உ.பி.யில் ராபர்ட் வதேரா போட்டியா?

உத்தரப் பிரதேசத்தின் நேரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் போட்டியிடுவார்கள் என்று ஏ.கே. அந்தோனி தெரிவித்தார்.
உ.பி.யில் ராபர்ட் வதேரா போட்டியா?
ANI

உத்தரப் பிரதேசத்தில் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா போட்டியிடுவாரா என்ற கேள்விக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. அந்தோனி பதிலளித்துள்ளார்.

அமேதி மற்றும் ரேபரேலி தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர்களின் பெயர்கள் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், வயநாட்டில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

மேலும், அமேதியிலும் ராகுல் காந்தி போட்டியிடுவார் என்றும், ரேபரேலியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில், திருவனந்தபுரத்தில் தொலைக்காட்சிக்கு ஏ.கே. அந்தோனி அளித்த பேட்டியில், ”அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளின் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கும் வரை காத்திருங்கள். உத்தரப் பிரதேசத்தில் கண்டிப்பாக நேரு குடும்பத்தினர் போட்டியிடுவார்கள்.” என்று தெரிவித்தார்.

பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதோரா வேட்பாளராக அறிவிக்கப்படுவாரா என்ற கேள்விக்கு, அது நடக்காத ஒன்று என்று பதிலளித்துள்ளார்.

அமேதி தொகுதி காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மிகுந்த தொகுதியாக இருந்து வந்தது. முன்னாள் பிரதமா்கள் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி ஆகியோா் இத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளனா். இதுபோல, கடந்த 2002 முதல் 2019-ஆம் ஆண்டு வரை இத்தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட்டு தொடா்ந்து மக்களவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

2019 மக்களவைத் தோ்தலில் அமேதி தொகுதி மற்றும் கேரளத்தின் வயநாடு தொகுதி என இரண்டு தொகுதிகளில் ராகுல் போட்டியிட்டாா். ஆனால், அமேதி தொகுதியில் பாஜக வேட்பாளராக இருந்து பின்னா் மத்திய அமைச்சரான ஸ்மிருதி இரானியிடம் 55,120 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தாா். இருந்தபோதும், வயநாட்டில் வெற்றிபெற்று எம்.பி. ஆனாா்.

மேலும், ரேபரேலி தொகுதியில் 2004 முதல் போட்டியிட்டு வெற்றி பெற்ற சோனியா காந்தி, இம்முறை மாநிலங்களவை உறுப்பினரானார்.

அமேதியில் மீண்டும் ராகுல் காந்தியும், ரேபரேலியில் பிரியங்கா காந்தியும் போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், காங்கிரஸ் தங்களின் வேட்பாளர்களை அறிவிக்காமல் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com