மண்டபம் முகாமில் பிறந்த நளினிக்கு 38 வயதில் கிடைத்த வாக்குரிமை!

மண்டபம் முகாமில் பிறந்த நளினிக்கு 38 வயதில் கிடைத்த வாக்குரிமை!

இந்திய தேர்தல் ஆணையத்தால் 18 வயது பூர்த்தியடைந்தவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படுகிறது. ஆனால், பல்வேறு சட்டப் போராட்டங்களைக் கடந்து 38 வயதில் தனது வாக்குரிமையைப் பெற்றுள்ளார் இந்தியாவில் பிறந்த இலங்கைத் தமிழர் ஒருவர்.

திருச்சி மாவட்டம், கொட்டப்பட்டில் உள்ள இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் நளினி (38), இந்த உரிமையைப் பெற்றுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியது:

எனது பெற்றோர் இலங்கைத் தமிழர்கள். இலங்கையிலிருந்து வந்து ராமநாதபுரம், மண்டபம் முகாமில் இருந்தபோது, 1985-இல் எனது பெற்றோர் திருமணம் செய்து கொண்டனர். நான், மண்டபம் முகாமில்தான் 1986-இல் பிறந்தேன். இந்தியாவில் பிறந்தாலும், இந்திய குடியுரிமை பெற முடியாத நிலையே இருந்தது.

முதன்முறையாக கடவுச் சீட்டுக்கு விண்ணப்பித்தபோதுதான் சட்டச் சிக்கல் இருப்பது தெரியவந்தது. வழக்குரைஞர் உதவியுடன் கடவுச்சீட்டுக்காக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையை அணுகினேன். ஓராண்டுக்கு மேலாக நடந்த சட்டப் போராட்டத்தின் பயனாக, எனக்கு கடவுச்சீட்டு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. 2022-ஆம் ஆண்டு கடவுச் சீட்டு பெற்றேன்.

அதை அடிப்படையாகக் கொண்டு வாக்காளர் அடையாள அட்டைக்காக இந்திய தேர்தல் ஆணையத்திடம் இணையவழியில் விண்ணப்பித்தேன். எனது, விண்ணப்பம் மற்றும் சமர்ப்பித்த ஆவணங்களை சரிபார்த்து தேர்தல் ஆணையமே அஞ்சல் வழியில் எனக்கான வாக்காளர் அடையாள அட்டையை அனுப்பியுள்ளது.

2023-ஆம் ஆண்டே வாக்காளர் அட்டையைப் பெற்றிருந்தாலும் முதன்முதலாக 2024 மக்களவைத் தேர்தலில்தான் எனது வாக்குரிமையை பயன்படுத்த வாய்ப்பு கிடைத்துள்ளது என்றார்.

இவரைப் பின்பற்றி முகாமில் வசிக்கும் மேலும் சிலர் வாக்காளர் அட்டை பெற முயற்சித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com