லட்சியம் பெரிதாக இருந்தால் யாரும் வெற்றி பெற முடியும்: கலாம்

ஒவ்வொருவரும் லட்சியத்தை பெரிதாக வைத்துக் கொண்டால் வாழ்வில் நினைத்ததை சாதிக்க முடியும்
லட்சியம் பெரிதாக இருந்தால் யாரும் வெற்றி பெற முடியும்: கலாம்
Updated on
2 min read

ஒவ்வொருவரும் லட்சியத்தை பெரிதாக வைத்துக் கொண்டால் வாழ்வில் நினைத்ததை சாதிக்க முடியும் என குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் தெரிவித்தார்.

பரமக்குடி ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளியின் வைரவிழா ஆயிர வைசிய சபைத் தலைவர் ராசி.என்.போஸ் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு சபையின் செயலாளர் எஸ்.கே.பி. லெனின்குமார், ஆயிர வைசிய மெட்ரிக். பள்ளியின் செயலாளர் பி.என்.செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளித் தலைமை ஆசிரியர் இ.வீரராஜ் வரவேற்று பேசினார்.

விழாவில், முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் பள்ளி மாணவ,மாணவிகளுடன் நடத்திய கலந்துரையாடலில் பேசியது: நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை. உன்னால் வெற்றியடைய முடியும் என்பதே என் வாழ்வில் நான் கற்றுக்கொண்ட பாடம். மாணவர்களாகிய நீங்கள் சிறு லட்சியங்களாக வளர்த்துக் கொள்ளாமல் பெரிய லட்சியங்களாக மனதில் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும். அறிவு, உழைப்பு, விடாமுயற்சி, தைரியம் இந்த நான்கும் இளைஞர்கள் முக்கியமாக கடைப் பிடிக்க வேண்டியவைகளாகும்.

ஒருவர் யாராக இருந்தாலும், எப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்தாலும் அவரிடம்  மனஉறுதி இருந்தால் வெற்றி பெற முடியும் என்பதற்கு பல உதாரணங்களை சொல்ல முடியும். மின்சாரத்தை கண்டு பிடித்த தாமஸ் ஆல்வா எடிசன், விமானத்தை கண்டு பிடித்த ரைட் சகோதரர்கள், தொலைபேசியை கண்டு பிடித்த அலெக்சாண்டர் கிரகாம்பெல், வானமும், கடலும் நீல நிறமாக இருப்பது எப்படி என்று கண்டு பிடித்து நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி.ராமன், ரேடியத்தை கண்டுபிடித்து இருமுறை நோபல் பரிசு பெற்ற மேரி கியூரி, கணித மேதை ராமானுஜம் போன்றவர்கள் அனைவரும் அவர்களுக்கே உரிய லட்சியங்களுடன் தனித்தன்மையுடன் வாழ்ந்ததால்தான் வரலாற்றில் இடம் பிடித்தார்கள்.

இது போன்று ஒவ்வொரு மனிதனும் வரலாற்றுப் புத்தகத்தில் இடம் பிடிக்க முடியும். 60 கோடி இளைஞர்கள் இந்தியாவின் மிகப்பெரிய சொத்தாக இருக்கிறார்கள். இதில் 25 கோடி மக்கள், 6 லட்சம் கிராமங்களில் வசிக்கிறார்கள். இவர்கள் எந்தச் சூழ்நிலையில் இருந்தாலும், எந்தக் கிராமத்தில் வாழ்ந்தாலும் இவர்களது லட்சியம் பெரியதாக இருந்தால் மட்டுமே வாழ்க்கையில் நினைத்தது சாதித்து வெற்றி பெற முடியும்.

ராமேசுவரம் தீவில் நான் படித்த பள்ளியில் போதிய வசதியில்லை. எனது கணித ஆசிரியர் ஸ்ரீராமகிருஷ்ணனும், அறிவியல் ஆசிரியர் சிவசுப்பிரமணிய அய்யரும் என் வாழ்வின் முன்னேற்றத்துக்கு காரணமாக இருந்தவர்கள்.

நான் படித்த வகுப்பில் கணக்கில் பலரும் குறைந்த மதிப்பெண் எடுப்பதை அறிந்து அதிக மதிப்பெண் வாங்குவதற்காக ஒரு திட்டத்தை தீட்டி கணிதத்தை அனைவரும் எளிமையாக புரியும்படி செய்து பலரும் அதிக மதிப்பெண் வாங்க காரணமாக இருந்தார் ஆசிரியர். அதன் பிறகு வகுப்பில் எந்த மாணவருக்கும் கணிதத்தின் மீது இருந்த பயம் இல்லாமல் போய் விட்டது. எனவே நமக்கு அறிவைத் தரும் ஆசிரியர்களையும்,பெற்றோர்களையும் நாம் மதித்து நடக்க வேண்டும்.

நூறு கோடி பேர் உள்ள இந்தியாவில் ஆளுக்கு ஒரு மரக்கன்று நட்டால் அதுவே வரும் காலத்தில் இந்தியா சுத்தமான நாடாக மாறிவிட வாய்ப்பாக இருக்கும். நம் நாட்டில் விவசாயம் அழிந்து விடவில்லை. கடந்த ஆண்டு மட்டும் 250 மில்லியன் டன் அரிசி உற்பத்தியாகிறது. விவசாயிகள் மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்றார் கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com