திண்டுக்கல் கோட்டை யாருக்கு?

திண்டுக்கல் தொகுதியில் அரசியல் கட்சிகளின் முனைப்பு
திண்டுக்கல் கோட்டை யாருக்கு?

அரசியல் ரீதியாக எம்ஜிஆருக்கு அங்கீகாரம் அளித்த தொகுதி, அதிமுகவின் இரட்டை இலை சின்னம் உருவான தொகுதி என்ற சிறப்பு கொண்ட திண்டுக்கல் தொகுதி இதுவரை 18 தேர்தல்களை (ஓர் இடைத்தேர்தல் உள்பட) சந்தித்துள்ளது.

இந்தத் தொகுதியில் அதிகபட்சமாக அதிமுக 8 முறை வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது. காங்கிரஸ் 5 முறை, திமுக 4 முறை, தமாகா ஒரு முறை வெற்றி பெற்ற தொகுதி.

2019 மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட வேலுச்சாமி சுமார் 5.38 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சாதனை வெற்றியைப் பதிவு செய்தார். ஆனாலும், தொகுதியின் வளர்ச்சிக்கு எந்தவித பெரிய திட்டத்தையும் நிறைவேற்றுவதற்கு முனைப்பு காட்டவில்லை என்ற குற்றச்சாட்டு மக்களிடம் உள்ளது.

திண்டுக்கல் தொகுதியை தொடர்ந்து கூட்டணிக் கட்சிகளுக்கே ஒதுக்கீடு செய்து வந்த திமுக, 39 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த முறை வெற்றி பெற்றது. ஆனால், இந்த முறை கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு செய்துவிட்டது. அதிமுகவும் நேரடியாகக் களமிறங்காமல் கூட்டணிக் கட்சியான எஸ்டிபிஐக்கு ஒதுக்கீடு செய்தாலும்கூட இரட்டை இலை சின்னம் களத்தில் உள்ளது.

சுமார் 35 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக இரா. சச்சிதானந்தம் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணியில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் அதன் தலைவர் விஎம்.எஸ். முகமது முபாரக், பாஜக கூட்டணியில் பாமகவைச் சேர்ந்த ம. திலகபாமா, நாம் தமிழர் கட்சி சார்பில் து. கயிலைராஜன் உள்பட மொத்தம் 15 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஆனாலும், இந்த தொகுதியில் அரிவாள் சுத்தியல் நட்சத்திரம், இரட்டை இலை சின்னங்களுக்கு இடையேதான் இருமுனைப் போட்டி நிலவுகிறது.

தொகுதி பிரச்னைகள்: திண்டுக்கல் தொகுதிக்குள்பட்ட பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர், நிலக்கோட்டை, நத்தம், திண்டுக்கல் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் விவசாயமே முக்கியத் தொழிலாக உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் பஞ்சாலைகள், நெசவு சார்ந்த தொழில்கள் உள்ளன. விவசாயப் பயிர்கள், தோட்டக்கலைப் பயிர்கள், மலைப் பயிர்கள், கால்நடை வளர்ப்பு என பல வளங்களுக்கு வாய்ப்பு இருந்தும், நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படாமல் இருப்பது பெரும் குறையாக உள்ளது. தொழில் சார்ந்த வளர்ச்சித் திட்டங்கள் நீண்ட காலமாக நிறைவேற்றப்படவில்லை என்பதால், படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக வெளியிடங்களுக்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது.

கள நிலவரம்: திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர் ஆகிய 3 பேரவைத் தொகுதிகள் திமுக வசம் உள்ளன. திண்டுக்கல், நத்தம், நிலக்கோட்டை ஆகிய 3 பேரவைத் தொகுதிகள் அதிமுக வசம் உள்ளன. அந்தந்த தொகுதிகளில் கூடுதல் வாக்குகளை பெற்றால் மட்டுமே, அடுத்த 2 ஆண்டுகளில் வரப்போகும் சட்டப்பேரவைத் தேர்தலை நம்பிக்கையோடு எதிர்கொள்ள முடியும். இதனால்தான் கூட்டணிக் கட்சிகள் போட்டியிட்டாலும்கூட திமுக அமைச்சர்களும், அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களும் கௌரவ பிரச்னையாக கருதி தீவிர களப் பணியாற்றி வருகின்றனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் ரா. சச்சிதானந்தம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் ஒன்றிய, நகர பொறுப்புகளை வகித்து, தற்போது திண்டுக்கல் மாவட்டச் செயலராக உள்ள இவர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலராகவும் பதவி வகித்தார். இதனால், கட்சியினர் மட்டுமன்றி, விவசாயிகள் மத்தியிலும் அறிமுகமானவர். திமுக அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, அர. சக்கரபாணி ஆகியோரின் பிரசார வியூகத்தில், தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். எளிதில் அணுகக் கூடியவர் என்பதும், முன்னணி அரசியல் கட்சி வேட்பாளர்களில் மண்ணின் மைந்தர் இவர் ஒருவர் மட்டுமே என்பதும் கூடுதல் பலம்.

