பள்ளிக்கூடத்தில் 14 ஆண்டுகள் முழுமையாகப் படித்து முடித்து உயர் கல்விக்கென கல்லூரிக்குள் நுழைவது ஒவ்வோர் இளைஞரின் வாழ்விலும் மிக முக்கிய தருணம். இதுவரை பள்ளிக்கூடத்தில் ஆசிரியரின் முழுமையான வழிகாட்டுதலைப் பின்பற்றிப் படித்து தேர்வுகளை எதிர்கொண்டவர்கள் இனி சுயமாகவும் சுதந்திரமாகவும் சிந்தித்து செயல்பட வேண்டிய இடத்தை அடைகிறார்கள்.
இன்றைய மாணவர்கள் கற்றுக்கொள்வதற்குப் பல வாய்ப்புகள் கிடைக்கின்றன. வேலைவாய்ப்புக்கான கல்வியோடு திறன்களை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்புகளும் குவிந்து கிடக்கின்றன. தனது ஆர்வத்திற்கேற்ப அவற்றை அடையாளம் கண்டு முன்னேற்றத்திற்கான வழிகளில் மகிழ்ச்சியோடு பயணிக்கும் காலம் கல்லூரிக் காலம்.
சிலர் இந்தப் புதிய வாழ்க்கை முறையால் தடுமாற்றம் கொள்வதும் உண்டு. கல்லூரியின் பிரம்மாண்டம் அவர்களை மலைக்க வைக்கிறது. சிறிய ஊர்புறங்களில் இருந்து வரும் மாணவர்கள் பெருநகரங்களில் படித்துவிட்டு வரும் மாணவர்கள் என அனைவரும் சங்கமிக்கும் இடமாகக் கல்லூரிகள் இருப்பதால் இத்தகைய தடுமாற்றம் இயல்பானதாகவும் இருக்கிறது. தன்னம்பிக்கையோடு கல்லூரிக்குள் நுழையும் போது மாணவர்களின் செயல்திறம் அதிகரிக்கும்.
தன்னம்பிக்கை என்பது ஒவ்வொரு மாணவருக்கும் அவசியமான அடிப்படைப் பண்பு. மாணவரின் தனிப்பட்ட வளர்ச்சிக்குக் காரணமாகவும் இருக்கிறது. ஆக்கபூர்வமான செயல்பாடுகளுக்கு மாணவர்கள் தன்னம்பிக்கையோடு கல்வியை அணுகுவது அவசியம். தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வதற்கான பயிற்சிகள் கல்லூரிக்குப் புதிதாக வரும் மாணவர்களுக்கு அத்தியாவசியம் ஆகிறது.
மாணவர்கள தன்னம்பிக்கையை வளர்ப்பதற்கான மிகச் சிறந்த வழி தயக்கத்தை விடுத்து மனதில் நினைப்பதை வெளிப்படையாகப் பேச முயற்சிக்க வேண்டும். கூச்ச சுபாவமுள்ள மாணவர்கள் தங்கள் தயக்கம் மற்றும் கூச்சத்தை விட்டு வெளிவந்தாலே கல்லூரிக் காலத்தின் மகிழ்ச்சியை அனுபவிக்க முடியும். மனம் திறந்து பேசுங்கள். நீங்கள் கிராமத்தில் இருந்து வந்திருந்தாலும் உங்கள் உலகம் இனிமேல் தான் உருவாகி விரியப் போகிறது. அதனால் நம்பிக்கையோடு சக மாணவர்களோடும் பேராசிரியர்களோடும் உரையாடுங்கள்.
பள்ளிக்கூடத்தில் ஆசிரியரைச் சார்ந்தே படித்து வந்திருப்பீர்கள். இனி நீங்களே உங்கள் பாடங்களுக்கான விஷயங்களைத் தேடிப் படிக்கத் தொடங்குங்கள். அறிவியல் முதலாக மொழிப் பாடம் வரை எந்தத் துறையைச் சேர்ந்தவராக இருந்தாலும் துறை சார்ந்து உலகில் ஏற்படும் முன்னேற்றங்களைத் தேடித் தெரிந்து கொள்ளுங்கள். தேர்ந்தெடுத்துள்ள துறையில் நமக்குள்ள அறிவு நம்மை முழுமையான தன்னம்பிக்கை கொண்ட மாணவராக உருவாக்கும்.
