பருவம் படுத்தும் பாடு! | கோதுமை உற்பத்தி குறித்த தலையங்கம்

கோப்புப்படம்
கோப்புப்படம்

 இந்த ஆண்டு வரலாறு காணாத அளவில் 11.8 கோடி டன் கோதுமை மகசூலுக்கான வாய்ப்பு இருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. பிப்ரவரி மாதம், வழக்கத்துக்கு மாறாக இந்தியாவில் மேற்கு, வடக்கு மாநிலங்களில் காணப்படும் அதிகரித்த வெப்பத்தைப் பார்க்கும்போது அது சாத்தியப்படுமா என்கிற சந்தேகம் எழுகிறது. உடனடியாக எந்தவித முடிவுக்கும் வரமுடியாது என்றாலும்கூட, நாம் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.
 கடந்த ஆண்டு 11.1 கோடி டன் கோதுமை உற்பத்தி எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மார்ச், ஏப்ரல் மாதங்களில் காணப்பட்ட வெப்பம் காரணமாக 10.7 கோடி டன் விளைச்சல்தான் கிடைத்தது. கோதுமை, கடுகு போன்ற ராஃபி பருவகால விளைச்சல் குறித்து மார்ச், ஏப்ரல் மாத வெப்பநிலையின் அடிப்படையில்தான் எந்த முடிவும் எடுக்க முடியும் என்பது அனுபவம் கற்றுத்தந்த பாடம்.
 பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் எல் நினோ, லா நினா அடிப்படையில்தான் கீழமை நாடுகளின், குறிப்பாக தெற்கு ஆசியாவின் தட்பவெப்பநிலை அமைகிறது. பிப்ரவரி, மார்ச் மாதங்களில் குளிர்காலத் தன்மைகள் தொடரவும் அவை காரணமாகின்றன. கடந்த ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும் இந்தியாவின் பல பகுதிகளிலும் குளிர்காலம் முடிந்து வசந்த காலம் தொடராமல், நேரடியாக கோடை கால வெப்பநிலை காணப்படுவதை உணர முடிகிறது.
 2022-க்கும் 2023-க்கும் வித்தியாசம் இருக்கிறது. கடந்த ஆண்டு அதிகரித்த வெப்பத்தால் குளிர்காலப் பயிர்களின் அறுவடைக்கு முன்பு மார்ச் மாதம் கருகத் தொடங்கியது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதமே கோடை வெப்பம் தொடங்கியிருப்பது விவசாயிகளை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
 கோதுமை அறுவடைக்குக் காற்றில் ஈரப்பதம் இருப்பது மிகவும் அவசியம். குளிர்காலத்தில் போதுமான மழை இல்லாததால், கோடை வெப்பம் மேலும் அதிகரிக்கக்கூடும். அதனால் வழக்கமான பருவமழையும் பாதிப்பை எதிர்கொள்ளும்.
 2021 - 22-இல் இந்தியாவின் கோதுமை சாகுபடி 2.5% குறைந்து 10.7 கோடி டன்னாக இருந்தது. விளைச்சல் குறைந்தாலும், அரசு அதிக அளவில் கோதுமையைக் கொள்முதல் செய்தது. கடந்த மூன்று ஆண்டுகளாக நமது தானியக் கையிருப்பு 5.3 முதல் 5.7 கோடி டன் என்றால், 2023 ஜனவரியில் அதுவே பாதிக்குப் பாதி அளவில் (2.98 கோடி டன்)தான் இருக்கிறது.
 தானியங்களிலும், கோதுமையின் கையிருப்பு மிக அதிகமாக இல்லை. நமது குறைந்தபட்ச தேவை 1.38 கோடி டன் என்றால், ஜனவரி மாத கோதுமை கையிருப்பு 1.71 கோடி டன். கோதுமையின் விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த 30 லட்சம் டன் சந்தைக்கு வழங்கப்பட்டது. கடந்த வாரம், போக்குவரத்துக் கட்டணம் அகற்றப்பட்டு கூடுதலாகச் சந்தையில் கோதுமை கிடைக்க வழிகோலப்பட்டது.