எஸ்டிபிஐ வேட்பாளர் விஎம்.எஸ். முகமது முபாரக்: அதிமுக கூட்டணியில் களம் இறங்கினாலும், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும், எஸ்டிபிஐ இயக்கத்தின் மாநிலத் தலைவர் என்பதும் இவர் மீதான எதிர்மறை சிந்தனையாக உள்ளது. ஆனாலும், தொகுதி முழுவதும் சென்று தனக்கே உரிய தொனியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதும், இரட்டை இலை சின்னமும் இவருக்கு அசுர பலமாக உள்ளது. முன்னாள் அமைச்சர்களான திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன் ஆகிய இருவரும் சற்றும் விலகிச் சென்றுவிடாமல், தன்னுடனேயே வைத்துக் கொண்டு வாக்குகளை அறுவடை செய்வதற்கு தீவிரம் காட்டி வருகிறார்.

பாமக, நாதக வேட்பாளர்கள்: பாஜக கூட்டணியில் இடம் பெற்றிருப்பது மட்டுமே பாமக வேட்பாளர் திலகபாமாவுக்கு பலம். கடந்த முறை அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட பாமகவுக்கு 17.9 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்தன. இதேபோல, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் பிரசாரத்தை மட்டுமே பலமாகக் கொண்டு, அந்த கட்சியின் வேட்பாளராக கயிலைராஜன் போட்டியிடுகிறார். கடந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு 4.7 சதவீத வாக்குகள் கிடைத்தன.

கோரிக்கைகள்

விவசாயத்துக்கு மட்டுமன்றி, குடிநீர் பிரச்னைக்கும் தீர்வு காணும் வகையில், ஆழியாறு, அமராவதி, காவிரி, வைகை இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். பஞ்சாலைகள் நிறைந்த இந்த மாவட்டத்தில் ஜவுளிப் பூங்கா அமைக்க வேண்டும். மாவட்டத்தில் அதிகமாக உற்பத்தி செய்யப்படும் தக்காளி, மா, கொய்யா, மக்காச்சோளம் ஆகியவற்றை மூலப்பொருள்களாகக் கொண்டு மதிப்புக் கூட்டப்பட்ட உணவுப் பொருள்கள் தயாரிப்பு ஆலை அமைக்க வேண்டும். பழனி- ஈரோடு ரயில் பாதை, பழனி- காரைக்குடி ரயில் பாதைத் திட்டங்கள், திண்டுக்கல்- சென்னை இடையே நேரடி ரயில் சேவை, மத்திய பல்கலைக்கழகம் ஆகியவை திண்டுக்கல் தொகுதி மக்களின் நீண்ட காலக் கோரிக்கைகளாக உள்ளன.

வாக்காளர்கள்

ஆண்கள் 7,80,096

பெண்கள் 8,26,737

இதரர் 218

மொத்தம் 16,07,051

2019 தேர்தல் முடிவுகள்

மொத்த வாக்குகள்

15,18,633

பதிவான வாக்குகள்

11,60,046 (77.3%)

செல்லத்தக்க வாக்குகள்

11,45,869 (75.5%)

பி.வேலுச்சாமி (திமுக)

7,46,523 (64.4%)

கே.ஜோதிமுத்து (பாமக)

2,07,511 (17.9%)

பி.ஜோதிமுருகன் (அமமுக)

62,875 (5.4%)

ஏ. மன்சூர் அலிகான் (நாதக)

54,957 (4.7%)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com