
உங்களுக்கு நல்ல குரல் வளம் இருக்கிறதா? இசை கற்றுக் கொள்ளும் ஆர்வம் இருக்கிறதா? அதை முழு நேரப் படிப்பாகக் கற்று, இசை ஆசிரியர் பயிற்சியும் பெற்று, தொழில்முறையாக இசை ஆசிரியராகும் வாய்ப்பு இக்காலத்தில் இருக்கிறது. நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை நமது பாரம்பரிய இசையைக் கற்க விரும்பியவர்கள் தமது ஆசிரியருடன்
தங்கி இருந்து "குருகுலம்' என்ற வழியிலேயே கற்றறிந்தனர். ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது. தற்காலத்தில் இசையை பள்ளிக்கூடங்களிலும், கல்லூரிகளிலும் கற்றுக் கொள்ளும் வசதி வந்துவிட்டது. வியப்பாக இருக்கிறதா? கல்லூரியில் இசையை ஒரு பாடமாகக் கற்க முடியுமா? இசையில் இளங்கலை, முதுகலை போன்ற பட்டங்கள் வழங்கப்படுகின்றனவா? மேற்கொண்டு படியுங்கள்...
கல்வி மையங்களில் கர்நாடக இசை பயிற்றுவிக்கப்படுகிறது. இதில் வாய்ப்பாட்டு, வாத்தியங்கள் ஆகிய இரண்டும் சொல்லித் தரப்படுகின்றன. சில கல்வி மையங்களில் பரதநாட்டியம் கற்றுத் தரப்படுகிறது. மேலும் சில மையங்களில் இசை ஆசிரியர் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இதையெல்லாம்விட ஆச்சரியம், இசையையும், பரதநாட்டியத்தையும் அஞ்சல் வழியிலும் கற்க முடியும் என்ற காலம் இப்போது!
இசையை இவ்வாறு பயின்று பட்டங்கள் பெறுவதால் என்ன பயன்?
குரலிசையைக் கற்றுக் கொள்பவர்கள் பாடுவதற்காக மட்டும் இப்போது கல்வி மையங்களில் இசை கற்கவருவதில்லை. வாய்ப்பாட்டு கற்றுக் கொள்பவர்கள் சிறந்த குரல் பயிற்சி பெறுவதால் வானொலி, தொலைக்காட்சி நிலையங்களில் பணியாற்றவும், நிகழ்ச்சிகளில் பங்குபெறவும் உதவியாக உள்ளது. நவீன கல்விக் கூடங்களில் இசை, பரதநாட்டியம்
ஆகிய கலைகளில் சான்றிதழ் (சர்டிபிகேட்), பட்டயம் (டிப்ளமா), பட்டப்படிப்பு (டிகிரி) என மூன்று நிலையிலும் மாணவரின் கலைத் தேர்ச்சி அங்கீகரிக்கப்படுகிறது. இந்தப் படிப்புகள் மூலம் பள்ளிகளில் இசை ஆசிரியர் பணி மேற்கொள்ள முடியும். இசையில் பி.எச்டி பெற்றவர்கள் கல்லூரி, பல்கலைக் கழகங்களில் பணியாற்றத் தகுதி பெறுவர். ஊடகங்களில் புது வகை பணிகள் இவர்களுக்காக காத்திருக்கின்றன.
பல்கலைக்கழகங்கள்
பல்கலைக் கழகங்களைப் பொருத்தவரையில்,சென்னை பல்கலைக் கழகம், அண்ணாமலை பல்கலைக் கழகம் (சிதம்பரம் அருகே அண்ணாமலைநகர்), தமிழ் பல்கலைக் கழகம் -தஞ்சை, மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகம் (திருநெல்வேலி), பாரதிதாசன் பல்கலைக்கழகம் (திருச்சி), அன்னை தெரசா பல்கலைக் கழகம் (கொடைக்கானல்) இவற்றில் பட்டப்படிப்பாக இசை சொல்லித் தரப்படுகிறது.
புதுச்சேரியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக் கழகம் இளங்கலை, முதுகலை, ஆய்வியல் நிறைஞர் (எம்ஃபில்), ஆய்வியல் (பிஹெச்டி) பட்ட அளவில் இசை கற்பிக்கப்படுகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தின் கீழுள்ள பல கல்லூரிகளிலும் இசை பயிற்றுவிக்கப்படுகிறது.
