வளமான வருங்காலத்துக்கு...: சிறு தானியங்கள் குறித்த தலையங்கம்

இந்தியாவின் வேளாண் கண்ணோட்டத்தில் மாற்றம் ஏற்பட்டிருப்பதை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருக்கும் மத்திய பட்ஜெட் உணர்த்துகிறது. 
சிறுதானியங்கள்
சிறுதானியங்கள்

இந்தியாவின் வேளாண் கண்ணோட்டத்தில் மாற்றம் ஏற்பட்டிருப்பதை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருக்கும் மத்திய பட்ஜெட் உணர்த்துகிறது. 

சிறுதானியங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதும், தேசிய - சர்வதேச அளவில் அவற்றைப் பிரபலப்படுத்துவதும் அரசின் நோக்கம் என்று தனது உரையில் அவர் குறிப்பிட்டிருப்பது வரவேற்புக்குரிய மாற்றம்.

அமைச்சர் குறிப்பிட்டதுபோல, இந்தியாவின் உணவுப் பாதுகாப்புக்கு மட்டுமல்லாமல் விவசாயிகளின் நல்வாழ்வுக்கும், சிறுதானிய சாகுபடி பெரிய அளவில் உதவக்கூடும். எல்லாப் பருவநிலையிலும் சாகுபடி செய்ய முடியும் என்பதால் பெரிய அளவிலான இழப்புகளை விவசாயிகள் சந்திக்க மாட்டாரகள். குறைந்த அளவு தண்ணீரும், இடுபொருள்களும் சிறுதானிய சாகுபடிக்குப் போதுமானது என்பதால் அவர்கள் ரசாயன உரங்களை நம்ப வேண்டிய அவசியம் இல்லை. அதனால் கணிசமாக சாகுபடிச் செலவை மிச்சப்படுத்த முடியும். 

இந்தியாவின் முனைப்பாலும், முன்மொழிதலாலும் 2023-ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐ.நா. அறிவித்தது. இந்தியா முன்மொழிந்த அந்தத் தீர்மானத்தை 72 நாடுகள் ஆதரித்தன. இந்தியாவைப் போலவே சர்வதேச அளவிலும் பல நாடுகள் சிறுதானிய உற்பத்திக்கு மீண்டும் முன்னுரிமை அளிக்க முன்வந்திருப்பதன் அடையாளமாக இதைப் பார்க்க முடிகிறது. 

சிறுதானிய சாகுபடியில் இந்தியா, உலகில் முதலிடம் வகிக்கிறது. சர்வதேச அளவில் சிறுதானிய ஏற்றுமதியில் 2-வது இடம் பெறுகிறது இந்தியா. 2023-க்கான பொருளாதார ஆய்வறிக்கையின்படி, சிறுதானிய உற்பத்தியில் ஆசியாவில் 80% -உம், சர்வதேச அளவில் 20% -உம் இந்தியாவுடையது. ஹெக்டேருக்கு இந்தியாவின் சராசரி விளைச்சல் 1,239 கிலோ என்றால், சர்வதேச சராசரி விளைச்சல் 1,229 கிலோ. 

பசுமைப் புரட்சிக்கு முன்பு ஏழை மக்கள் மட்டுமல்லாமல், நடுத்தர பிரிவினரும் கூட சிறு தானியங்கûளை அன்றாட உணவில் பயன்படுத்தி வந்தனர். இந்தியாவின் உணவுப்பொருள் உற்பத்தியில் சிறுதானியங்கள் சுமார் 40% பங்கு வகித்தன. 

பசுமைப் புரட்சிக்குப் பிறகு அரிசியும், கோதுமையும் முன்னிலைப்படுத்தப்பட்டதால் சிறுதானிய சாகுபடி குறைந்தது. நெல்லுக்கும், கோதுமைக்கும் குறைந்தப்பட்ட ஆதரவு விலை அறிவிக்கப்பட்டு பொது விநியோகத்தின் மூலம் வழங்கவும் தொடங்கியதால்  சிறுதானியங்கள் மதிப்பிழந்தன. மத்திய - மாநில அரசுகளின் கொள்கைகள் நெல், கோதுமை, கரும்பு, எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் கவனம் செலுத்தியதைத் தொடர்ந்து சிறுதானிய உற்பத்தி புறக்கணிக்கப்பட்டது. 

