கேள்வி கேட்பாரில்லை! | சாலை பராமரிப்பு குறித்த தலையங்கம்

கோப்புப் படம்.
கோப்புப் படம்.

 சில மாதங்களுக்கு முன்பு மும்பையில் சாந்தாக்ரூஸ் - செம்பூர் இணைப்புச் சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் 18 வயது பெண் உயிரிழந்தார். அவரது குடும்பத்தினர் சாலை போட்ட ஒப்பந்ததாரர் மீதும், மாநகராட்சி மீதும் வழக்கு தொடர்ந்தனர். இதுபோன்ற வழக்குகள் தொடர்ந்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் தொடுக்கப்படுகின்றன.
 சாலை விபத்துகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும்போது வாகன ஓட்டிகள் மீது மட்டுமே குற்றம்சாட்டும் அதிகாரம் காவல்துறைக்கு இருக்கிறது. கவனக்குறைவுடனும் வேகமாகவும் வாகனம் ஓட்டும் குற்றம்தான் இந்திய தண்டனை சட்டத்தில் இருக்கிறது. சாலை பராமரிப்பு சரியில்லாமல் இருப்பது குறித்தோ, அதை விபத்துக்குக் காரணமாகக் காட்டவோ வழியில்லை. அதனால், ஒப்பந்ததாரர்களும் உள்ளாட்சி அமைப்புகளும் தப்பித்து விடுகின்றன.
 "சாலை மருத்துவர்' என்று அழைக்கப்படும் பாலகங்காதர் திலக் என்கிற ஓய்வு பெற்ற பொறியாளர், சாலையில் காணப்படும் குண்டு குழிகளுக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வருகிறார். வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியாமல் இருப்பது, சீட் பெல்ட் போடாமல் இருப்பது, கைப்பேசியில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவது போன்ற குற்றங்களுக்காகத் தண்டிக்கப்படும்போது, முறையாக சாலையைப் பராமரிக்காமல் இருந்ததற்காக ஏன் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளக் கூடாது என்பது பாலகங்காதர் திலக் எழுப்பும் கேள்வி.
 கெய்னிசியன் பொருளாதார கொள்கை, வேலைவாய்ப்பை உருவாக்குவது குறித்து வேடிக்கையாக ஒரு எடுத்துக்காட்டு கூறும். அதன்படி, சாலையில் குழி தோண்டுவதற்கு ஊதியம் கொடுப்பதும், பிறகு அந்தக் குழிகளை மூடுவதற்கு ஊதியம் வழங்குவதும், இரண்டு செயல்பாடுகளிலும் அதிகாரிகள் தங்கள் பங்குக்கு ஒரு தொகையை ஒதுக்கிக் கொள்வதும் வேலைவாய்ப்பை ஊக்கப்படுத்தும் செயல்பாடு என்று நையாண்டி செய்கிறது அந்தப் பொருளாதாரக் கொள்கை. அந்த நையாண்டிக்கு எடுத்துக்காட்டு இந்திய சாலைகள்.
 மும்பை, பெங்களூரு மாநகராட்சிகளும், கேரள மாநில பொதுப்பணித் துறையும் சமீபத்தில் மோசமான சாலை பராமரிப்புக்காக நீதிமன்ற கண்டனத்துக்கு ஆளாகின. "வீட்டை விட்டு வெளியே போனால் பாதுகாப்பாகவும் உயிருடனும் வீடு திரும்ப வேண்டுமே தவிர, சவப்பெட்டிகளில் திரும்பும் நிலை ஏற்படக்கூடாது' என்கிற கண்டனத்துடன் கேரள உயர்நீதிமன்ற நீதிபதி தேவன் ராமச்சந்திரன், அந்த மாநில பொதுப்பணித் துறையைத் தனது தீர்ப்பில் கடுமையாக விமர்சித்திருக்கிறார். கேரளத்தில் சமீபகாலமாக முறையாகப் பராமரிக்கப்படாத சாலைகள் காரணமாக விபத்துகள் அதிகரித்து வருவது கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.
