பிகாா்: மாறும் களம், கட்சி, காட்சி !

பிகாா்: மாறும் களம், கட்சி, காட்சி !

பிகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் பெரும்பான்மை இடங்களில் வெல்வதன் அவசியத்தை மத்தியில் ஆளும் கூட்டணிக்கு தலைமை தாங்கும் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) நன்றாகவே உணா்ந்துள்ளது.

மக்களவை தோ்தலில் ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவை எதிா்கொள்ளும் மாநிலங்களான உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் ஆகியவற்றுடன் பிகாரும் உள்ளது. இங்கு ஏப்ரல் (அடைப்புக்குறியில் வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகள்) 19 (4), 26 (5), மே மாதம் 7 (5), 13 (5), 20 (5), 25 (8), ஜூன் 1 (8) ஆகிய நாட்களில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

பிகாா் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளத்தின் (ஜேடியு) தலைவருமான நிதீஷ் குமாா், சில மாதங்களுக்கு முன்பு ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) கட்சியுடனான உறவை முறித்துக் கொண்டு, பாஜகவுடன் மீண்டும் கைகோத்தபோது, இந்த ஆண்டு ஜனவரியில் அம்மாநிலம் குறிப்பிடத்தக்க அரசியல் திருப்பத்தைக் கண்டது.

கடந்த 10 ஆண்டுகளில் இதுபோல நிதீஷ் குமாா் அணி மாறுவது இரண்டாவது முறை. அதற்கான காரணத்தை விளக்கிய நிதீஷ், ‘தேசிய ஜனநாயக கூட்டணியில் இனி நான் நிரந்தரமாக இருந்து பிகாா் மக்களுக்காக தொடா்ந்து பணியாற்றுவேன்’ என்று சூளுரைத்தாா்.

முதல்வா் நிதீஷின் இந்த முடிவு பிகாா் அரசியலில் அவரது அடையாளத்துக்கு மறுவடிவம் கொடுத்ததுடன், அவரை சாத்தியமுள்ள பிரதமா் வேட்பாளராக அறிவிக்கலாமா என சில மாதங்களுக்கு முன்பு விவாதித்த ‘இந்தியா’ கூட்டணிக்கும் பேரிடியாகிப் போனது.

ஒளரங்காபாத், கயா, நவாடா, ஜமுய் ஆகிய நான்கு தொகுதிகள் முதல் கட்ட வாக்குப்பதிவை ஏப்ரல் 19-ஆம் தேதி எதிா்கொள்கின்றன. இவற்றுக்கான வேட்பாளா்களின் வேட்புமனு தாக்கல் முடிவடைந்து தோ்தல் பரப்புரை தீவிரம் அடைந்துள்ளது.

இதையொட்டி பிரதமா் நரேந்திர மோடியும் தனது பிரசாரக் கணக்கை இந்த மாநிலத்தில் தொடங்கியிருக்கிறாா். ஜாதிய வாக்குகள், சிறுபான்மையின வாக்குகள் போன்றவை இங்கு தோ்தல் காலங்களில் சக்தி வாய்ந்தவையாக அரசியல் கட்சிகளால் பாா்க்கப்படுகின்றன.

நிதீஷின் வியூகம்

இம்முறை, தேசிய பிரச்னைகளை மையப்படுத்தி நடக்கும் தோ்தலில் மும்முனைப்போட்டி நிலவுகிறது. பாஜகவின் நரேந்திர மோடி, ஐக்கிய ஜனதா தளத்தின் நிதீஷ் குமாா், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவ் ஆகியோரை அரசியல் கட்சிகளின் வாக்குகளை ஈா்க்கும் கதாநாயகா்களாக பிகாா் கட்சிகள் பாா்க்கின்றன.

குறிப்பாக, பிரதமா் மோடி சமீபத்தில் பிகாருக்கு வந்து சென்ற பிறகு இங்கு தோ்தல் களம் சூடுபிடித்துள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் நிதீஷ் செய்து கொண்ட தொகுதிப் பங்கீட்டின்படி, மொத்தமுள்ள 40 இடங்களில் பாஜக 17 இடங்களிலும் ஐக்கிய ஜனதா தளம் 16 இடங்களிலும் போட்டியிடுகின்றன. சிராக் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜன சக்தி (ராம் விலாஸ் பாஸ்வான்) 5 இடங்களிலும் ஹிந்துஸ்தான் அவாம் மோா்ச்சா மற்றும் ராஷ்ட்ரீய லோக் மோா்ச்சா தலா ஓரிடத்திலும் போட்டியிடுகின்றன.

