அமராவதியில் மீண்டும் களமிறங்கும் 
‘அம்பாசமுத்திரம் அம்பானி’ நடிகை!

அமராவதியில் மீண்டும் களமிறங்கும் ‘அம்பாசமுத்திரம் அம்பானி’ நடிகை!

அமராவதி மக்களவைத் தொகுதியின் பாஜக வேட்பாளர் நவனீத் கெளர் ராணா.
Published on

மகாராஷ்டிர மாநிலம் அமராவதி மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக நடிகை நவநீத் கெளர் ராணா அறிவிக்கப்பட்டுள்ளார்.

மாநிலத்தில் 48 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இதில், பாஜக, தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார் அணி) மற்றும் சிவசேனை (ஷிண்டே அணி) ஆகிய கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணியும், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் அணி) மற்றும் சிவசேனை (உத்தவ் அணி) அடங்கிய மெகா கூட்டணியும் நேருக்குநேர் மோதுகின்றன.

5 கட்டங்களாக நடைபெறும் வாக்குப்பதிவில், அமராவதி (தனித் தொகுதி) மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 26-ஆம் தேதி நடைபெறுகிறது.

அமராவதி மக்களவைத் தொகுதிக்குள் அமராவதி, தியோசா, தார்யாபூர் (எஸ்.சி.), மேல்காட் (எஸ்.டி.), அச்சல்பூர் மற்றும் பட்னேரா ஆகிய 6 பேரவைத் தொகுதிகள் அடங்கும்.

இந்த மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் நவநீத் கெளர் ராணாவும், காங்கிரஸ் சார்பில் பல்வந்த் பஸ்வந்த் வான்கடேவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அமித் ஷாவுடன் நவநீத் கெளர்
அமித் ஷாவுடன் நவநீத் கெளர்ANI

தெலுங்கின் பிரபல நடிகையான நவநீத்தின் கணவர் ரவி ராணா, அமராவதி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பட்னேரா சட்டப்பேரவைத் தொகுதியில் மூன்று முறை உறுப்பினர்.

பஞ்சாப் குடும்ப பின்னணியைக் கொண்ட நவநீத் கெளர், மும்பையில் படித்து வளர்ந்தவர்.

ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிப் படங்களிலும் நடித்துள்ள நவநீத் கெளர் ராணா, விஜயகாந்த் நடித்த அரசாங்கம், கருணாஸுக்கு ஜோடியாக அம்பாசமுத்திரம் அம்பானி திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார்.

ராதிகா சரத்குமார், கங்கனா ரணாவத் வரிசையில் நவநீத் கெளரும் பாஜக நட்சத்திர வேட்பாளராக இணைந்துள்ளார்.

கணவர் ரவி ராணாவுடன் நவநீத் கெளர்
கணவர் ரவி ராணாவுடன் நவநீத் கெளர்ANI

அரசியல் பயணம்

கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் முதல்முறையாக அமராவதி தொகுதியில் போட்டியிட்ட நவநீத் கெளர், சிவசேனை வேட்பாளரிடம் தோல்வியை சந்தித்தார்.

தொடர்ந்து, 2019 மக்களவைத் தேர்தலில் சுயேச்சையாக களமிறங்கிய நவநீத் கெளருக்கு, காங்கிரஸும், தேசியவாத காங்கிரஸும் ஆதரவளித்த நிலையில், சிவசேனை வேட்பாளரை 36,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார்.

இதற்கிடையே, கடந்த சில மாதங்களாக பாஜகவுக்கு ஆதரவாக கருத்துகளை தெரிவித்த நவநீத் கெளர், மக்களவையில் பாஜகவுக்கு ஆதரவாக பல்வேறு மசோதாக்களில் வாக்களித்தார்.

மக்களவையில் நவநீத் கெளர்
மக்களவையில் நவநீத் கெளர்ANI

இந்த நிலையில், கடந்த வாரம் பாஜகவில் இணைந்த நவநீத் கெளர், அமராவதி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

சர்ச்சைகள்

கடந்த 2022-ஆம் ஆண்டு அப்போதைய மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்களின் துன்பங்கள் நீங்க முதல்வரின் வீட்டின் முன்பு அனுமன் மந்திரம் பாடப்போவதாக அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து நவநீத் கெளரும், அவரது கணவரையும் தேசதுரோக வழக்கில் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமீனில் வெளிவந்தனர்.

கடந்த 2021-ஆம் ஆண்டு நவநீத் கெளர் தவறான தகவலை அளித்து எஸ்.சி. பிரிவில் சாதிச் சான்றிதழ் பெற்றதாக ரூ. 2 லட்சம் அபராதம் விதித்து மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதனால், அமராவதி தனித் தொகுதியில் போட்டியிட்டு வென்ற நவநீத் கெளரின் பதவி பறிக்கப்படும் அபாயம் இருந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.

நாடாளுமன்றத்தில் நவநீத் கெளர்
நாடாளுமன்றத்தில் நவநீத் கெளர்ANI

இந்த வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று (ஏப்.4) வெளியிட்டது. மும்பை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து, நவநீத் கெளரின் சாதிச் சான்றிதழ் செல்லும் என்று உத்தரவிட்டுள்ளது.

இதனால், பாஜகவில் வேட்பாளராக நவநீத் கெளர் மீண்டும் களமிறங்குவது உறுதியாகியுள்ளது.

கடந்த தேர்தலில் மெகா கூட்டணி ஆதரவுடன் தேர்தலில் வெற்றி பெற்ற நவநீத் கெளரை பாஜக வேட்பாளராக மக்கள் ஏற்பார்களா? என்பது விரைவில் தெரியவரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com