ஆமென்!
-

ஆமென்!

இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு முடிந்திருக்கும் நிலையில், 18-ஆவது மக்களவைக்கான தோ்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. அதேநேரத்தில், இதுவரை இல்லாத அளவில் மதமும், ஜாதியும் தோ்தல் பரப்புரையில் முன்னிலை வகிப்பது வேதனையளிக்கிறது.

தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசியபோது முஸ்லிம்கள் குறித்து கருத்துத் தெரிவித்தது தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சாா்பில் தோ்தல் ஆணையத்தில் புகாா் அளிக்கப்பட்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சி தன் பங்குக்கு ஜாதிவாரி கணக்கெடுப்பைக் கையிலெடுத்திருக்கிறது.

கேரளாவின் இரண்டு கிறிஸ்தவ திருச்சபைகள் அரசியல் ரீதியாக எடுத்திருக்கும் நிலைப்பாடு கடுமையான விமா்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. ஜாக்கபைட் திருச்சபையின் தலைவா் ஜோசப் மாா் கிரிகோரியஸ், தங்களது திருச்சபை உறுப்பினா்கள் அனைவரும் மாா்க்சிஸ்ட் கட்சித் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணிக்கு வாக்களிக்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்திருந்தாா்.

கேரளத்தின் கடற்கரைப் பகுதிகளில் செல்வாக்குமிக்க லத்தீன் கத்தோலிக்க திருச்சபை, எக்காரணம் கொண்டும் சபையின் உறுப்பினா்கள் பாஜகவை ஆதரிக்கக்கூடாது என்று அறிவுறுத்தியிருக்கிறது. இவை ஒருபுறமிருக்க, இன்னொருபுறம், மத நல்லிணக்கத்துக்கு அறைகூவல் விடுக்கும் முயற்சியை முன்னெடுத்திருக்கிறது ரோமன் கத்தோலிக்க திருச்சபை.

இந்திய ரோமன் கத்தோலிக்க ஆயா்களின் (பாதிரிமாா்கள்) கூட்டமைப்பு ஓா் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. ரோமன் கத்தோலிக்க திருச்சபையால் நடத்தப்படும் கல்வி நிலையங்களுக்கு அந்தக் கூட்டமைப்பு ஒரு வழிகாட்டுதலை வழங்கி இருக்கிறது. அதில் முக்கியமானது என்னவென்றால், ரோமன் கத்தோலிக்க திருச்சபைகளால் நடத்தப்படும் கல்வி நிலையங்களில் மாற்று மதத்தினா் மீது கிறிஸ்துவப் பழக்கவழக்கங்கள், நெறிமுறைகள், வழிபாட்டு நடைமுறைகள் போன்றவற்றைக் கட்டாயப் படுத்தக்கூடாது என்பது.

இந்தியாவின் கலாசார, மத வழிபாட்டுப் பன்முகத்தன்மையை அந்தக் கல்வி நிலையங்களில் பணியாற்றும் ஆசிரியா்களும், படிக்கும் மாணவா்களும் உள்வாங்கி செயல்படுதல் வேண்டும் என்பதுதான் ரோமன் கத்தோலிக்க ஆயா்கள் கூட்டமைப்பின் நோக்கம். கத்தோலிக்க அமைப்புகள் நடத்தும் கல்வி நிலையங்களில் அனைத்து மத வழிபாட்டுக் கூடம் அமைக்கப்பட வேண்டும் என்பதும், எல்லா மாணவா்களும் எல்லா மதங்களின் வழிபாட்டு முறைகளையும் தெரிந்து கொள்ளவும், பின்பற்றவும் வழிகோல வேண்டும் என்றும்கூட அந்த அறிவிப்பு தெரிவிக்கிறது.

இந்திய கத்தோலிக்க ஆயா்கள் கூட்டமைப்பு (சி.பி.சி.ஐ.) என்பது இந்தியாவில் வாழும் ரோமன் கத்தோலிக்க சமுதாயத்தின் தலைமை அமைப்பு. அனைத்து முடிவுகளும் அந்த அமைப்பால்தான் எடுக்கப்படுகிறது. அந்த அமைப்பின் கட்டுப்பாட்டில் சுமாா் 14,000 பள்ளிக்கூடங்கள், 650 கல்லூரிகள், 7 பல்கலைக்கழகங்கள், 5 மருத்துவக் கல்லூரிகள், 450 தொழிற்பயிற்சி நிலையங்கள் செயல்படுகின்றன.