மாணவர்கள் தங்கள் செயல்களை ஒழுங்கு முறையில் வடிவமைத்துக் கொள்வது கம்பீரத்தை உயர்த்தும். பாடங்களை ஆராய்ச்சி நோக்கில் அணுகுவது அதற்குத் தேவையான திறன்களை வளர்த்துக் கொள்வது என தங்களுக்கிருக்கும் சுதந்திரத்தைப் பயன்படுத்தி புதிய சாதனைகளைப் படைக்க முடியும். இத்தகைய செயல்பாடுகள் கல்லூரிக்குள் மட்டுமல்ல வாழ்நாள் முழுவதும் பயன் தரும். தனித்த அடையாளத்தை இதனால் அடையலாம்.
கல்வி என்பது ஒரு துறையில் படித்து அதற்கான அறிவைப் பெறுவது மட்டுமல்ல. படித்த படிப்பை நமது வாழ்வில் நடைமுறையில் இணைத்துக் கொள்வதற்கான புத்திசாலித்தனமும் கற்றுக் கொள்ள வேண்டும். பல மாணவர்கள் மதிப்பெண்கள் பெறுவதில் காட்டும் கவனத்தைத் தங்கள் மனதை போட்டிகள் நிறைந்த உலகத்திற்குத் தயார்ப்படுத்திக் கொள்வதில் காட்டுவதில்லை. இதில் புதிதாக கல்லுரிக்குச் செல்லும் மாணவர்கள் விழிப்போடு இருக்க வேண்டும். பேராசிரியர்கள் அனுபவம் மிக்கவர்கள். அவர்களை அணுகிப் பாடங்கள் தாண்டி கற்றுக்கொள்வதற்கான வழிகளை அறியலாம்.
கல்லூரி உங்களை வளர்த்துக் கொள்வதற்கான பயிற்சிப் பட்டறை. அங்கே நீங்கள் உங்கள் ஆளுமையை வளர்த்துக் கொள்ள நீங்கள் விரும்பும் திறன்களை வளர்த்துக் கொள்ளுங்கள். கல்லூரிகளில் கிடைக்கும் வசதிகளை முற்றிலும் நமது முழுமையான வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொண்டால் மகிழ்ச்சியின் ஊற்றாகக் கல்லூரி இருக்கும்.
வளர்ந்து வரும் அறிவியல், வேகமான உலகம், போட்டிகளின் கடுமை போன்றவற்றால் மனதில் பயம் தோன்றலாம். மாணவர்கள் பயத்தை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிந்துவிட வேண்டும். அச்சம் தவிர்த்தால் மட்டுமே உச்சம் தொடுவது சாத்தியமாகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நம்பகமான பேராசிரியர்களின் உதவியை நாடுங்கள். சில பேராசிரியர்கள் மாணவர்களின் மனநிலையைப் புரிந்து கொண்டு நட்போடு பழகக் கூடியவர்களாக இருப்பார்கள்.
அவர்களுடன் நட்பை வளர்த்துக் கொள்ளுங்கள். இந்த நட்பு உங்கள் மனதில் அல்லது கல்லூரி நாள்களில் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதில் பக்கபலமாக இருக்கும்.
உங்களுக்குள் திறமைகள் மண்டிக்கிடக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். உங்கள் திறமைகளை அடையாளம் காணும் காலமாகக் கல்லூரிக் காலத்தைப் பாருங்கள் உற்சாகமும் ஆனந்தமும் நிறைந்த காலமாக கல்லூரிக் காலம் அமைந்துவிடும். ஒவ்வொருவரும் தனித்துவம் மிக்கவர்கள். ஒவ்வொரு மாணவருக்கும் சிறப்பு குணங்களும் திறமைகளும் நிச்சயம் இருக்கும். உங்களின் திறமைகளை விருப்பங்களை வெளிப்படுத்துங்கள். இதனால் நீங்களே உங்களைப் பெருமையாக உணர்வீர்கள். இந்த உணர்வு இன்னும் அதிக உத்வேகத்துடன் செயல்படச் செய்யும்.
உங்கள் லட்சியத்தை அடையாளம் காணவும் இலக்குகளை அடைவதற்கான தகுதியைப் பெறவும் ஊக்கம் கொள்ளுங்கள். இலக்குகளை அடைய சிறிய முயற்சியை ஒவ்வொரு நாளும் மேற்கொள்ளுங்கள். அற்புதங்கள் ஒரே நாளில் நிகழ்வதில்லை. அதேபோல பெரிய செயல்கள் பெருவெற்றியைத் தரும் என்றும் சொல்வதற்கில்லை. அன்றாடம் நீங்கள் மேற்கொள்ளும் சிறு முயற்சிகளும் உங்களுக்கான பெரிய வெற்றியை சாத்தியமாக்கலாம்.