 மும்பை உயர்நீதிமன்றமும், இதேபோல முறையாகப் பராமரிக்கப்படாத சாலைகளுக்கு எதிராக அரசை கண்டித்திருக்கிறது. கடந்த வாரம் பெருநகர மும்பை மாநகராட்சியில் உள்ள 20 மோசமான சாலைகளை ஆய்வு செய்து அவற்றை செப்பனிடுவதற்கான வழிகளை மேற்கொள்ளும்படி மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
 கர்நாடக மாநிலத்திலும் பெங்களூரு பெருநகர மாநகராட்சிக்கு சாலைகளை செப்பனிட்டு மேம்படுத்த 10 நாள்கள் அவகாசம் வழங்கியிருக்கிறது கர்நாடக உயர்நீதிமன்றம். ஒருகாலத்தில் இந்தியாவிலேயே சிறந்த சாலைகள் அமைந்திருந்த பெங்களூரு, இப்போது முக்கிய வீதிகளில்கூட ஆங்காங்கே குண்டும் குழியுமாக காட்சி அளிப்பதன் காரணம், மாநகராட்சியின் கவனக்குறைவா அல்லது ஊழலா என்று வெளிப்படையாகவே நீதிபதிகள் ஏளனம் செய்திருக்கிறார்கள்.
 கேரள மாநிலத்தில், மக்கள் மத்தியில் சாலைகள் குறித்த விழிப்புணர்வு சமீபகாலத்தில் அதிகரித்திருக்கிறது. திறந்த வாகனங்களில் கட்டட இடிபாடுகள், மணல் உள்ளிட்டவை எடுத்துச் செல்வதற்கு எதிராக ஆங்காங்கே சமூக ஆர்வலர்கள் தெருவில் இறங்கி போராடத் தொடங்கியிருக்கிறார்கள். அதுபோன்ற வாகனங்களை மோட்டார் வாகன துறையோ, காவல்துறையோ நடவடிக்கைகள் மூலம் தடுப்பதில்லை என்பதால், மக்களே அதற்கு எதிராகக் களமிறங்கியிருப்பது பிரச்னையின் தீவிரத்தை உணர்த்துகிறது.
 நடப்பு ஆண்டில் ஜூலை 31-ஆம் தேதி வரையிலான ஏழு மாதங்களில் 25,498 சாலை விபத்துகளில் 2,537 பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என்று உயர்நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர்கள் அறிக்கை தாக்கல் செய்திருக்கிறார்கள்.
 சாலையிலுள்ள பள்ளங்களை செப்பனிடுவதற்காக இந்தியாவிலுள்ள எல்லா மாநகராட்சிகளும் ஆண்டுதோறும் பெரிய அளவிலான நிதி ஒதுக்கீடு செய்கின்றன. பெருநகர மும்பை மாநகராட்சியில் 2021-க்கான ஒதுக்கீடு ரூ.1,500 கோடி. தலைநகர் தில்லியில் ரூ.873 கோடி. கெய்னிசியன் பொருளாதாரக் கொள்கையின் நையாண்டி இந்திய உள்ளாட்சி அமைப்புகள் அனைத்துக்குமே பொருந்தும்.
 சாலையிலுள்ள பள்ளங்களை நிரப்புவதற்காக நகராட்சி அமைப்புகளும், மாநில பொதுப்பணித் துறையும், மத்திய அரசு நிறுவனங்களும் செலவிடும் தொகை குறித்த வெள்ளையறிக்கை கோரப்பட வேண்டும். மக்களின் வரிப்பணம் முறையாக சாலைகள் போடப்படாததால் விரயமாவது போதாதென்று, சாலையிலுள்ள பள்ளங்களை நிரப்பும் சாக்கில் அதிகாரிகள், அரசியல்வாதிகளின் கையூட்டாக மடைமாற்றம் செய்யப்படுகிறது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
 நகரங்களிலுள்ள சாலைகள் மட்டுமல்ல, சுங்கக் கட்டணம் வசூலிக்கும் சாலைகள் முறையான பராமரிப்பில்லாமல் பல இடங்களில் காணப்படுகின்றன. அரசியல்வாதிகளிடம் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை என்பதால், கேள்வி கேட்பாரில்லை போலும்!
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com