 கையிருப்பைக் குறைத்துக் கொண்டு சந்தைக்குக் கூடுதல் கோதுமை கிடைக்க வழிகோலுவதன் மூலம் விலையை சற்றுக் கட்டுக்குள் கொண்டுவரலாம்தான். வர இருக்கும் ராஃபி பருவத்தில் அமோக விளைச்சல் கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் எடுக்கப்படும் நடவடிக்கை அது. 2022 ராஃபி பருவத்தில் மார்ச் மாதம் அதிகரித்த வெப்பத்தால், மகசூல் குறைந்ததுபோல இந்த ஆண்டும் நேர்ந்து விடுமோ என்பதுதான் கவலையை ஏற்படுத்துகிறது.
 சென்ற ஆண்டில் கோதுமை உற்பத்தி குறைந்ததால், இந்தியா மிகப் பெரிய ஏற்றுமதி வாய்ப்பை இழந்தது. உற்பத்தி குறைந்ததால் உணவுப் பொருள்களின் விலைவாசி விகிதம் இரட்டை இலக்கத்தை எட்டியது. ரஷிய - உக்ரைன் போரால் உலகம் முழுவதும் கோதுமைக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டாலும், அதை நம்மால் பயன்படுத்திக்கொள்ள முடியாமல் போயிற்று. இந்த ஆண்டும் அதே நிலைமை ஏற்பட்டு விடுமோ என்பதுதான் அச்சம்.
 அரசின் கையிருப்பு குறைந்ததற்கு, இலவச ரேஷன் முக்கியமான காரணம். நடப்பு ராஃபி பருவத்தில் அதை ஈடுகட்டலாம் என்கிற எதிர்பார்ப்பில்தான் இலவச ரேஷன் அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு வழக்கத்தைவிட அதிக சாகுபடிப் பரப்பில் கோதுமை பயிரிடப்பட்டிருக்கிறது. அப்படியிருந்தும் கடந்த ஆண்டின் உற்பத்தி அளவை கோதுமை எட்டினாலே பெரிது என்று நிபுணர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள்.
 இந்தியாவில் சில்லறை விலைவாசி ஜனவரி 2023-இல் 6.52% சற்று குறைந்து மீண்டும் அதிகரித்துவிட்டது. தானியங்களின் விலைவாசி செப்டம்பர் 2022 முதல் இரட்டை இலக்கத்தை எட்டி, தற்போது 16.12% அளவை எட்டியிருக்கிறது. விலைவாசியைக் கட்டுப்படுத்த இறக்குமதி செய்யவும் முடியாது. உலகளாவிய நிலையில் நிலவும் கோதுமைத் தட்டுப்பாடு முதல் காரணம். இந்தியா சர்வதேச சந்தையில் நுழைந்தால், சர்வதேச கோதுமை விலை பலமடங்கு உயர்ந்துவிடும் என்பது இன்னொரு காரணம்.
 அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இல்லை. இந்தியாவின் வடக்கு, மேற்கு பகுதிகளில் அதிக பாதிப்பு ஏற்படக்கூடிய 151 பகுதிகளை அடையாளம் கண்டு வெப்பம் தாங்கும் சக்தி படைத்த கோதுமை வித்துகள் பயிரிடப்பட்டிருக்கின்றன. கோடையை எதிர்கொள்ள, முன்கூட்டியே பயிரிடவும் விவசாயிகள் ஊக்குவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
 விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மேல் ஊக்கத்தொகை வழங்கிக் கூடுதல் கோதுமை கையிருப்பை உறுதிப்படுத்துவது புத்திசாலித்தனம். உணவுப் பொருள்களின் விலை உயர்வையும் கட்டுப்படுத்த வேண்டும், உணவுத் தட்டுப்பாடு ஏற்படாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். 2023 சவாலாகத்தான் இருக்கப் போகிறது!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com