பலம் வாய்ந்த இந்தியா, பாகிஸ்தான் அணிகளை வீழ்த்தி 6-ஆவது முறையாக ஆசிய கோப்பையை அந்த அணி கைப்பற்றியிருக்கிறது.
 டி20 கிரிக்கெட்டின் சிறப்பே இதுதான். வலிமையான அணிகள் என்றில்லாமல் போட்டி நடைபெறும் நாளில் எந்த அணி சிறப்பாக விளையாடுகிறதோ அந்த அணி வெற்றி பெறும் என்பதற்கு இலங்கை அணியின் வெற்றி ஓர் எடுத்துக்காட்டு. இந்தத் தொடரை ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தோல்வியுடன் இலங்கை தொடங்கினாலும், அடுத்தடுத்த போட்டிகளில் ஓர் அணியாக இலங்கை வீரர்கள் ஒருங்கிணைந்து விளையாடி வெற்றியை வசப்படுத்தியுள்ளனர். தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்தியா, "சூப்பர் 4' சுற்றில் தோல்வியடைந்து இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறாமல் வெளியேறியது.
 2021-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை போட்டித் தொடரில் விராட் கோலி தலைமையில் இதே போல் நட்சத்திரப் பட்டாளத்துடன் களமிறங்கிய இந்திய அணி, முதல் சுற்றிலேயே வெளியேற நேர்ந்தது. அதன் பின்னர், புதிய கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டது முதல் சில பரிசோதனை முயற்சிகள் தொடர்கின்றன. அதன்படி, 2021-இல் 48 வீரர்களுக்கும், 2022-இல் சுமார் 40 பேருக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
 2021 தொடக்கம் முதல் இதுவரை 74 சர்வதேச ஆட்டங்களில் இந்திய அணி விளையாடியிருக்கும் நிலையில், அறிமுக வீரர்கள் 54 பேர், "ப்ளேயிங் லெவனில்' வாய்ப்புப் பெற்றனர். டி20 அணியைப் பொறுத்தவரை 11 வீரர்கள் அறிமுகமாயினர். அதே போல் நிகழாண்டில் இதுவரை இந்திய அணி நிர்வாகம் ஒரு நாள் அணி, டெஸ்ட் அணி, டி20 அணி ஆகிய மூன்று வகை அணிகளிலும் 7 கேப்டன்களை களமிறக்கியது.
 இந்தப் பரிசோதனை முயற்சியின் மூலம் திறமையான இளம் வீரர்களை அடையாளம் கண்டறிய முடிந்துள்ளது. மூன்று வகை கிரிக்கெட் ஆட்டங்களுக்கும் தனித்தனி அணியைத் தேர்வு செய்யும் அளவுக்கு வீரர்கள் உள்ளனர். இருப்பினும், ஆசிய கோப்பையை பொறுத்தவரை பரிசோதனை முயற்சி தோல்வியில்தான் முடிந்துள்ளது.
 நடப்பு ஆசிய கோப்பை சாம்பியன், டி20 அணி தரவரிசையில் முதலிடம், ஏராளமான நட்சத்திர வீரர்கள் என கோப்பையை வெல்லும் அணியாகக் கணிக்கப்பட்ட இந்திய அணி, தனது சுமாரான ஆட்டத்தால் ஆசிய கோப்பையைத் தக்கவைக்க முடியாமல் போனது இந்திய ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் விரைவில் தொடங்க இருக்கும் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் ஆட்டத் திறன் எவ்வாறு இருக்கப் போகிறதோ என்கிற கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
 ஆசிய கோப்பை தொடரில் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் தவறான முடிவுகள், ஆட்டக்காரர்களைத் தேர்வு செய்ததில் ஏற்பட்ட குழப்பம் எனத் தோல்விக்கு பல்வேறு காரணங்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன. பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில், ஆரம்ப ஓவர்களை அற்புதமாக வீசிய புவனேஸ்வர் குமார், இறுதிக்கட்ட ஓவர்களில் அதிக ரன்களை கொடுத்ததால் நாம் தோல்வி அடைந்தோம். அதிலிருந்து பாடம் கற்காத ரோஹித் சர்மா, இலங்கைக்கு எதிரான ஆட்டத்திலும் 19-ஆவது ஓவரை புவனேஸ்வர் குமாருக்கு கொடுத்தார். அந்த ஓவரில் எடுக்கப்பட்ட 14 ரன்தான் இந்திய அணியின் வெற்றி பறிபோனதற்கு முக்கியக் காரணம்.
 இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு அடுத்தபடியாக டி20 போட்டிகளில் சிறந்த ஃபினிஷர் என்கிற பெயரைப் பெற்றிருப்பவர் தமிழகத்தின் தினேஷ் கார்த்திக். கடந்த ஐபிஎல் போட்டித் தொடரில் தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் மீண்டும் இந்திய அணியில் இடம்பிடித்தார். ஆசிய கோப்பை அணியிலும் இடம்பிடித்த தினேஷ் கார்த்திக்கை முக்கியமான சூப்பர் 4 சுற்றில் ரோஹித் சர்மா களமிறக்கவில்லை.
 பாகிஸ்தான், இலங்கைக்கு எதிரான ஆட்டங்களின்போது கடைசி நான்கு ஓவர்களில் இந்திய அணி போதுமான ரன்களை எடுக்க முடியவில்லை. தினேஷ் கார்த்திக் போன்ற ஃபினிஷர் இருந்திருந்தால் கூடுதலாக சுமார் 20 ரன்கள் வரை எடுத்திருக்க முடியும் என அணி நிர்வாகத்துக்கு ஏனோ தெரியாமல் போனது. தினேஷ் கார்த்திக்குக்கு பதிலாக களமிறக்கப்பட்ட ரிஷப் ஃபந்த் சிறப்பாக விளையாட வில்லை.
 அதேபோல் ரவீந்திர ஜடேஜாவுக்கு மாற்றாக ஆல் ரவுண்டரான தீபக் ஹூடா தேர்வு செய்யப்பட்டார். ஆனால், அவருக்கு பாகிஸ்தான், இலங்கைக்கு எதிரான ஆட்டங்களில் பந்து வீச வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
 பரிசோதனை முயற்சி என்கிற பெயரில் கடந்த ஓராண்டாகவே சீட்டுக்கட்டை கலைத்துப் போடுவதுபோல அணி வீரர்களை மாற்றி மாற்றிப் பயன்படுத்தி வருகிறது இந்திய அணி நிர்வாகம். முக்கியமான ஆட்டங்களில்கூட இத்தகைய பரிசோதனை முயற்சியை மேற்கொண்டது இந்திய அணியின் வெற்றியை பெரிதும் பாதித்தது.
 அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை டி20 போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிய கோப்பை அணியில் இடம்பெற்றிருந்த வீரர்கள் பெரும்பாலானோர் உலகக் கோப்பை அணியிலும் இடம்பெற்றுள்ளனர்.
 இலங்கை அணி ஆசிய கோப்பையை வென்றதும் அந்த அணி வீரர் மகீஷ் தீக்ஷனா ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், "11 சகோதரர்களைப் பெற்றிருக்கும்போது உலகத் தரம் வாய்ந்த வீரர்கள் தேவையில்லை' எனக் குறிப்பிட்டிருந்தார். ஒருங்கிணைந்து ஆடுவதே வெற்றியைத் தரும் என்பதே இதன் பொருள். இந்திய அணி அதை ஏன் புரிந்துகொள்ளவில்லை?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com