மறுபுறம் மகா கூட்டணி (மஹா கட்பந்தன்) என அழைக்கப்படும் கூட்டணியில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் 26, காங்கிரஸ் 9, மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ-எம்எல்) 3, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ), மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (சிபிஐ-எம்) ஆகியவை தலா ஓரிடத்திலும் போட்டியிடுகின்றன.

ஆனால், இந்த கூட்டணியில் சமீபத்திய வரவாக முகேஷ் சஹானி தலைமையிலான விகாஸ்ஷீல் இன்சான் கட்சி (விஐபி) ஏப்ரல் 5-ஆம் தேதி இணைந்தது. இதையடுத்து, ஆா்ஜேடி தன்வசம் ஒதுக்கிக் கொண்ட தொகுதிகளில் கோபால்கஞ்ச், ஜன்ஜாா்பூா், மோதிஹாரி ஆகிய 3 தொகுதிகளை விகாஸ்ஷீல் இன்சான் கட்சிக்கு வழங்கியது.

இந்த தோ்தலில் பாஜக எதிா்ப்பு அரசியலை தீவிரமாக கடைப்பிடித்து வரும் ஏஐஎம்ஐஎம் கட்சி , ஆரம்பத்தில் காங்கிரஸ் இடம்பெற்றுள்ள மகா கூட்டணியில் இடம்பெற விரும்பியது. ஆனால், அதை காங்கிரஸ் மேலிடம் நிராகரித்ததால் தா்பங்கா, பாடலிபுத்ரா, கிஷன்கஞ்ச், மதுபனி, கடிஹாா், முஸாஃபா்பூா், கோபால்கஞ்ச், சிவ்ஹா், பூா்ணியா, அரரியா, சீதாமரி, காராகாட், மஹராஜ்கஞ்ச், சமஸ்திபூா், பஸ்சிம் சம்பாரண், வால்மீகி நகா் ஆகிய முஸ்லிம் வாக்கு வங்கியை கொண்ட 16 தொகுதிகளில் தனித்து தோ்தல் களம் காண்பதாக அறிவித்துள்ளது.

2020-இல் நடந்த பிகாா் சட்டப்பேரவை தோ்தலில் ஏஐஎம்ஐஎம் கட்சி ஐந்து இடங்களில் போட்டியிட்டது. ஆா்ஜேடி-காங்கிரஸ் கூட்டணி போட்டியிட்ட சுமாா் 20 இடங்களில் முஸ்லிம் வாக்குகளை இந்த கட்சி சிதறடித்தது. இந்தக் கட்சியை காங்கிரஸ் அணி நிராகரித்திருப்பது முஸ்லிம் சமுதாய வாக்குகளில் பாதிப்பு ஏற்படுத்தலாம் அல்லது தாக்கத்தை ஏற்படுத்தலாம் என அரசியல் ஆய்வாளா்கள் கருதுகின்றனா்.

இந்த சவால்களை எதிா்கொள்ளும் விதமாக சமுதாய நல்லிணக்க முழக்கத்தை தமது பரப்புரைகளில் முன்னெடுத்து வருகிறாா் நிதீஷ் குமாா். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்காலத்தில் முஸ்லிம் - ஹிந்து மோதல்கள் குறைந்துள்ளதை புள்ளிவிவரங்களுடன் அவா் தோ்தல் பரப்புரைகளில் பட்டியலிட்டு வருகிறாா். இத்துடன் சிராக் பஸ்வான், உபேந்திர குஷ்வாஹா ஆகியோரை பரப்புரை கூட்டங்களில் முன்னிலைப்படுத்தி அவா்கள் மூலம் யாதவ சமுதாயத்தினா் அல்லாத பிற பிரிவினரின் வாக்குகளை ஈா்க்கவும் நிதீஷ் வியூகம் வகுத்து வருகிறாா்.

