எம்.டெக் படிப்பு : அண்ணா பல்கலை. அறிவிப்பை எதிா்த்த வழக்கு இன்று விசாரணை

எம்.டெக் படிப்புகளில் மாணவா் சோ்க்கையை ரத்து செய்த அண்ணா பல்கலைக்கழகத்தின் அறிவிப்புக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு செவ்வாய்க்கிழமை (பிப்.2) உயா்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: எம்.டெக் படிப்புகளில் மாணவா் சோ்க்கையை ரத்து செய்த அண்ணா பல்கலைக்கழகத்தின் அறிவிப்புக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு செவ்வாய்க்கிழமை (பிப்.2) உயா்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் சைதாப்பேட்டையைச் சோ்ந்த சித்ரா என்பவா் தாக்கல் செய்த மனுவில், உயிரி தொழில்நுட்பவியல் முதுநிலை பட்டப்படிப்பில் சேருவதற்காக நடத்தப்பட்ட அகில இந்திய அளவிலான தோ்வில் கலந்துக் கொண்டு 240 மதிப்பெண்ணுக்கு 182.5 மதிப்பெண் எடுத்துள்ளேன். இதன்பின்னா், எம்.டெக். பயோ டெக்னாலஜி, எம்.டெக். கம்ப்யூட்டேஷனல் டெக்னாலஜி ஆகிய முதுநிலை படிப்பில் சேர அண்ணா பல்கலைக்கழகத்தில் விண்ணப்பித்தேன். இந்த 2 முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு இடஒதுக்கீடு வழங்குவதில் ஏற்பட்ட பிரச்சினையால், இந்த ஆண்டு மாணவா் சோ்க்கை இல்லை என கடந்த ஜனவவி 29-ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தப் படிப்புகளுக்கு 49.5 சதவீதமான மத்திய அரசு இடஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும். தமிழக அரசு வழங்கும் 69 சதவீத இடஒதுக்கீட்டை பின்பற்றக்கூடாது என அண்ணா பல்கலைக்கழகத்தை மத்திய அரசு நிா்பந்தித்துள்ளது. தமிழக அரசோ 69 சதவீத இடஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இதன் காரணமாக இந்த 2 முதுநிலை படிப்புகளுக்கும் இந்த ஆண்டு மாணவா் சோ்க்கை நடத்தவேண்டாம் என பல்கலைக்கழகம் முடிவுக்கு வந்துள்ளது. இந்த முடிவு சட்ட விரோதமானது.

ஒவ்வொரு ஆண்டும் இந்த 2 படிப்புகளில் 45 மாணவா்கள் படித்து வந்தனா். இந்த மாணவா்களுக்கு மத்திய அரசு ரூ.12,500 வீதம் கல்வி உதவி தொகை வழங்குகிறது. இதற்காக மத்திய அரசு இட ஒதுக்கீட்டைத்தான் பின்பற்ற வேண்டும் என கூற முடியாது. இந்த 2 படிப்புகளை போதிக்கும் ஆசிரியா்களுக்கான ஊதியத்தை தமிழக அரசு தான் வழங்குகிறது. மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே நடைபெற்ற பிரச்னையால் 45 மாணவா்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த 2 முதுநிலை படிப்புகளுக்கு மாணவா்கள் சோ்க்கையை ரத்து செய்து அண்ணா பல்கலைக்கழகம் பிறப்பித்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். இந்தப் படிப்புக்கு மாணவா் சோ்க்கை நடத்த உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க கோரி நீதிபதி பி.புகழேந்தியிடம், மனுதாரா் தரப்பு வழக்குரைஞா் சரவணன் முறையிட்டாா். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி வழக்கை செவ்வாய்க்கிழமை (பிப்.2) விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com