புதிதாக ஒரு சூழலை கல்வியை கற்றல் முறையை நாம் காண இருக்கிறோம். தவறுகள் நேர்வது கற்றலின் ஒரு பகுதியே. நமது குறை என்று அவற்றை ஒருபோதும் கருதாதீர்கள். நேர்ந்த தவறு மீண்டும் நிகழாத படி பார்த்துக் கொண்டாலே கல்வியில் சிறக்கலாம். எதனையும் உன்னிப்பாகக் கவனிக்கும் பக்குவதைக் கல்லூரி உங்களுக்குக் கற்றுக் கொடுக்கும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் திறந்த மனதுடன் எதனையும் அணுகுவது மட்டுமே. அப்படியான அணுகுமுறை உங்களுக்குள் தன்னம்பிக்கையை வேரூன்றச் செய்யும்.
எந்தத் துறையில் நீங்கள் படித்தாலும் கலைகள் மொழி இலக்கியம் என்று ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். அதன் மூலம் உங்கள் படைப்பாற்றலை விரிவுபடுத்திக் கொள்ளுங்கள். இதனால் உங்கள் உள்ளம் பண்படும்.
பார்வை விரிவடையும். மனம் செம்மையாகும். மகிழ்ச்சி நிறையும். சுதந்திரத்தைக் கலைகளின் மூலம் முழுமையாக உணர முடியும். உங்கள் சுயத்தைக் கண்டுணர கலைகள் வழிகாட்டலாம். நண்பர்களுடன் இத்தகைய செயல்களில் ஈடுபடும் பொழுது ஒருவரை ஒருவர் உயர்த்தி விடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதோடு உங்கள் வாழ்வின் உன்னதமான நாள்களாக இந்தக் கல்லூரிக் காலம் இருக்கும்.
ஆற்றலும் உற்சாகமும் ஊற்றெடுக்கும் பருவம் இளமைப் பருவம். அதிலும் கல்லூரி நம்மைச் செதுக்கும் உயர்ந்த இடம். கல்லூரிக் காலம் ஒரு வரம். நேர்த்தியான ஆளுமையாக நாம் உருவாகும் இடமாகவும் நல்ல நண்பர்களை அடையும் காலமாகவும் வாழ்நாளெல்லாம் நினைந்து நினைந்து இன்புறும் அற்புதத் தருணங்களை சேகரிக்கும் களமாகவும் இருக்கும். இந்த வரத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். வாழ்க்கை வளம் பெறும்.
Summary
About how students who leave school with a thousand dreams and go to college can reach the top if they avoid fear.

2026-27 கல்வி ஆண்டுக்கான முதுநிலை படிப்பு சோ்க்கை பதிவுகள் தொடக்கம்: தில்லி பல்கலைக்கழகம் அறிவிப்பு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இன்றைய ராசி பலன் (19.05.2026) - மேஷம்

வார பலன்கள் (மே 15 - 21) - மகரம்
இன்றைய ராசி பலன் (04.05.2026) - சிம்மம்

வார பலன்கள் (மே 1 - 7) 12 ராசிகளுக்கும்! குழப்பம் நீங்கும் கடக ராசிக்கு!
விடியோக்கள்

அதிமுக பிரச்சினைக்கு காரணமே விஜய்தான் | Avadi Kumar | CM Vijay |TVK | ADMK | EPS | CV Shanmugam

ஜோதிட அலுவலக சர்ச்சை: விளக்கம் கொடுத்த தவெக எம்எல்ஏ கனிமொழி

எடப்பாடி பழனிசாமியின் கண் அசைவில் ஆட்சி அமைந்திருக்கும்! - CV Shanmugam பரபரப்பு பேட்டி | ADMK | EPS


