நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது.. இதைச் செய்யாவிடில் பணம் வேஸ்ட்!

நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது கவனிக்க வேண்டிய மிக முக்கிய தகவல்.
நுழைவுத் தேர்வு - கோப்பிலிருந்து..
நுழைவுத் தேர்வு - கோப்பிலிருந்து..
Published on
Updated on
2 min read

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் முடிவுபெற்ற நிலையில், அரசு மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பயின்ற +2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வும் நிறைவு பெற்றுவிட்டது.

பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவர்கள், அடுத்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் சேர்க்கை பெறுவதற்கான நுழைவுத் தேர்வுக்குத் தயாராக வேண்டும்.

இதில்லாமல், ஜேஇஇ - முக்கிய நுழைவுத் தேர்வு, அதில் தேர்ச்சி பெற்றால் ஜேஇஇ -அட்வான்ஸ்டு தேர்வுகளுக்கும் தயாராக வேண்டும்.

எம்பிபிஎஸ் பயில விரும்புவோர் ஏற்கனவே நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருப்பார்கள். அதில்லாமல் ஏராளமான பொதுவான நுழைவுத் தேர்வுகளும், கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களுக்கான தேர்வுகளும் உதாரணமாக விஐடி, எஸ்என்யு போன்ற பல்கலைக்கழகங்களில் சேர்க்கை பெறுவதற்கான நுழைவுத் தேர்வுகளுக்கும் விண்ணப்பித்து வருவார்கள்.

இதுபோன்ற நுழைவுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும்போது, பல்வேறு விஷயங்களிலும் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதில் முக்கியமானது மிகச் சரியான இணையதளத்துக்குத்தான் வந்திருக்கிறோமா என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

சில பல்கலைக்கழகங்கள் சென்னை, தில்லி என பல்வேறு நகரங்களில் செயல்படும். இவற்றுக்கான மாணவர் சேர்க்கை முறை, நுழைவுத் தேர்வுகள் எல்லாம் தனித்தனியாகவே நடக்கும். ஆனால், ஒன்றுக்கும் மேற்பட்ட நகரங்களின் பல்கலைக்கழகங்கள் ஒரே இணையதளத்தில் வரிசைப்படுத்தப்பட்டிருக்கும்.

ஒருமுறை இணையதளத்துக்குள் சென்று நமக்கு சென்னை பல்கலைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று கிளிக் செய்திருப்போம். ஆனால் நாம் கிளிக் செய்வதற்கு ஒரு சில விநாடிகள் முன், அந்தப் பக்கமானது ரிஃபிரஷ் ஆகி வந்திருக்கும். நமக்கு முன் இருப்பது தில்லி அல்லது வேறு நகரத்தின் பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிக்கும் பக்கமாக இருக்கும். அது தெரியாமல் நாம் விண்ணப்பிக்க என்ற வாய்ப்பைத் தேர்வு செய்து விண்ணப்பத்தை முழுக்க பூர்த்தி செய்து நுழைவுத் தேர்வுக்கான கட்டணத்தையும் செலுத்திய பிறகுதான், நாம் சென்னைக்கு மாற்றாக வேறு நகரத்தில் உள்ள இதே பல்கலைக்கு விண்ணப்பித்திருப்பது தெரிய வரும்.

அழுது புரண்டாலும் மாண்டவர் வருவதுண்டோ என்பதுபோலத்தான் இதுவும். ஒருகாலத்திலும் இந்தத் தொகையை திரும்பப் பெறவே முடியாது. நாம் எத்தனை மின்னஞ்சல்கள், தொலைபேசி அழைப்புகள் செய்தாலும் எல்லாவற்றுக்கும் பதில் வருமே தவிர, பணம் வரவே வராது.

நாம் விண்ணப்பிக்க விரும்பும் பல்கலையின் நுழைவுத் தேர்வுக் கட்டணம் என்னவோ ரூ.1,000 ஆகக் கூட இருக்கலாம். ஆனால் தவறுதலாக பதிவு செய்த பல்கலையின் கட்டணம் ரூ.2,500 அல்லது ரூ.3,000 ஆகக் கூட இருந்திருக்கும். சோகத்திலும் இது பெரும் சோகமாக இருக்கும். இதில் தவறு என்று தெரிந்த பிறகு, மீண்டும் நாம் உரிய பல்கலைக்கு வேறு கட்டணம் செலுத்த வேண்டியது வரும்.

எனவே விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய பெரும்பாலும் கணினிகளைப் பயன்படுத்துங்கள். ஒவ்வொரு முறையும் எந்த யுஆர்எல்-இல் இருக்கிறோம் என்பதை சரிபார்த்துக் கொள்ளுங்கள். விண்ணப்பங்களை எங்கு வேண்டுமானாலும் சப்மிட் செய்துவிட்டு பிறகு தொடரும் வாய்ப்பு இருக்கும். எனவே, அதையும் ஒருமுறை பயன்படுத்தி சென்னை அல்லது நாம் தேர்வு செய்யும் நகரில் உள்ள பல்கலைக்குத்தான் லாக் இன் செய்திருக்கிறோமா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

கடந்த காலங்களில் இதுபோன்று பல நூறு மாணவர்கள் தவறாக வேறு நகர பல்கலைக்கு பணம் செலுத்தி, திரும்பக் கிடைக்காமலும், பணம் செலுத்திவிட்டோமே என்று அந்தத் தேர்வையும் செலவழித்து எழுதியிருப்பதும், சிலர் தேர்வெழுதிவிட்டோம், இடம் கிடைத்துவிட்டது என்பதற்காக சோறு, தண்ணீர் இல்லாமல், அந்தப் பல்கலைக்குச் சென்று படித்து வரும் நிலையும் காணப்படுகிறது.

எனவே, மாணவர்களும் பெற்றோர்களும் ஒரு பல்கலைக்கு விண்ணப்பிக்கும்போது கவனமாக செயல்படவும்.

இது ஒருபுறமிருக்க, எந்த வகையிலும் சேர்க்கை முறையில் தொடர்பில்லாத பல்கலைக்கழகங்கள், தனித்தனியாக நுழைவுத் தேர்வுகளை நடத்தும்போது, இணையதளத்தை மட்டும் ஒன்றாக வைத்திருப்பதும், இதுபோன்ற தவறுகள் ஏதோ ஒருவர் செய்தால் தெரியாமல் நடந்த தவறாக இருக்கலாம் என்று விட்டுவிடலாம் ஆனால் ஒரு ஆண்டில் மட்டும் நூற்றுக்கணக்கானவர்கள் எவ்வாறு தவறுதலான நகரத்தைத் தேர்வு செய்வார்கள், அவ்வாறு செய்யும்போது இதில் ஏதே தொழில்நுட்ப சிக்கல் இருப்பதையே காட்டுகிறது என்பதால் பல்கலைக்கழகங்களும் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்பதே பல ஆயிரத் தேவைகள் இருக்கும்போது சில ஆயிரங்களை ஏமாந்த பெற்றோரின் கோரிக்கையாக உள்ளது.

ஏமாந்தது ஏமாந்ததுதான். இனி விண்ணப்பிப்பவர்களாவது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com