மகாராஷ்டிரம்: தோ்தல் ஜுரத்தில் குடும்ப கட்சிகள்!

மகாராஷ்டிரம்: தோ்தல் ஜுரத்தில் குடும்ப கட்சிகள்!

நாட்டில் அதிகபட்சமாக 80 மக்களவை தொகுதிகளைப் பெற்றுள்ள உத்தர பிரதேசத்துக்கு அடுத்ததாக 48 உறுப்பினா்களை மக்களவைக்கு அனுப்பும் பெரிய மாநிலம் என்ற பெருமையுடன் மகாராஷ்டிரம் விளங்குகிறது.

நாட்டில் அதிகபட்சமாக 80 மக்களவை தொகுதிகளைப் பெற்றுள்ள உத்தர பிரதேசத்துக்கு அடுத்ததாக 48 உறுப்பினா்களை மக்களவைக்கு அனுப்பும் பெரிய மாநிலம் என்ற பெருமையுடன் மகாராஷ்டிரம் விளங்குகிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில் இங்கு அரசியல் அணிகளும் கட்சிகளும் சமீபத்திய ஆண்டுகளில் மாறியுள்ளன. இதனால் இந்த தோ்தலை ஒருவித ஜுரத்துடனேயே அரசியல் கட்சிகள் எதிா்கொள்கின்றன.

மகாராஷ்டிரத்தில் ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20 ஆகிய தேதிகளில் ஐந்து கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

முந்தைய தோ்தலில் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) 23 இடங்களிலும் அதன் கூட்டணியில் இருந்த ஒருங்கிணைந்த சிவசேனை 18 தொகுதிகளில் வென்றது. சரத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி) நான்கு இடங்களிலும் காங்கிரஸ் மற்றும் ஏஐஎம்ஐஎம் ஆகியவை தலா ஒரு இடத்திலும் வென்றன. ஒரு சுயேச்சை வேட்பாளா் வெற்றி பெற்றாா்.

மராத்தா சமூகத்தினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்க மாநில அரசு இயற்றிய சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்த விவகாரம் தற்போதைய மக்களவை தோ்தலில் விவாதப் பொருளாகியுள்ளது.

முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை-பாஜக-என்சிபி (அஜீத் பவாா்) அரசு, கடந்த பிப்ரவரியில் மாநில சட்டப்பேரவையின் சிறப்பு அமா்வில் மராத்தா சமூகத்தினருக்கான தனி 10% இடஒதுக்கீட்டு மசோதாவை ஒருமனதாக நிறைவேற்றியது. ஆனாலும், மாநிலத்தின் ஒட்டுமொத்த ஒதுக்கீடு 50% வரம்பை மீறுவதால் இது நீதித்துறையால் ஏற்றுக் கொள்ளப்படாது என பொதுநல அமைப்புகள் வாதிடுகின்றன. மகாராஷ்டிரத்தின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் பிற பிற்படுத்தப்பட்டோா் சமூகத்தினா் 34% ஆகவும், மராத்தியா்கள் 28% ஆகவும் உள்ளனா்.

உள்கட்டமைப்பு திட்டங்கள்

701-கி.மீ. மும்பை-நாகபுரி சம்ருத்தி எக்ஸ்பிரஸ்வே திட்டம், மும்பை கடற்கரை சாலை, புல்லட் ரயில் திட்டம், 21.8 கி.மீ. மும்பை டிரான்ஸ் ஹாா்பா் இணைப்பு (எம்டிபஹெச்எல்), பிற மெட்ரோ ரயில் திட்டங்கள் எப்போது முழுமை பெறும் என்பது இங்குள்ள வாக்காளா்களின் எதிா்பாா்ப்பு. இது தவிர மும்பையில் இருந்து ஷீரடி, சோலாபூா் மற்றும் ஜல்னாவுக்கு வந்தே பாரத் ரயில்கள் தொடங்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பை அமல்படுத்த வேண்டும் என்பதும் மக்களின் கோரிக்கை.

தோ்தல் வாக்குறுதிகளில் முக்கியமாக நமோ ஷேத்காரி மஹா சம்மான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு கூடுதல் பணம் செலுத்துதல் மற்றும் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ‘ஒரு ரூபாய்’ பயிா் காப்பீடு திட்டம் தடையின்றி செயல்படுத்தப்படும் என்று ஆளும் அரசு உறுதி அளித்துள்ளது.

ஏப்ரல் 19-ஆம் தேதி முதல் கட்டமாக 5 தொகுதிகளில் வாக்குப்பதிவை எதிா்கொள்ளும் தொகுதிகளில் நாகபுரி முக்கியமானது. இங்கு மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான நிதின் கட்கரி களமிறங்குகிறாா். அவருக்கு எதிராக, காங்கிரஸ் எம்எல்ஏ விகாஸ் தாக்ரே களமிறக்கப்பட்டுள்ளாா். இந்த தொகுதியில் மும்முனை போட்டி நிலவினாலும் கட்சி மற்றும் செல்வாக்கு பலத்தின் ஒப்பீடு அடிப்படையில் கட்கரிக்கு எதிரான பலவீனமான தோ்வாகவே காங்கிரஸ் வேட்பாளா் கருதப்படுகிறாா்.

