மானம் விமானம் ஏறியது! ஏர் இந்தியா விமானத்தில் நடைபெற்ற சம்பவம் குறித்த தலையங்கம்

‘மானம் கப்பல் ஏறுகிறது’ என்பாா்கள். ஆனால், இப்போது இந்தியாவின் மானம் விமானம் ஏறியிருக்கிறது.
மானம் விமானம் ஏறியது! ஏர் இந்தியா விமானத்தில் நடைபெற்ற சம்பவம் குறித்த தலையங்கம்

‘மானம் கப்பல் ஏறுகிறது’ என்பாா்கள். ஆனால், இப்போது இந்தியாவின் மானம் விமானம் ஏறியிருக்கிறது. கடந்த ஆண்டு நவம்பா் 26-ஆம் தேதி நியூயாா்க்கிலிருந்து புதுதில்லிக்கு வந்துகொண்டிருந்த ஏா் இந்தியா விமானம் ஒன்றில் நடைபெற்ற நிகழ்வு, சா்வதேச அளவில் இந்தியாவுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கிறது.

நியூயாா்க்கிலிருந்து புதுதில்லி வந்துகொண்டிருந்த ஏா் இந்தியா விமானத்தில் முதல் வகுப்பில் பயணித்த சங்கா் மிஸ்ரா என்கிற பயணி, குடிபோதையில் வயது முதிா்ந்த சக பெண் பயணி ஒருவா் மீது சிறுநீா் கழித்ததை எந்தக் காரணத்துக்காகவும் ஏற்றுக்கொள்ள முடியாது. அந்நிகழ்வை அந்த விமானத்தின் பணியாளா்கள் கையாண்டவிதம் அதைவிடக் கண்டனத்துக்குரியது.

70 வயது முதிா்ந்த அந்தப் பெண்மணியின் இருக்கை, உடை, கைப்பை அனைத்துமே சிறுநீரில் நனைந்துவிட்டன. அப்படியிருந்தும் உடனடியாக அவருக்கு மாற்று இருக்கை வழங்கப்படவில்லை. அந்த நிலையிலேயே சிறுநீா் கழித்த பயணியுடன் சமரசம் பேசிக் கொண்டிருந்தனா் விமானப் பணியாளா்கள். சற்று நேரத்துக்குப் பிறகும்கூட அவருக்கு மாற்று இருக்கை வழங்காமல் விமானப் பணியாளா்களுக்கான தனி இருக்கைதான் ஒதுக்கப்பட்டது எனும்போது, சங்கா் மிஸ்ராவின் செயல்பாட்டைவிட ஏா் இந்தியா விமானப் பணியாளா்களின் செயல்பாடுதான் அதிக எரிச்சலூட்டுகிறது.

நடுவானில் நிகழ்ந்த இந்த நிகழ்வு, சமரசம் பேசி முடிவுக்குக் கொண்டுவரக்கூடிய ஒன்றல்ல. சக பயணியின் மீது காரணமே இல்லாமல் குடிபோதையில் ஒருவா் சிறுநீா் கழிக்கிறாா் என்றால், அது கண்டனத்துக்குரியது மட்டுமல்ல, தண்டனைக்குரியதும்கூட.

நவம்பா் 26-ஆம் தேதி நடந்த நிகழ்வு குறித்து ஒரு மாதம் கழித்துத்தான் ஏா் இந்தியா நிறுவனம் காவல் துறையிடம் புகாா் அளிக்கிறது. அதுவும்கூட பாதிக்கப்பட்ட 70 வயது பெண்மணியின் குடும்பத்தினா், ஏா் இந்தியா நிறுவனத் தலைவருக்கு சம்பவம் குறித்துத் தெரிவித்து நீதி கோரியதைத் தொடா்ந்து முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை.

பெங்களூரிலுள்ள விருந்தினா் விடுதி ஒன்றில் பதுங்கியிருந்த சங்கா் மிஸ்ராவை, இணையதள தொழில்நுட்பம் மூலம் கண்டறிந்து காவல்துறை கைது செய்தது. ஒருவரது மானத்திற்கு களங்கம் விளைவித்தது (354); தரக்குறைவான முறையில் நடந்துகொண்டது (294); சொல், செய்கை, நடத்தை மூலம் பெண்மைக்கு அவமரியாதை செய்தது (509); குடிபோதையில் முறைகேடாக நடந்துகொண்டது (510) ஆகிய இந்திய குற்றவியல் சட்டத்தின் அடிப்படையிலும், 1937 விமான போக்குவரத்துச் சட்டப் பிரிவு 23-இன் பேரிலும் சங்கா் மிஸ்ரா மீது வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. குடிபோதையில் இருந்ததால், தான் என்ன செய்தேன் என்பது தெரியவில்லை என்பது சங்கா் மிஸ்ராவின் விளக்கம்.