அரசு இசைக் கல்லூரிகள்
சென்னை, மதுரை, திருவையாறு, கோவை ஆகிய நகரங்களில் அரசு இசைக் கல்லூரிகள் உள்ளன. தமிழ்நாட்டில் அரசு இசைக் கல்லூரிகள் கலைப்பண்பாட்டுத் துறையின் மேற்பார்வையில் நடத்தப்படுகின்றன. இவற்றில் தேவாரம் இசைப்பது கற்றுத் தருவதோடு, கர்நாடக மரபிசையில் வாய்ப்பாட்டு தனியாக கற்றுத்தரப்படுகிறது. இதனுடன் இசைக் கருவிகளும் வாசிக்க கற்றுத்தரப்படுகிறது. வயலின், வீணை, மிருதங்கம், கடம், நாகஸ்வரம், தவில், பரதநாட்டியம் கற்றுத் தரப்படுகின்றன. இதைத் தவிர பரதநாட்டியத்துக்கான நட்டுவாங்கம் ஒரு கலையாக பயிற்றுவிக்கப்படுகிறது. இதனுடன் கூட, நாட்டுப்புற இசை, நாட்டுப்புற நடனம் ஆகியவற்றிலும் பயிற்சியளிக்கப்படுகிறது. சான்றிதழ் படிப்பு, டிப்ளமா படிப்பு என்ற நிலைகளில் இங்கு கல்வி வழங்கப்படுகிறது. தற்போது, திருவையாறு அரசு இசைக் கல்லூரியில் இளங்கலைப் பட்டப்படிப்பு வழங்கப்படுகிறது.
மாவட்ட அரசு இசைப்பள்ளிகள் தமிழகத்தில் 22 மாவட்டங்களில் அரசு இசைப்பள்ளிகள் தமிழக அரசால் நடத்தப்படுகின்றன. இவற்றில் நாகஸ்வரம், தவில், பரத நாட்டியம், வாய்ப்பாட்டு, வீணை, வயலின், மிருதங்கம், புல்லாங்குழல் போன்றவற்றில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இவை தவிர இந்தப் பள்ளிகளில் தேவாரம் இசைக்கக்கற்றுத் தரப்படுகிறது. இவை முழுநேரப் பள்ளிகள். மூன்றாண்டு காலப் படிப்பான இவற்றின் முடிவில் சான்றிதழ் வழங்கப்படுகின்றது.
மாலை நேர இசைப் பயிற்சி மையங்கள்
சென்னை, மதுரை அரசு இசைக் கல்லூரிகளில் இரண்டு வருடப் படிப்பாக இசை பயிற்றுவிக்கப்படுகிறது. வாய்ப்பாட்டு, வீணை, வயலின், மிருதங்கம் ஆகியவற்றில் பயிற்சி அளிக்கப்படுகிறது. மதுரை மையத்தில் இவற்றுடன்கூட பரதநாட்டியமும் பயிற்றுவிக்கப்படுகிறது.
ஆசிரியர் பயிற்சி
அரசு இசைக் கல்லூரிகளில் இசை ஆசிரியர் பயிற்சிக்கான கல்வியும் வழங்கப்படுகிறது. இதன் கால அளவு ஓராண்டாகும். ஓராண்டுப் பயிற்சியின் முடிவில் டிப்ளமோ வழங்கப்படுகிறது. பள்ளி, கல்லூரிகளில் இசை ஆசிரியராகப் பணியாற்ற மிகவும் உதவிகரமாக உள்ளது இது. மாவட்ட அரசு இசைப் பள்ளிகளிலும், அரசு இசைக் கல்லூரிகளிலும் ஆண், பெண், ஆகிய இருபாலருமே இசை ஆசிரியர் பயிற்சி மேற்கொள்ளலாம்.
இசை பயிற்றுவிக்கும் பிற கல்லூரிகள்
சென்னை ராணி மேரி கல்லூரி அரசு பெண்கள் கல்லூரியாகும். தன்னாட்சி பெற்ற இந்தக் கல்வி நிறுவனம் சென்னை பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கி வருகிறது. இங்குள்ள இசைத் துறையில் இசையை மையமாக எடுத்துக் கொண்டு, இளங்கலை, முதுகலை, ஆய்வியல் நிறைஞர் (எம்.ஃபில்), ஆய்வுப் பட்டம் (பி.ஹெச்டி) என்னும் அளவில் படிக்கலாம்.
தமிழிசைக் கல்லூரி
சென்னையில் ராஜா சர் அண்ணாமலை செட்டியாரால் துவங்கப்பட்ட தமிழிசைச் சங்கத்தின் கீழ் தமிழிசைக் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு காலை, மாலை நேரக் கல்லூரிகளில் குரலிசை (வாய்ப்பாட்டு), வீணை, வயலின், மிருதங்கம், நாகஸ்வரம், தவில் ஆகியவை பயிற்றுவிக்கப்படுகின்றன. தேவாரம் பாடுவது கற்றுத் தரப்படுகிறது. இவை சான்றிதழ், பட்டயப் படிப்புகள் அளவில் கற்றுத் தரப்படுகின்றன. இக்கல்வித் திட்டங்கள் கலைப்பண்பாட்டுக் கழகத்தின் மேற்பார்வையில் நடத்தப்படுகின்றன. இசையில் இளங்கலை வகுப்பு சென்னை பல்கலைக்கழகத்தின் மேற்பார்வையில் நடத்தப்படுகிறது. பல்கலைக் கழகம் இளங்கலை பயில்வோருக்குப் பட்டம் வழங்குகிறது. மேலும், இசை ஆசிரியர் பயிற்சி வகுப்பும் உண்டு. ஆண், பெண் இரு பாலரும் இதில் சேரலாம்.
