
மதுரை: தாய் மொழிக் கல்வியாலே அறிவு மேம்படும். ஆங்கிலம் என்பது அறிவல்ல, அதுவும் ஒரு மொழிதான் என பட்டிமன்ற பேச்சாளர் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் கூறினார்.
மதுரையில் பபாசி சார்பில் நடைபெற்றுவரும் 11 ஆவது புத்தகத் திருவிழாவில் வியாழக்கிழமை அவர் ஆற்றிய கருத்துரை: சங்கம் வைத்து தமிழ் வளர்த்த ஊர் மதுரை. இங்குதான் இறைவனே இசைத்தமிழின் சிறப்பை அறியச்செய்தார். தமிழ் சங்க இலக்கியத்தில் மணிமேகலை எழுதிய சீத்தலைச் சாத்தனாருக்கு புத்தர் பேசிய பாலி மொழி தெரிந்திருக்கிறது. ஆகவே பல மொழிகளை அறிந்திருப்பதில் தவறில்லை. ஆனால், தாய் மொழியில் கற்பதே நமது அறிவை மேம்படுத்தும்.
தமிழகத்தில் ஆங்கில மோகம் அதிகரித்துவிட்டது. கிராமத்து பள்ளியில் படித்தவர்கள் கூட தங்களது திருமண அழைப்பிதழை ஆங்கிலத்தில் அச்சடிக்கும் நிலையே உள்ளது. ஆங்கிலம் என்பது அறிவு மொழி என்ற தவறான கருத்து நிலவுகிறது. இது சரியல்ல.
தற்கால தமிழ் எழுத்தாளர்களும் வேற்று நாட்டு இலக்கியத்தை பேசும் அளவுக்கு நமது சங்க இலக்கியத்தை குறிப்பிட்டு பேசுவதில்லை. பொறியியல், மருத்துவம், விவசாய கல்லூரியில் சேருவதற்குரிய தகுதியில் தமிழ் பாட மதிப்பெண்ணையும் சேர்த்தால் தமிழ் மொழிக் கல்வி வளரும் நிலை ஏற்படும் என்றார். நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து சர்வோதய இலக்கியப் பண்ணை பொருளாளர் க.மு.நடராஜன் பேசியது: தமிழுக்காக உயிரைக் கொடுப்போம் என முழங்கிய தமிழர்கள் இப்போது ஆங்கிலத்தில் கற்பதையே பெருமையாக கருதுகின்றனர். தமிழகத்தில் இளந்தலைமுறையே தமிழ் தெரியாத நிலையில் வளர்வது வருந்தத்தக்கது.
உலகப்புகழ் பெற்ற அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டீன் ஜெர்மன் மொழியில் மட்டுமே பேசத் தெரிந்திருந்தார். ஆகவே தாய் மொழியில் கல்வி கற்பதுதான் சிறந்தது. ஆங்கிலத்தை தேவைப்படும் போது நாம் கற்றுக்கொள்ளமுடியும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.