சிறுதானிய சாகுபடியில் இருந்த விளைநிலப் பரப்புகள், ஆழ்துளைக் கிணறுகள் அமைக்க ஊக்கமளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பணப் பயிர்களான நெல், கோதுமை, கரும்பு, எண்ணெய் வித்துகள், சோளம், பருப்பு வகைகள் ஆகிய சாகுபடிகளுக்கு மாறிவிட்டன. விதை மானியம் தொடங்கி எல்லா விதத்திலும் அரசின் ஆதரவு அவற்றுக்கு கிடைத்ததால் விவசாயிகள் சிறுதானியங்களை புறக்கணித்ததில் வியப்படைய ஒன்றுமில்லை. மக்களின் உணவுப் பழக்கத்திலும் மாற்றங்கள் ஏற்பட்டன. சிறுதானியங்கள் ஏழைகளின் உணவு என்கிற கண்ணோட்டம் வலுப்பெற்றது. அரிசி, கோதுமையைவிட சிறுதானியங்களில் ஊட்டச்சத்து அதிகம் என்பதை மறந்துவிட்டு, சுவை சார்ந்த உணவுக்கு மக்கள் மாற்றப்பட்டனர். 

அரிசி, கோதுமையைவிட சிறுதானியங்களில் அதிக அளவு ஊட்டச்சத்து இருப்பதால்தான் உலகின் பல்வேறு பாகங்களிலும் அவை மக்களின் வரவேற்பைப் பெற்றிருந்தன. சர்க்கரை நோய் மட்டுமல்லாமல், ஏனைய பல உடல் சார்ந்த பிரச்னைகளையும் கட்டுப்படுத்தும் தன்மை சிறுதானியங்களுக்கு உண்டு. அவற்றின் ஊட்டச்சத்தின் காரணமாகத்தான் தற்போது சந்தைப்படுத்தப்படும் பெரும்பாலான ஊட்டச் சத்துப் பொருள்களும் சிறு தானியங்களை உள்ளடக்கியதாக இருக்கின்றன. 

பாஜ்ரா, ஜோவார், ராகி போன்றவை மட்டுமல்லாமல் திணை, சாமை, சன்வா உள்ளிட்டவையும் ஒரு காலத்தில் பிரபலமான அன்றாட உணவுப் பொருள்களாக உலகளாவிய அளவில் இருந்தன. அவற்றை கைவிட்டதால்தான் உலகின் பல பகுதிகளிலும், குறிப்பாக இந்தியா உள்ளிட்ட நாடுகளில் ஊட்டச்சத்து குறைவு அதிகரித்திருக்கிறது என்பது உலக சுகாதார அமைப்பின் ஆய்வு முடிவு. 

குழந்தைகளின் வளர்ச்சிக் குறைவு உள்ளிட்ட பிரச்னைகளுக்கும்கூட அதுதான் காரணம் என்று கூறப்படுகிறது. அரிசி, கோதுமையில் இல்லாத அளவிலான நார்ச்சத்து, மினரல்கள், வைட்டமின்கள் ஆகியவை சிறுதானியங்களில் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. 

சிறுதானிய உற்பத்தியால் பல பயன்கள் உண்டு. நெல், கோதுமை போன்றவை அதிக அளவில் தண்ணீரை உறிஞ்சுபவை. அவற்றின் சாகுபடிப் பரப்பு அதிகரிக்க அதிகரிக்க நிலத்தடி நீர் குறைகிறது. கரியமில வாயு வெளியேற்றம் அதிகரிக்கிறது. சிறுதானியங்கள் அப்படியல்ல. வறட்சியையும், அதிகரித்த வெப்பத்தையும் தாங்கக்கூடியவை. பூச்சிகளின் தாக்குதல், பயிர் நோய்களுக்கான எதிர்ப்பு சக்தி கொண்டவை. பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கு இயற்கையிலேயே சிறுதானியப் பயிர்களுக்கு சக்தி உண்டு. 

சிறுதானிய சாகுபடிக்கு முன்னுரிமை கொடுப்பதுடன், அவற்றைப் பயிரிட சிறப்பு ஊக்கத் தொகையும், குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கி மொத்த உற்பத்தியையும் கொள்முதல் செய்து, பொது விநியோக முறையில் மானிய விலையில் வழங்குவதும் அவசியம். 

ஆசிய - ஆப்பிரிக்க நாடுகளில் பத்தாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக மக்களின் அடிப்படை உணவாக இருந்தவை சிறுதானியங்கள். வருங்காலம் சிறுதானியங்களின் காலமாக மீண்டும் மாற வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com