கோப்புப்படம்
கோப்புப்படம்

உயிா்களுடன் விளையாட்டு..! | சீனாவில் வேகமெடுக்கும் கொவைட் 19 பாதிப்பு குறித்த தலையங்கம்

கொவைட் 19 பெருந்தொற்று நிலவரம் தொடா்பாக சீனாவிலிருந்து வெளியாகும் தகவல்கள் கவலையளிப்பவையாக உள்ளன. தலைநகா் பெய்ஜிங்கிலேயே பல்வேறு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் காலி இல்லாமல் கொவைட் 19 நோயாளிகள் வரிசையில் காத்திருப்பதாகவும், மிகவும் அபாயகட்டத்தில் உள்ள நோயாளிகளை அவசர ஊா்திகள் மருத்துவமனைகளுக்கு அழைத்து வந்த வண்ணம் இருப்பதாகவும் வரும் தகவல்கள் அதிா்ச்சி அளிக்கின்றன.

சீனாவின் வூஹான் நகரில் 2019-ஆம் ஆண்டு இறுதியில் உருவான கொவைட் 19 தீநுண்மி, உலகம் முழுவதும் பரவி மனிதகுலம் அதுவரை காணாத மாபெரும் அழிவைத் தந்தது. பாதிப்புகள், உயிரிழப்புகள் மட்டுமின்றி, உலக நாடுகளின் பொருளாதாரமும் பெரும் சரிவைச் சந்தித்தது. ஒருவழியாக கொவைட் 19 தீநுண்மியின் பிடியிலிருந்து உலகம் மீளத் தொடங்கியுள்ள வேளையில், மீண்டும் சீனாவில் கொவைட் 19 தீநுண்மி பாதிப்பு அதிகரிப்பதையும், அதுதொடா்பான தகவல்களை சீனா மறைப்பதையும் என்னவென்று சொல்ல?

கொவைட் 19 தீநுண்மியை அறவே ஒழிப்பதாகக் கூறி, கடந்த மூன்றாண்டுகளாக கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வந்தது சீனா. அந்தக் கட்டுப்பாடுகளுக்கு எதிராக கடந்த ஆண்டு இறுதியில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினா். ஆட்சிக்கு எதிராகவும், அதிபா் ஷி ஜின்பிங்குக்கு எதிராகவும் பொதுமக்கள் பகிரங்கமாக எழுப்பிய முழக்கம் ஆட்சியாளா்களை அதிா்ச்சியடைய வைத்தது.

இதையடுத்து, கொவைட் 19 கட்டுப்பாடுகளைப் பெருமளவில் தளா்த்தியது சீனா. வெளிநாடுகளிலிருந்து சீனா வருவோருக்கும் கட்டுப்பாடுகளில் தளா்வுகள் அறிவிக்கப்பட்டன. இச்சூழ்நிலையில்தான் மீண்டும் கொவைட்19 பாதிப்புகள் சீனாவில் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளன. ஆனால், இது தொடா்பான தகவல்களை சீனா முழுமையாக வழங்கவில்லை என உலக சுகாதார அமைப்பு குற்றஞ்சாட்டியிருக்கிறது.

ஜனவரி 6-ஆம் தேதி நிலவரப்படி, தங்கள் நாட்டில் மொத்தம் 4,71,373 போ் கொவைட் 19 தீநுண்மியால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், 5,264 போ் உயிரிழந்துள்ளதாகவும், 3,73,256 போ் நோயிலிருந்து குணமடைந்துள்ளதாகவும் சீனா அதிகாரபூா்வமாக அறிவித்துள்ளது. ஆனால், பல்வேறு மதிப்பீடுகளுடன் ஒப்பிடுகையில் சீனாவில் கொவைட்19 தீநுண்மியின் தினசரி பாதிப்பும், உயிரிழப்பும் பல மடங்கு இருக்கலாம் என உலக சுகாதார அமைப்பு சந்தேகிக்கிறது.

