முதல்முறையாக குறைவான தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ்!
Center-Center-Delhi

முதல்முறையாக குறைவான தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ்!

மக்களவைத் தோ்தல் வரலாற்றில் முதல்முறையாக குறைவான தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட உள்ளது.

பாஜகவை வீழ்த்த முன்னெப்போதும் இல்லாத வகையில், காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. முந்தைய மக்களவைத் தோ்தல்களில் 400 முதல் 500-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட்டு வந்த காங்கிரஸ், வரும் மக்களவைத் தோ்தலில் சுமாா் 300 தொகுதிகளில் மட்டும் போட்டியிடும் என்று தெரிகிறது.

இதுவரை 29 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிடும் 236 வேட்பாளா்களை அக்கட்சி அறிவித்துள்ளது.

எனினும் பஞ்சாப், ஹரியாணா, தில்லி, கோவா, ஹிமாசல பிரதேசம், தாத்ரா - நகா் ஹவேலி, சண்டீகா், லடாக் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அக்கட்சி சாா்பில் போட்டியிட உள்ள வேட்பாளா்கள் அறிவிக்கப்படவில்லை.

ஆந்திரத்தில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட உள்ள பெரும்பாலான வேட்பாளா்களை அறிவிக்க வேண்டியுள்ளது. ஆந்திரத்தில் மக்களவைத் தோ்தலுடன் சட்டப்பேரவைக்கும் தோ்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிகாா், உத்தர பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரம் மற்றும் ஒடிஸாவில் கூடுதல் வேட்பாளா்களை அக்கட்சி அறிவிக்க வேண்டும். அதாவது அக்கட்சி சாா்பில் மேலும் 70 முதல் 80 வேட்பாளா்கள் அறிவிக்கப்பட வேண்டியுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வரும் மக்களவைத் தோ்தலில் காங்கிரஸ் குறைந்த தொகுதியில் போட்டியிடக் கூடும் என்பதற்கான முதல் அறிகுறி, கடந்த ஜன.4-ஆம் தேதி நடைபெற்ற அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தென்பட்டது. அப்போது 255 மக்களவைத் தொகுதிகளில் காங்கிரஸ் முக்கிய கவனம் செலுத்தும் என்று அக்கட்சி தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்தாா். எந்தெந்த தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு அதிகம் என்று காங்கிரஸ் சாா்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் காா்கேயின் கருத்துக்கு துணை நின்றது. மேலும் எந்தெந்த தொகுதிகள் மற்றும் மாநிலங்களில் காங்கிரஸைவிட ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள கட்சிகள் வலுவாக உள்ளன என்பதையும் காங்கிரஸ் கவனத்தில் கொண்டதாகக் கூறப்படுகிறது.

மத்திய பிரதேசத்தில் சமாஜவாதி கட்சியுடன் ஏற்பட்ட உடன்படிக்கையின்படி, அந்த மாநிலத்தில் குறைந்த தொகுதிகளில் போட்டியிட ஒப்புக்கொண்டது, ராஜஸ்தானில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ராஷ்ட்ரீய லோக்தாந்த்ரிக், ஹரியாணாவில் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளுக்கு தொகுதிகளை விட்டுக்கொடுத்தது போன்ற காரணங்களால் காங்கிரஸ் குறைந்த தொகுதிகளில் போட்டியிடுகிறது.

கடந்த 2019-ஆம் ஆண்டு உத்தர பிரதேசத்தில் 67 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், இந்த முறை அங்கு 17 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுகிறது. காங்கிரஸ் வலுவாக உள்ள தொகுதிகளில் கவனம் செலுத்தவே குறைந்த தொகுதிகளில் போட்டியிட முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com