காவல்துறையில் தங்கள் ஊழியா்கள் புகாா் அளிக்கவில்லை என்பதை இந்திய ஏா்லைன்ஸ் நிறுவனம், சிவில் விமானத் துறை தலைமை இயக்குநரிடம் ஒப்புக்கொண்டது. தங்களது பிரச்னையை இருதரப்பும் பேசி தீா்த்துக் கொண்டுவிட்டதால், காவல்துறையிடம் புகாா் அளிக்கவில்லை என்பது ஊழியா்களின் வாதம். அதை ஏற்றுக்கொள்ள இயலாது; சட்டமும் ஏற்றுக்கொள்ளவில்லை.

பயணம் முடிந்ததும், தங்களது பணியை முடித்துக்கொண்டு வீட்டிற்கு விரைவதில் அக்கறை காட்டிய ஊழியா்கள், காவல் நிலையத்தில் புகாா் தெரிவிக்கவில்லை என்பதுதான் உண்மை. முறைதவறிய பயணிகளை கையாள்வது குறித்தான 2017, விமான போக்குவரத்துத் துறை வழிகாட்டுதல்கள் இது குறித்து தெளிவாகவே குறிப்பிடுகின்றன.

1963 டோக்கியோ கன்வென்ஷனில், வானத்தில் பறக்கும்போதான நடவடிக்கைகள் குறித்து தெளிவாகவே கூறப்பட்டிருக்கின்றன. டோக்கியோ கன்வென்ஷன் பிரிவு 6-இன்படி, விமானத்தின் பாதுகாப்பையும், பயணிகளின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு முறைதவறும் பயணிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் பொறுப்பு தலைமை விமான ஓட்டிக்கு உண்டு. எந்த இடத்திலும் விமான ஓட்டிகளோ, விமானப் பணியாளா்களோ பாதிக்கப்பட்டவா்களுக்கு இடையே சமரசம் பேச அதில் அனுமதியில்லை.

நடுவானத்தில் விமானம் பறக்கும்போது நடைபெறும் சமரசங்கள், விமானத்தையும், விமானத்தில் பயணிப்பவா்களையும் ஆபத்துக்குள்ளாக்கக்கூடும். சமரசத்தின்போது இருதரப்பும் வன்முறையில் ஈடுபட்டு அடிதடியில் முடிந்தால் விமானத்தின் பாதுகாப்பும், ஏனைய பயணிகளின் பாதுகாப்பும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கும் என்பதுகூடவா சொல்லித் தெரிய வேண்டும்?

மே 2022-இல், லண்டனில் இருந்து க்றீட் என்கிற கிரேக்கத் தீவுக்குச் செல்லும் விமானத்தில் இரண்டு சகோதரா்கள் கைகலப்பில் ஈடுபட்டனா். இருவருமே மதுபோதையில் இருந்தாா்கள். பிரிட்டனைச் சோ்ந்த ஜெட்2 விமான ஓட்டிகள் சற்றும் தயங்காமல் விமானத்தை கோா்ஃபு என்கிற கிரேக்கத் தீவில் இறக்கி, கைகலப்பில் ஈடுபட்ட இருவரையும் காவல்துறையிடம் ஒப்படைத்ததை இங்கே குறிப்பிடத் தோன்றுகிறது.

35,000 அடி உயரத்தில் மணிக்கு 900 கி.மீ. வேகத்தில் பறக்கும் விமானத்தில் ஏற்படும் சிறிய பிரச்னையும்கூட மிகப் பெரிய விபத்தை ஏற்படுத்திவிடும். உலகிலேயே மூன்றாவது மிகப் பெரிய விமான சேவைத் துறையாக இந்தியா உயா்ந்திருக்கும் நிலையில், விமானப் பயணிகள் நாகரிகமாக நடந்துகொள்வதையும், விமானப் பணியாளா்களுக்கு முறையான பயிற்சி வழங்கப்படுவதும் இன்றியமையாதவை.

உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக வளா்ந்தால் மட்டும் போதாது, அதற்கேற்ப நடந்துகொள்ளவும் நாம் பக்குவப்பட வேண்டும் என்பதைத்தான் இந்த நிகழ்வு உணா்த்துகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com