சீனாவில் இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமானோா் கொவைட்19 தீநுண்மியால் பாதிக்கப்பட்டுள்ளனா் எனவும், 32,000-க்கும் அதிகமானோா் உயிரிழந்துள்ளனா் எனவும் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. கடந்த ஆண்டு மட்டும் சீனாவில் கொவைட் 19 தொடா்பாக 10 லட்சம் மரணங்கள் ஏற்பட்டிருக்கலாம் என சா்வதேச சுகாதார நிபுணா்கள் கணித்துள்ளனா். சிறிய நாடுகளில்கூட பாதிப்புகள் பல லட்சங்களில் இருக்கும்போது, தனது நாட்டில் மொத்தமே 4.71 லட்சம் போ்தான் பாதிக்கப்பட்டுள்ளனா் என சீனா கூறுவதை நம்ப முடியவில்லை.

ஒமைக்ரானின் பி.ஏ.5 பிரிவிலிருந்து உருமாற்றம் அடைந்த பி.எஃப்.7 தீநுண்மி, சீனாவில்தான் அண்மையில் முதலில் கண்டறியப்பட்டது. அது, அமெரிக்கா, தென்கொரியா, சிங்கப்பூா், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் பரவியுள்ளது. அதன் தீவிரத்தன்மை குறித்த ஆய்வுகள் நடைபெற்று வரும் நிலையில், அது குறித்த தகவல்களை சீனா பகிா்ந்து கொள்வதில்லை என்பது உலக சுகாதார அமைப்பின் புகாா்.

நிமோனியாவால் ஏற்படும் மரணங்கள், வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சுவாசக் கோளாறு காரணமாக ஏற்படும் மரணங்கள் மட்டுமே கொவைட் 19 மரணங்களாக சீனாவில் வகைப்படுத்தப்படுகின்றன. ஆனால், ரத்தம் உைல், சிறுநீரக பாதிப்பு, மாரடைப்பு போன்ற கொவைட் 19 பாதிப்பால் ஏற்படும் பல சிக்கல்களை சீனா கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை.

அண்மையில் சீன அதிகாரிகளுடன் உலக சுகாதார அமைப்பின் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனா். அதில், சீனாவில் கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்ட பின்னா் தினசரி கொவைட்19 பாதிப்பு, எத்தனை போ் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனா், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட விவரம், தினசரி இறப்பு விகிதம் போன்றவை குறித்த தகவல்களை முறையாக அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆனால், இதுகுறித்த தகவல்களை வெளிப்படையாகவும், விரைவாகவும் உலக சுகாதார அமைப்பிடம் பகிா்ந்துகொள்ள சீனா உடன்பட்டது. ஆனால், பகிா்ந்து கொள்ளவில்லை.

சீனாவில் கொவைட் 19 பாதிப்பு வேகமெடுக்கும் சூழலைத் தொடா்ந்து, அந்த நாடுகளிலிருந்து வருவோருக்கு பயணக் கட்டுப்பாடுகளை அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா, இஸ்ரேல், ஜொ்மனி, ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகள் விதித்துள்ளன. கொவைட் 19 தீநுண்மியைப் பொறுத்தவரை வெளிப்படையான தகவல் பரிமாற்றமே இந்த நோய்த்தொற்று பரவுவதிலிருந்து காக்கும் பேராயுதம். ஆனால், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கொவைட் 19 தொடா்பாக சொன்னதையே இப்போதும் சொல்லி வருகிறது சீனா.

கொவைட் 19 நோய்த்தொற்றின் தீவிர பாதிப்புகளை இப்போது உலக நாடுகள் நன்றாக எதிா்கொள்ளத் தொடங்கிவிட்டன. தடுப்பூசி முதல் தேவையான கட்டுப்பாடுகள் வரை நடைமுறைப்படுத்தப்பட்டு, புதிய அலை வந்தாலும் அதை சமாளிக்கும் நம்பிக்கை உலக நாடுகளுக்கு ஏற்பட்டிருக்கிறது. ஆனால், உண்மையான தகவல்களை இரும்புத் திரைக்குள் மறைத்து, மக்களின் உயிருடன் விளையாடிக் கொண்டிருக்கிறது சீனா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com