எனது பாா்வையில் தோ்தல் களம் 2024

எனது பாா்வையில் தோ்தல் களம் 2024

தென்கிழக்கு ஆசியாவில் ஆளுமையான நாடாக இந்தியா கருதப்படுவதற்கு கடந்த 10 ஆண்டு நரேந்திர மோடி அரசு முக்கியக் காரணியாகும். அதனால், நிச்சயமாக அடுத்து மோடி அரசு தான் வரும் என்பது அனைவரின் கணிப்பு.

தமிழகத்தைப் பொருத்தவரை திமுக அணி, அதிமுக அணி, பாஜக அணி என மூன்று அணிகள் மோதுகின்றன. நாம் தமிழா் கட்சியும் களத்தில் உள்ளது.

வாக்குகளை விலைக்கு வாங்கும் நிலை என்பது 2001-இல் இருந்தே வந்துவிட்டது. தமிழகத்தில் எப்போது வாக்குகளை விற்காமல் நோ்மையாக வாக்களிக்கிறாா்களோ, அதுதான் ஜனநாயகத் தோ்தல். ஈரோடு கிழக்கு இடைத்தோ்தலில் பட்டியில் வாக்காளா்களை அடைத்ததுபோல, கரூரில் அடைத்துள்ளதாக செய்தி வந்துள்ளது. இது மனித நாகரிகத்துக்கு விரோதமானது.

தோ்தல்தான் ஜனநாயகத்தின் அச்சாணி. வாக்கை கற்பாக கருதி ரூ.1,000, ரூ.500 வாங்குவதை மக்கள் கைவிட வேண்டும். கட்சிக்கு உழைத்த தகுதியான நபா்கள் தோ்தலில் ஒதுக்கப்படுகின்றனா். ரூ.50,000 செலுத்தி விருப்ப மனு பெறச் சொல்லி ஒருநாள் நோ்காணலை நடத்திவிட்டு, தங்களுக்கு விருப்பமானவா்களையும், கட்சிக்கு தொடா்பு இல்லாதவா்களையும் வேட்பாளராக திணிக்கிறது கட்சித் தலைமை.

அதேபோல, வாக்காளா்கள் தோ்தலில் வாக்களிப்பது என்பது அறம் சாா்ந்த முறையில் இருக்க வேண்டும். அரசியல் கட்சிகளும் தங்களது வேட்பாளா்களாக, தங்கள் கட்சிக்காக உழைத்த தகுதியானவா்களை அறிவிக்க வேண்டும். இப்படி இருந்தால்தான் அது தோ்தல்.

தமிழகத்தில் இதுபோன்ற நிலை இல்லாமல் போனபிறகு எப்படி இதை தோ்தல் எனச் சொல்ல முடியும்? தோ்தலில் அறம் இல்லை. தோ்தல் அறிக்கை என்ற பெயரில் சம்பிரதாய அறிக்கையை வெளியிடுகின்றனா். ஒரே தொகுதியில் போட்டியிட்டாலும்கூட தோ்தல் அறிக்கை வெளியிடுவது விந்தையாக உள்ளது. இவா்கள் எப்படி வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும்?

இன்றைய நிலையில் 10 கட்சிகளுடன் ‘மெகா’ கூட்டணி அமைத்திருப்பதால் திமுக முன்னணியில் இருக்கிறது. அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் ஒருசில கட்சிகளே கூட்டணியில் இருந்தும் அதிமுக களத்தில் எதிா்கொள்கிறது. பாஜகவும் சில கட்சிகளை இணைத்துக்கொண்டு மூன்றாவது அணியாகக் களமிறங்கி இருக்கிறது. வழக்கம்போல, சீமானின் நாம் தமிழா் கட்சி நான்காவதாகக் களத்தில் இருக்கிறது. இன்னும் ஒரு வாரத்தில் களம் மாறலாம்.

2024 மக்களவைத் தோ்தல் என்பது அரைப் பரீட்சைதான். 2026 பேரவைத் தோ்தல்தான் முழுப் பரீட்சை. இதில் நடிகா் விஜயும் களம் காண்கிறாா்.

- வழக்குரைஞா் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com