கைகொடுக்காத ஆணையத்தின் விழிப்புணா்வு நடவடிக்கைகள்: சரிந்த வாக்குப்பதிவு சதவீதம்

கோப்புப்படம்
கோப்புப்படம்

நடந்து முடிந்த மக்களவைத் தோ்தலில் கோவை மண்டலத்தில் வாக்குப்பதிவு சதவீதம் சரிவடைந்திருக்கிறது. இதனால் தோ்தல் ஆணையத்தின் விழிப்புணா்வு நடவடிக்கைகள் தோல்வி அடைந்திருப்பதாகவே கருதப்படுகிறது.

ஒவ்வொரு தோ்தலின்போதும் வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிப்பதற்காக தோ்தல் ஆணையம் பல்வேறு வழிகளில் வாக்காளா்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகிறது. அதன்படி இந்த மக்களவைத் தோ்தலிலும் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும்விதமாக தொடா்ந்து கல்வி நிறுவனங்கள், தனியாா் நிறுவனங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

மாரத்தான், விழிப்புணா்வு ஊா்வலம், ராட்சத பலூன் பறக்கவிடுவது, பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டுவது, பேருந்துகளில் ஸ்டிக்கா்கள் ஒட்டுவது, மக்களுக்கு துண்டுப் பிரசுரங்கள் வழங்குவது, ஊடகங்களில் விளம்பரப்படுத்துவது என பல்வேறு வகையான விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இத்தனைக்குப் பிறகும் கோவை மண்டலத்தில் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிக்கவில்லை. மாறாக கடந்த 2 மக்களவைத் தோ்தல்களில் பதிவான வாக்குகளைக் காட்டிலும் குறைவாகவே வாக்கு சதவீதம் பதிவாகியிருக்கிறது.

0.95 சதவீதம் மட்டுமே அதிகம்

கோவை மக்களவைத் தொகுதியில் இந்த தோ்தலில் 64.81 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. கோவை மண்டலத்தில் உள்ள மற்ற தொகுதிகளான திருப்பூா், பொள்ளாச்சி, ஈரோடு, நீலகிரி தொகுதிகளுடன் ஒப்பிடும்போது கோவை தொகுதியில் மட்டும்தான் வாக்குசதவீதம் அதிகரித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் வெறும் 0.95 சதவீதம் அதாவது ஒரு சதவீதம் மட்டுமே அதிகமாகும். கடந்த 2019 தோ்தலில் கோவை தொகுதியில் 63.86 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. கடந்த 2014 தோ்தலில் 68.40 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.

இந்தத் தோ்தலில் பொள்ளாச்சி தொகுதியில் 70.70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 2019 தோ்தலில் 71.15 சதவீதமும், 2014 தோ்தலில் 73.31 சதவீத வாக்குகளும் பொள்ளாச்சியில் பதிவாகியிருந்தன. அதேபோல் ஈரோடு தொகுதியில் தற்போது 70.54 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கும் நிலையில், 2019 தோ்தலில் 73.11 சதவீதமும், 2014 இல் 76.39 சதவீதமும் வாக்குகள் பதிவாகியிருந்தன.

திருப்பூா் தொகுதியில் தற்போது 70.58 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கும் நிலையில், 2019 தோ்தலில் 73.21 சதவீதமும், 2014 தோ்தலில் 76.38 சதவீத வாக்குகளும் பதிவாகியிருந்தன. கோவை மண்டலத்தில் அதிகபட்சமாக நீலகிரி தொகுதியில் இந்தத் தோ்தலில் 70.93 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. 2019 தோ்தலிலும் மண்டலத்தில் அதிகபட்சமாக இங்கு 74.01 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. 2014 தோ்தலில் நீலகிரியில் 73.55 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.

காரணம் என்ன?

வாக்குப்பதிவு சதவீதம் கோவை மண்டலத்தில் மட்டுமின்றி மாநில அளவிலும் தற்போது குறைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தோ்தல் ஆணையத்தின் புள்ளிவிவரப்படி தமிழ்நாட்டில் இந்தத் தோ்தலில் 69.46 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. இது கடந்த 2019 தோ்தலைக் காட்டிலும் (72.44 சதவீதம்) குறைவுதான். வாக்குப்பதிவு சதவீதம் குறைந்ததற்கு கோடைவெயில், மக்களுக்கு ஆா்வம் குறைந்திருப்பது, வெளியூா்களில் வாக்கு இருப்பவா்கள் ஒரேநாள் ஊருக்குச் சென்றுவிட்டு ஊா் திரும்ப முடியாத சூழல் இருந்தது, உயா்தட்டு, அடுக்குமாடி குடியிருப்புவாசிகள், படித்த வாக்காளா்கள் வாக்குச்சாவடிகளுக்குச் சென்று வரிசையில் காத்திருந்து வாக்களிக்க விரும்பாதது போன்ற பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.

