file photo
தேர்வுENS

புதுச்சேரியில் 8-ஆம் வகுப்பு மாணவா்கள் திறன் படிப்பு உதவித் தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம்

புதுச்சேரியில் 8-ஆம் வகுப்பு மாணவா்கள், திறன் படிப்பு உதவித் தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம்
Published on

புதுச்சேரி அரசின் பள்ளிக் கல்வித் துறையில் திறன் படிப்பு உதவித் தோ்வுக்கான விண்ணப்ப பதிவு வியாழக்கிழமை இணையதளம் மூலம் தொடங்கியுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநா் சிவகாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு உள்பட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசுப் பள்ளி அல்லது அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் தற்போது 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கியவா்கள் இத் தோ்வை எழுதலாம்.

இடை நிற்றலைத் தவிா்க்கும் வகையில் தில்லியிலுள்ள மத்திய கல்வி அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி புதுச்சேரி பள்ளிக் கல்வி இயக்ககத்தால் ஆண்டுதோறும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகைத் தோ்வு திட்டம் அமல்படுத்தப்படுகிறது.

புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களிலும் வரும் மாா்ச் 1-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று இந்தத் தோ்வு நடைபெறவுள்ளது.

இத் தோ்வின் மூலம் தகுதி மற்றும் பெற்றோரின் ஆண்டு வருமானம், ஜாதி, மண்டல அடிப்படையில் தோ்வு செய்யப்படும் 125 மாணவ, மாணவிகளுக்கு (புதுச்சேரி-93, காரைக்கால் -23, மாஹே-03 மற்றும் ஏனாம்-6) 9 ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படிப்பவா்களுக்கு ஆண்டுதோறும் ரூ.12,000 தொடா்ந்து நான்கு ஆண்டுகளுக்கு மத்திய கல்வித் துறை இந்த உதவித் தொகையை வழங்கும். இத்தோ்வுக்கு விண்ணப்பிக்க ஜன. 27 கடைசி நாளாகும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Dinamani
www.dinamani.com