கலாக்சேத்ரா
சென்னையில் உள்ள கலாúக்ஷத்ரா உலகப் புகழ்பெற்ற கலைக்கூடம். நாட்டியம், வாய்ப்பாட்டு, இசைக்கருவிகள், நுண்கலைகள் இவற்றில் டிப்ளமா கல்வி வழங்குகிறது இந்தக் கல்வி நிலையம். இசை, நாட்டியத்தில் போஸ்ட்-டிப்ளமா அளிக்கிறது.
எம்.ஜி.ஆர். ஜானகிமகளிர் கல்லூரி
இங்கு "நாட்யா' என்ற சிறப்பு பாடத் திட்டம் கற்பிக்கப்படுகிறது. இசையும் நடனமும் ஒருங்கிணைந்த பாடத்திட்டமாக இது உள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தின் முதுகலைப் பட்டம் பெறுவதற்கான படிப்பு இது என்பது குறிப்பிடத் தக்கது.
சீதாலட்சுமி ராமஸ்வாமி கல்லூரி
திருச்சியில் உள்ள தன்னாட்சி பெற்ற பெண்கள் கல்லூரியான இது பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிவருகின்றது. இங்கு இசையில் இளங்கலை, முதுகலை, ஆய்வுப்பட்டங்களுக்கான வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
சாஸ்திரா பல்கலைக்கழகம்
தஞ்சையிலுள்ள இப்பல்கலைக்கழகம் அஞ்சல் வழியில் இளங்கலை, முதுகலைப் பட்டப்படிப்பாக பரதநாட்டியம் கற்றுத் தருகிறது. இதன் நேரடி வகுப்புகளை பிரபல பரதநாட்டியக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம் நடத்துகிறார்.
கலைக்காவிரி காலேஜ் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ்
திருச்சியிலுள்ள இக்கல்லூரியில் இசை, பரத நாட்டியம் பயிற்றுவிக்கப்படுகின்றன. ஆண், பெண் இருபாலரும் கல்வி பெறலாம். இளங்கலை, முதுகலை, ஆய்வியல் நிறைஞர், ஆய்வியல் ஆகிய பட்டங்களுக்குக் கல்வி வழங்கப்படுகிறது. பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கி வரும் கல்லூரி இது. இசை, பரதநாட்டியத்தில் இளங்கலை, முதுகலை ஆகியவற்றை அஞ்சல் வழியாகவும் பயிற்றுவிக்கின்றது இக் கல்வி நிறுவனம்.
மதுரை சத்குரு சங்கீத வித்யாலயா
இசையில் இளங்கலை, முதுகலை, ஆய்வியல் நிறைஞர், ஆய்வுப்பட்டம் ஆகியவற்றுக்கான வகுப்புகள் இங்கு உள்ளன. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்றது. ஆண், பெண் இரு பாலாரும் இங்கு பயிற்றுவிக்கப்படுகின்றனர்.
அப்படியா!-1
1927-ம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இசைப் பயிற்சி முதன் முதலில் தொடங்கப்பட்டது. 1928-ம் ஆண்டு ராணி மேரி கல்லூரியில் இசைப் பயிற்சி தொடங்கியது. 1931-ம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகத்தில் இசைப் பயிற்சி தொடங்கியது. 1945-ம் ஆண்டு சென்னையில் அரசு இசைக் கல்லூரி அமைக்கப்பட்டது.
அப்படியா!-2
பழநி தண்டாயுதபாணி கோயில் தேவஸ்தானம் சான்றிதழ் படிப்பாக நாகஸ்வரம், தவில் ஆகிய இசைக் கருவிகள் வாசிக்க பயிற்றுவிக்கிறது. 4 ஆண்டுகள் பயிற்சி காலத்தில் இலவச தங்கும் வசதி, உணவு, மருத்துவ வசதி அளிக்கப்படுகின்றன. தீபாவளி நாளில் ஒரு ஜோடி உடையும் மாணவர்களுக்கு அளிக்கப்படுகிறது. கீவளூர் கணேசன், பந்தநல்லூர் லட்சுமிகாந்தன், திருப்பாம்புரம் சுவாமிநாதன் உள்ளிட்ட பிரபல நாகஸ்வர கலைஞர்கள் இந்த இசைப் பள்ளியில் பயின்றவர்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.