பொறியியல் கல்வி! படைப்பாற்றலை கற்றுத் தரும் ஆட்டோமொபைல்!

பொறியியல் கல்வியின் வரிசையில் படைப்பாற்றலை கற்றுத் தரும் ஆட்டோமொபைல் பற்றி..
File photo
ஆட்டோமொபைல் பொறியியல்ENS
Updated on
2 min read

வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப ஆட்டோ உதிரிபாகங்கள் உற்பத்தி, ஆட்டோமொபைல் சார்ந்த தொழிற்சாலைகள் நாள்தோறும் பெருகி வருகின்றன. ஒரு காலத்தில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் துறையின் ஒரு அங்கமாக இருந்த ஆட்டோமொபைல் தொழில்நுட்பம், தற்போது தனித்துறையாக உருவெடுத்து இருக்கிறது.

உலக அளவில் இந்தியா மூன்று சக்கர வாகன தயாரிப்பில் முதல் இடத்திலும், இரண்டு சக்கர வாகன உற்பத்தியில் இரண்டாவது இடத்திலும் நான்கு சக்கர வாகன உற்பத்தியில் நான்காம் இடத்திலும் கனரக வாகன உற்பத்தியில் ஐந்தாம் இடத்திலும் உள்ளது. ஆண்டுக்கு சுமார் 2.8 கோடி புதிய வாகனங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன.

இந்தியாவின் பொருளாதார உற்பத்தி குறியீட்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.1 சதவீதம் என்ற அளவில் இத்துறையின் பங்களிப்பு உள்ளது. இத் துறையானது அசுர வேகத்தில் வளர்ந்து வருவதால் ஆட்டோமொபைல் படிப்புக்கான வரவேற்பும், ஆதரவும் பெருகி வருகிறது. இதன் மூலம் ஆட்டோமொபைல் பொறியாளர்களுக்கான தேவையும் அதிகரித்திருக்கிறது.

இதுகுறித்து சேலம் அன்னபூர்ணா பொறியியல் கல்லூரி ஆட்டோமொபைல் துறையின் தலைவர் என்.நெடுஞ்செழியன் கூறியது:

நான்கு ஆண்டு கால ஆட்டோமொபைல் என்ஜினீயரிங் படிப்பதற்கு பிளஸ் 2 வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல் படித்த மாணவர்கள் சேரலாம். அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் இப்படிப்பில் சேருவதாக இருந்தால், பொது கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும். நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் சேருவதாக இருப்பின் அவை நடத்தும் நுழைவுத்தேர்வை எழுத வேண்டும். ஐ.ஐ.டி. போன்ற மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்கள் எனில், ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு அவசியம்.

நவீன வாகன தொழில்நுட்ப தேவைகளுக்கு வடிவமைக்கப்பட்ட தன்னாட்சி பாடத்திட்டத்துக்கு ஏற்ப மாணவ மாணவிகளுக்கு கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது. இந்தப் படிப்பில் செயல்முறையுடன் கூடிய விரிவுரை அடங்கிய பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு

பொதுவாக, ஆட்டோமொபைல் என்ஜினீயர்களுக்கு வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. ஆட்டோ உதிரி பாகங்கள் தயாரிப்பு தொழிற்சாலைகள், கார்கள், டிரக்குகள் உள்ளிட்ட வாகன தயாரிப்பு நிறுவனங்கள், வாகன சேவை மையங்கள், என்ஜின் மற்றும் கியர் பாக்ஸ் தயாரிப்பு நிறுவனங்கள், சேசிஸ் எனப்படும் உடலமைப்பு தயாரிப்பகங்கள், மாநில போக்குவரத்துக்கழகங்கள், தனியார் போக்குவரத்து நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்கள் என தனியார் துறையிலும், மோட்டார் வாகன ஆய்வாளர், தொழிற்சாலை ஆய்வாளர் போன்ற அரசு துறைகளிலும் வேலைவாய்ப்புகள் பெறலாம் என்றார்.

இந்தத் துறையில் உயர்கல்விக்கான வாய்ப்புகள், வேலைவாய்ப்பை வழங்க போட்டி போடும் முன்னணி நிறுவனங்கள், எதிர்கால சவால்கள் குறித்து கேஎஸ்ஆர் பொறியியல் கல்லூரியின் ஆட்டோமொபைல் துறை தலைவர் டாக்டர் ஆர்.வெங்கடாசலம் கூறியதாவது:

வாகன டிசைனிங் நிறுவனங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களிலும் டிசைனிங் மற்றும் படைப்பாற்றல் திறன் உள்ள ஆட்டோமொபைல் என்ஜினீயர்களுக்கு வாய்ப்புகள் குவிந்துள்ளன. மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், சாப்ட்வேர், டிசைனிங் என பல்துறை பொறியியல் அறிவை ஒருங்கே பெற்றிருப்பதால் அவர்கள் எளிதாக வேலைவாய்ப்பை பெற முடியும்.

ஏற்கனவே சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பன்னாட்டு கார் தயாரிப்பு நிறுவனங்களும், இருசக்கர வாகன தயாரிப்பு தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன.

இன்னும் பல புதிய நிறுவனங்களும் கால்பதிக்க உள்ள சூழலில், ஆட்டோமொபைல் என்ஜினீயரிங் படிக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு என்பது ஒரு பிரச்னையாக இருக்காது. உயர்கல்வி வாய்ப்புகளும் நிறையவே உள்ளன என்றார்.

சிறப்பம்சங்கள்

ஆட்டோமொபைல் என்ஜினீயரிங் என்பது மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், சாப்ட்வேர், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்டவற்றை ஒருங்கிணைத்து வடிவமைக்கப்படும் படிப்பாகும்.

வாகன உதிரி பாகங்களை வடிவமைத்து தயாரிப்பதில் ஆட்டோமொபைல் என்ஜினீயரிங் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தப் படிப்பில் பாடங்களைவிட செயல்முறைக்குத்தான் அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர்.

- சி.ஆர்.எம். சபரி

File photo
பொறியியல் கல்வி! புதுமையை புகுத்தும் கணினி அறிவியல்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com