12-ஆவது மக்களவை தேர்தல் (1998)
முந்தைய தேர்தலைத் தொடர்ந்து ஏற்பட்ட கூட்டணி ஆட்சிகள் தொடர்ந்து கவிழ்ந்ததையடுத்து, நாட்டின் அன்றைய 32 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 543 மக்களவைப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க இத்தேர்தல் நடைபெற்றது.
இத்தேர்தலில் 60.58 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். நாடு முழுவதும் 7,73,494 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டன.
543 இடங்களுக்கு 176 கட்சிகளின் வேட்பாளர்கள், 1,915 சுயேச்சைகள் உள்பட 4,750 பேர் போட்டியிட்டனர்.
1998-ஆம் ஆண்டு, பிப்ரவரி 16, 22 மற்றும் 28-ஆம் தேதி ஆகிய 3 நாள்களில் வாக்குப் பதிவு நடைபெற்றது. இத்தேர்தலில் 61.97% வாக்குகள் பதிவாகின (முந்தைய தேர்தலைவிட 4.03% அதிகம்).
423 தொகுதிகளில் இருந்து பொது பிரதிநிதிகளும் 79 தொகுதிகளில் இருந்து பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளும் 41 தொகுதிகளில் இருந்து பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளும் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தேர்தலில் போட்டியிட்ட 274 பெண் வேட்பாளர்களில் 43 பேர் வெற்றி பெற்றனர். இதில் 15 பேர் பாஜகவையும் 10 பேர் காங்கிரûஸயும் சேர்ந்தவர்கள்.
பாஜக 182 இடங்களில் வென்றது. காங்கிரஸ் 141 இடங்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 32 இடங்களிலும் சமாஜவாதி கட்சி 20 இடங்களிலும் அதிமுக 18 இடங்களிலும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் 17 இடங்களிலும் தெலுங்கு தேசம் 12 இடங்களிலும் சுயேச்சைகள் 6 இடங்களிலும் வென்றன.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தெலுங்கு தேசம் கட்சி ஆதரவுடன் ஆட்சியமைத்து, வாஜ்பாய் பிரதமராக பொறுப்பேற்றார்.
இத்தேர்தல் ரூ.666.22 கோடி செலவில் நடத்தி முடிக்கப்பட்டது. பிரதி வாக்காளருக்கான செலவு ரூ.11-ஆகும்.
முந்தைய தேர்தலில் அதிகபட்சமாக 13,952 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதைக் கருத்தில் கொண்டு தேர்தலில் வேட்பாளர்கள் செலுத்தும் வைப்புத்தொகை ரூ.500-லிருந்து ரூ.10,000-ஆக உயர்த்தப்பட்டது. இதனால், வேட்பாளர்களின் எண்ணிக்கை 5,000-க்கும் கீழே குறைந்தது.
தொகுப்பு: மா.பிரவின்குமார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.