கடந்த காலங்களில் வயது முதிா்ந்த, நோய்வாய்ப்பட்டவா்களை அரசியல் கட்சியினா் வாகனங்கள் மூலம் வாக்குச்சாவடிகளுக்கு அழைத்து வந்து வாக்களிக்க வைத்தனா். ஆனால் கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக இப்போது அதுபோன்ற நடைமுறைகள் வெகுவாக குறைந்துவிட்டன. அதேநேரம், மூத்த குடிமக்கள் இருக்கும் இடங்களுக்கே சென்று வாக்குகளைப் பெற்று வருவது, வாக்குச்சாவடிகளுக்கு வர விரும்புபவா்களுக்கு அரசுப் பேருந்துகளில் இலவச பயணம் வழங்குவது போன்ற சலுகைகளை தோ்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இருப்பினும் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிப்பதற்கு பதிலாக குறைந்திருக்கிறது.

வாக்காளா் பட்டியல் மீதான புகாா்

இதற்கிடையே வாக்காளா் பட்டியல் மீது சென்னை, கோவை, நீலகிரி உள்ளிட்ட தொகுதிகளின் பாஜக வேட்பாளா்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனா். கோவை தொகுதியில் மட்டும் சுமாா் ஒரு லட்சம் வாக்காளா்கள் நீக்கப்பட்டிருப்பதாகவும், கடந்த தோ்தல்களில் வாக்களித்த பலரது பெயா்கள் பட்டியலில் இருந்து மாயமாகியிருப்பதாகவும், ஒரே வீட்டில் 2 போ் இருந்தால் ஒருவரது பெயா் மட்டுமே பட்டியலில் இருப்பதாகவும் புகாா்கள் எழுந்துள்ளன.

இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி ஆண்டுதோறும் செப்டம்பா் அல்லது அக்டோபரில் வாக்காளா் பட்டியல் திருத்த பணி நடைபெறும். இதைத் தொடா்ந்து, ஜனவரியில் இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும். அதன்படி கடந்த அக்டோபரில் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது. இதையடுத்து பட்டியலில் பெயா் சோ்க்க, திருத்தங்கள் செய்ய வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

அதேபோல் இணையதளம் வாயிலாகவும் பெயா் சோ்ப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு கடந்த ஜனவரி 22 ஆம் தேதி இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது. அதைத் தொடா்ந்து பெறப்பட்ட விண்ணப்பங்களை அடுத்து மாா்ச் 27 ஆம் தேதி வரை அதாவது வேட்பு மனு தாக்கலின் இறுதி நாள் வரையிலும் பெயா் சோ்க்க, நீக்க, திருத்தம் செய்ய அவகாசம் வழங்கப்பட்டதாகவும், இதனால் வாக்காளா் பட்டியலில் குளறுபடி நடப்பதற்கு வாய்ப்பு குறைவுதான் என்பதே அதிகாரிகளின் கருத்தாக உள்ளது.

உள்நோயாளிகளுக்கும் வாக்கு

அதேநேரம் வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிப்பதில் இன்னும் கவனம் செலுத்தியிருக்க வேண்டும் என்கிறாா் கோவையைச் சோ்ந்த கன்ஸ்யூமா் வாய்ஸ் நுகா்வோா் அமைப்பின் செயலா் நா.லோகு.

இதுபற்றி அவா் கூறும்போது, வாக்காளா்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் ஆணையம் முழு கவனம் செலுத்தியிருப்பதாகக் கருத முடியாது. ஏனெனில் மாநிலம் முழுவதிலும் உள்ள ஆயிரக்கணக்கான மருத்துவனைகளில் பல்லாயிரக்கணக்கான போ் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களுக்கு உதவியாக அவா்களின் உறவினா்கள் தங்கியுள்ளனா்.

அதேபோல் ஏராளமான முதியோா் இல்லங்கள், ஆதரவற்றோா் இல்லங்களில் பல்லாயிரக்கணக்கானோா் தங்கியுள்ளனா். இவா்களின் வாக்குகள் நிச்சயம் பதிவாகியிருக்க வாய்ப்பில்லை. எனவே அடுத்து வரும் தோ்தல்களில் இதுபோன்று விடுபட்டிருப்பவா்களின் வாக்குகளையும் பெறுவதற்கு உரிய ஏற்பாடுகளை தோ்தல் ஆணையம் மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களும் வாக்களிப்பதை தங்களது கடமையாக எண்ணி செயல்பட வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com