மருத்துவப் பணி உன்னதமானது என்று இஸ்ரோ ஏவுகனை திட்ட முதன்மை செயல் அலுவலரும் முதன்மை இயக்குநருமான டாக்டர் சிவதாணுப் பிள்ளை கூறினார்.
மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறை சார்பில் நடைபெறும் மருத்துவம் மற்றும் பொறியியல் துறை மாணவர்கள் 872 பேருக்கு காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் நேற்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு, மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி துறையின் வேந்தர் ஏ.என். ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். எம்.பி.பி.எஸ். எம்.டி., எம்.எஸ்., பி.எஸ்ஸி. செவிலியர், எம்.எஸ்ஸி. செவிலியர், இளநிலை இயன்முறை மருத்துவம், முதுநிலை இயன்முறை மருத்துவம், பி.எஸ்.சி. ஹெல்த் சர்வீஸ் துறை, எம்.பி.ஏ., பொறியியல் துறை, ஆராய்ச்சி துறை ஆகிய துறைகளைச் சேர்ந்த 872 மாணவர்களுக்கு, சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட டாக்டர் சிவதாணுப் பிள்ளை பட்டங்களை வழங்கினார்.
மாணவி சாதனை: ஆந்திர மாநிலம் புதினேபள்ளியைச் சேர்ந்த மாணவி ராஜலட்சுமி, மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்து வந்தார். அவர் மொத்தமுள்ள 14 பாடங்களில் 8 பாடங்களில் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்று 8 தங்கப்பதக்கங்களை பெற்று சாதனைப் படைத்தார்.
விழாவில் முன்னதாக டாக்டர் சிவதாணுப் பிள்ளை பேசியது:
மருத்துவத் துறையில் உள்ளவர்கள் எப்போதும் பொதுமக்களிடம் பரிவும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் இருக்க வேண்டியது அவசியம். மக்களுடைய நோயை போக்கும் மருத்துவர்கள் தங்களை படைத்த இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும். ஏனென்றால் மருத்துவ பணி என்பது உன்னதமானது. இஸ்ரோவில் டாக்டர் விக்ரம், பேராசிரியர் சதீஷ் தவன், மற்றும் டாக்டர் அப்துல்கலாமுடன் நான் பணியாற்றியதை பெருமையாக நினைக்கிறேன்.
எஸ்.எல்.வி. -3 திட்டத்தில் அப்துல்கலாமுக்கு கீழ் நான் பணிபுரிந்தது எனக்கு உன்னதமான அனுபவத்தை ஏற்படுத்தியது. அவர் பல அறிவியலாளர்களை உருவாக்கியுள்ளார். நாட்டின் முக்கிய அறிவியல் திட்டங்கள் இளைஞர்களின் துணை கொண்டுதான் முழுமை அடையும். நாட்டுக்கு ஏதாவது சாதிக்க வேண்டும் என்று இளைஞர்கள் உறுதிக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.