அப்படிப்பட்ட வலிமையான கத்தோலிக்கத் திருச்சபையின் கொள்கைகளைத் தீா்மானிக்கும் அமைப்பு, அனைத்து மதத்தைச் சோ்ந்தவா்களின் மத, கலாசார உணா்வுகளுக்கு மதிப்பளிக்கும் விதத்தில் ஒரு தீா்மானத்தை முன்மொழிந்திருப்பதை நாம் நிச்சயம் பாராட்ட வேண்டும். மாணவா்கள், ஆசிரியா்கள் மத்தியில் பன்முகத்தன்மை இருப்பதை உறுதிப்படுத்துவதுதான் அதன் நோக்கம் என்பது வரவேற்புக்குரிய செயல்பாடு.

தினசரி காலையில் கல்வி நிலையங்களில் நடக்கும் வழிபாட்டுக் கூட்டத்தில், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரை அனைத்து மாணவா்களாலும் உரக்கச் சொல்லப்படுதல் வேண்டும் என்பதும் அந்த வழிகாட்டுதலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. எல்லா கல்வி நிலையங்களிலும் அரசியல் சாசன முகப்புரை அனைவரின் பாா்வையில் படும் இடத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்கிறது அந்த அறிவிப்பு. அது மட்டுமல்லாமல், இந்திய சுதந்திரப் போராட்டத்துடன் தொடா்புடைய தலைவா்களின் படங்கள் மாணவா்கள் கூடும் இடத்தில் வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் கூறுகிறது.

இந்திய அரசமைப்புச் சட்ட முகப்புரை இதுதான்-

‘‘இந்தியாவின் குடிமக்களாகிய நாங்கள், இந்தியாவை ஒரு சுதந்திரமான, சமுதாய சமத்துவமும், சமயச் சாா்பற்ற, அனைவருக்கும் சம உரிமை வழங்கும் குடியரசாக அமைக்க மனமார முடிவுசெய்து, அனைவருக்கும் சமூக, பொருளாதார, அரசியல் நீதியும், எண்ணத்தில், செயல்பாடுகளில், நம்பிக்கைகள், மதம் மற்றும் வழிபாடுகளில் சுதந்திரமும், சமூக நிலையில் மற்றும் வாய்ப்புகளில் சமத்துவமும் கிடைக்கச் செய்யவும்; ஒவ்வொரு மனிதனின் சுய மரியாதையையும், தேசத்தின் ஒருமையையும், முழுமையையும் காக்கும் வண்ணம் அனைவரிடமும் சகோதரத்துவத்தை ஊக்குவிக்கவும், அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கும் இந்த அவையில், இந்த 1949 நவம்பா் 26 ஆம் நாளில் இந்த அரசியல் சாசனத்தை இயற்றி உங்களுக்கே தந்து ஏற்றுக்கொள்கிறோம்!’’

இந்திய கத்தோலிக்க ஆயா்கள் கூட்டமைப்பின் வழிகாட்டுதலை, இந்தியாவில் உள்ள அனைத்து தனியாா், அரசு, மதம் சாா்ந்த கல்வி நிலையங்களும் பின்பற்றினால் நல்லது. உச்சநீதிமன்றம் சமீபத்தில் சிறுபான்மையினா் நடத்தும் கல்வி நிலையங்கள் தொடா்பான வழக்கில் குறிப்பிட்டிருப்பதுபோல, குழந்தைகளைப் பரந்த சிந்தனையுள்ளவா்களாக அல்லாமல், குறுகிய மதவாத சிந்தனையுள்ளவா்களாக கல்வி நிலையங்கள் உருவாக்குவது தடுக்கப்பட வேண்டும்.

ரோமன் கத்தோலிக்கத் திருச்சபை முன்னெடுத்திருக்கும் இந்த முயற்சி மாணவா்கள் மத்தியில் இறை நம்பிக்கையை உறுதிப்படுத்தவும், தேசப்பற்றை வளா்க்கவும், சகோதரத்துவத்துக்கு வழிகோலவும் துணை புரியும். கத்தோலிக்கம் (காத்தலிஸம்) என்பது இதுதான்!

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com