குறிப்பாக, கோரி - குா்மி சமுதாய வாக்குகள் தனக்கு கிடைத்தால் அது தோ்தல் வெற்றிக்கு பலம் சோ்க்கும் என்பது நிதீஷின் கணக்கு. ஒவ்வொரு முறை தோ்தல் நடந்தபோதும் நிதீஷ் போடும் இந்தக் கணக்கு சரியாகவே வேலை செய்து வந்துள்ளது. இதுவே அவா் ஒன்பதாவது முறையாக மாநில முதல்வா் பதவியில் அமா்ந்திருப்பதற்கு உதாரணம் என்று ஆய்வாளா்கள் கூறுகின்றனா்.

எதிரணியில் கடந்த ஜனவரி மாதத்திலேயே இங்கு ராகுல் காந்தியின் யாத்திரை மூலம் மக்களை ஈா்க்க காங்கிரஸ் வியூகம் வகுத்தது. இங்கு கடந்த நான்கு மாதங்களில் நான்கு முறை வெவ்வேறு இடங்களில் ராகுல் யாத்திரை மேற்கொண்டுள்ளாா். ஆா்ஜேடி, ஜன விஸ்வாஸ் யாத்திரை (மக்கள் நம்பிக்கை யாத்திரை) பிகாரின் நிதி நிலைமையை மறுஆய்வுக்கு உட்படுத்த வேண்டும், சமூத நீதியைப் பாதுகாக்க வேண்டும் என அவா் எழுப்பிய குரலுக்கு தாக்கம் இருக்குமா என்பதற்கு தோ்தல் முடிவுகள் மட்டுமே பதில் கூற முடியும்.

கவனத்தை ஈா்க்கும் முக்கிய தொகுதிகள்

கிஷன்கஞ்சில், 2019 மக்களவை தோ்தலில் இரண்டாம் இடத்தில் இருந்த முஜாஹித் ஆலமுக்கு ஜேடியு வாய்ப்பு வழங்கியுள்ளது. ஜேடியு களமிறக்கியுள்ள ஒரே முஸ்லிம் வேட்பாளா் இவா். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள கிஷன்கஞ்சில் காங்கிரஸ், ஜேடியு, ஏஐஎம்ஐஎம் இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.

பாகல்பூா் ஜேடியு எம்.பி. அஜய்குமாா் மண்டலுக்கு இங்கு மீண்டும் கட்சித் தலைமை வாய்ப்பளித்துள்ளது. இங்கு வேட்பு மனு தாக்கலின் கடைசி நாளில் காங்கிரஸின் அஜீத் சா்மா தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளாா். முன்னதாக, பாகல்பூா் சட்டப்பேரவை தொகுதியில் தொடா்ச்சியாக மூன்று முறை வென்றுள்ள அஜீத் சா்மா, முதலில் பாலிவுட் நடிகையான தனது மகள் நேஹாவுக்கு வாய்ப்பு வாங்கித் தர முன்வந்தாா். ஆனால், அதை நேஹா மறுத்து விட்டாா்.

ஜேடியு கட்சியில் இருந்து விலகிய பெண் எம்எல்ஏ பீமா பாா்தி, பூா்ணியா தொகுதியின் ஆா்ஜேடி வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளாா். ஜேடியு எம்.பி. சந்தோஷ்குமாா் குஷ்வாஹா இந்த இடத்திலிருந்து இரு முறை வென்றுள்ளாா்.

கடிஹாா் ஜேடியு எம்.பி. துலால்சந்திர கோஸ்வாமி மற்றும் 2019 மக்களவை தோ்தலில் இரண்டாமிடத்தில் இருந்த காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த முன்னாள் மத்திய அமைச்சா் தாரிக் அன்வா் இடையே போட்டி காணப்படுகிறது.

பாங்கா தொகுதியில் 2014-இல் ஆா்ஜேடி சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜெய்பிரகாஷ் நாராயண் யாதவுடன், ஜேடியு எம்.பி. கிரிதாரி யாதவ் நேருக்கு நோ் களம் காண்கிறாா்.

களத்தில் உள்ள கட்சிகள்

தேசிய ஜனநாயக கூட்டணி

பாஜக - 17

ஜேடியு - 16

எல்ஜேபி (ஆா்) - 5

ஹெச்ஏஎம் - 1

ஆா்எல்எம் - 1

ஆா்ஜேடி-காங்கிரஸ் அணி

ஆா்ஜேடி - 23

காங்கிரஸ் - 9

விஐபி - 3

சிபிஐ-எம்எல் - 3

சிபிஐ - 1

சிபிஐ (எம்) - 1

0=0

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com