கருத்துக்கணிப்புகள் கூறுவதென்ன? மக்களவைத் தேர்தல் பற்றி...

வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
கருத்துக்கணிப்புகள் கூறுவதென்ன? மக்களவைத் தேர்தல் பற்றி...
Published on
Updated on
2 min read

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை பல்வேறு செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன.

இந்தியா டுடே, நியூஸ் 18, ஆக்ஸிஸ் மை இந்தியா, ஏபிபி உள்ளிட்ட பெரும்பாலான நிறுவனங்களின் கருத்துக்கணிப்புகள், பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் 7 கட்டங்களாக ஏப்ரல் 19-ஆம் தேதி முதல் ஜூன் 1-ஆம் தேதி வரை நடைபெற்றது. இன்று மாலை 6 மணிக்கு இறுதிக்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவுபெற்றதும் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட தனியார் நிறுவனங்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அனுமதி அளித்திருந்தது.

அதன்படி, அச்சு, காட்சி ஊடகங்கள் உள்பட பல்வேறு தரப்பினர் வெளியிட்ட கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணி 350-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் 120 முதல் 170 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என்றும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் போன்ற இரு கூட்டணிகளிலும் இடம்பெறாமல் தனித்துப் போட்டியிடும் கட்சிகள் 30 முதல் 50 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.

இருப்பினும், 'ஜந்தா கா' என்ற நிறுவனம் ‘இந்தியா’ கூட்டணி 295-க்கு அதிகமான இடங்களை பெற்று ஆட்சி அமைக்கும் என்று கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது. அக்னி நியூஸ் என்ற நிறுவனம் இரு கூட்டணிகளுக்கும் பெரும்பான்மை கிடைக்காது எனத் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் 35 முதல் 39 தொகுதிகளை கைப்பற்றும் என்று கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சியான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அதிகபட்சமாக இரண்டு இடங்களிலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி 3 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அண்டை மாநிலமான கேரளத்தில் மொத்தமுள்ள 20 தொகுதிகளில் 15-க்கும் அதிகமான தொகுதிகளில் காங்கிரஸ் கைப்பற்றும் என்று கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகத்திலுள்ள 28 தொகுதிகளில் ஆளும்கட்சியான காங்கிரஸ் அதிகபட்சம் 10 தொகுதிகளிலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி 20-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெல்லும் என்று கூறப்பட்டுள்ளது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தில்லியில் 7 தொகுதிகளையும் பாஜக கைப்பற்றும் என்றும், மகாராஷ்டிரத்தில் இரு கூட்டணிகளும் 20-க்கும் அதிகமான தொகுதிகளை கைப்பற்றும் என்று கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசம், குஜராத், உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பாஜகவே அதிக இடங்களில் வெல்லும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆந்திர பிரதேசம் சட்டப்பேரவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் - பாஜக கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றவுள்ளதாகவும் ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று பிஜு ஜனதா தளம் ஆட்சி அமைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும், ஒடிஸா மக்களவைத் தேர்தலில் பாஜகவே ஆதிக்கம் செலுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், சிக்கிம் சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சாவும், அருணாச்சலப் பிரதேசம் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவும் ஆட்சியை அமைக்கும் என்று பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் கூறப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக பாஜகவே வெல்லும் என்று கூறப்பட்டாலும், தேர்தல் பிரசாரத்தின்போது கள நிலவரத்தை கண்ட அரசியல் விமர்சகர்கள் ’இந்தியா’ கூட்டணியே ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவித்திருந்தனர். ஆனால், வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு சாதகமாகவே அமைந்துள்ளது.

இருப்பினும், உண்மை நிலவரம் என்னவென்பது ஜூன் 4 தெரியவரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com