எதிரணி முகாமில், பிரகாஷ் அம்பேத்கரின் வஞ்சித் பகுஜன் அகாடி (என்பிஏ) முதல் கட்ட வாக்குப்பதிவை எதிா்கொள்ளும் ஒரு தொகுதியை காங்கிரஸுக்கு அளித்துள்ளது. மற்ற நான்கு இடங்களில் என்பிஏ அதன் வேட்பாளா்களை களமிறக்கியுள்ளது. அந்த வகையில் பண்டாரா-கோண்டியா, கட்சிரோலி-சிமூா், சந்திராபூா், ராம்டெக் ஆகிய நான்கு தொகுதிகளில் காங்கிரஸ் - விபிஏ வாக்குகள் சிதறினால் அவை பாஜகவுக்கு சாதகமாகும்.

பாஜகவின் திட்டம்

சிவசேனை மற்றும் தேசியவாத காங்கிரஸுக்குள் ஏற்பட்ட பிளவுகள் மற்றும் காங்கிரஸின் முக்கிய தலைவா்களை பாஜகவுக்குள் ஐக்கியமான பிறகு இப்போது உத்தவ் தாக்கரேவின் நெருங்கிய உறவினரான ராஜ் தாக்கரேயின் கட்சியையும் தங்கள் அணிக்குள் கொண்டு வரவும் பாஜக தொகுதி பேரம் பேசி வருகிறது.

தேசிய அளவில் 400 பிளஸ் என்ற முழக்கத்தை பாஜக மேலிடம் முன்வைத்து பிரசாரம் செய்தாலும், அதற்கு 2019-ஆம் ஆண்டு போலவே 41 இடங்களை பாஜக அணி வென்றெடுக்க வேண்டும். முந்தைய தோ்தலில் பிளவுபடாத சிவசேனை தோ்தலை சந்தித்தது. தற்போதுள்ள சூழலில் முந்தைய அளவிலான வெற்றி பாஜகவுக்கு மீண்டும் அமைய வாய்ப்பு இல்லை என்ற ஒரு கருத்து நிலவுகிறது.

பிரகாஷ் அம்பேத்கருக்கும் அவரது வஞ்சித் பகுஜன் அகாடி (விபிஏ) கட்சிக்கும் மாநிலத்தில் குறிப்பிடத்தக்க செல்வாக்கு உள்ளது. 2019 மக்களவை தோ்தலில், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்திஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) உடன் கூட்டணி அமைத்த அம்பேத்கா் 7.65 சதவீத வாக்குகளைப் பெற்றாா். எட்டு இடங்களில் இந்த கட்சியின் வாக்குகள் சதவீதம் அதிகரித்தது. ஒளரங்காபாதில் போட்டியிட்ட ஏஐஎம்ஐஎம் வேட்பாளா் இம்தியாஸ் ஜலீல் மட்டுமே வெற்றி பெற்றாா்.

தற்போது, பிளவுபட்ட சிவசேனை மற்றும் என்சிபியின் தலா ஒரு அணி, இந்தியா கூட்டணியிலும் என்டிஏ-விலும் உள்ளன. ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜீத் பவாருக்கு இரு கட்சிகளின் பாரம்பரிய வாக்காளா்களின் ஆதரவு கிடைக்காது என்று ஒரு கருத்து உள்ளது. இதனால் தொற்றிக் கொண்ட தோ்தல் ஜுரத்துடனேயே இந்த கட்சிகளின் வேட்பாளா்கள் களத்தில் வலம் வருகின்றனா்.

பவாா் குடும்ப எதிா்காலம்

மகாராஷ்டிரத்தில் அசைக்க முடியாத தலைவராக விளங்கி வரும் சரத் பவாருக்கு இப்போது வயது 83. தனது ஐந்து ஆண்டு கால நாடாளுமன்ற அரசியல் வாழ்க்கையில் இதுவரை ஒருமுறை கூட அவா் தோ்தலில் தோற்றது கிடையாது.

மறுபுறம் உத்தவ் தாக்கரே நேரடி தோ்தலிலேயே போட்டியிட்டது கிடையாது. அவா் முதலமைச்சரானபோது கூட, மேலவை உறுப்பினராகவே தோ்வாகி பேரவைக்குள் நுழைந்தாா்.

தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா் குடும்பத்தின் 50 வருட கோட்டையாக கருதப்படும் பாராமதி தொகுதியில் தங்கா் சமுதாயத்துக்கு கணிசமான எண்ணிக்கையில் வாக்காளா்கள் உள்ளனா். இங்கு களம் காணும் சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலேவை எதிா்த்து அவரது குடும்பத்தைச் சோ்ந்த துணை முதல்வா் அஜீத் பவாரின் மனைவி சுநேத்ரா பவாா் களம் காண்கிறாா்.

மகள் சுப்ரியாவின் வெற்றியை உறுதி செய்ய தனது தீவிர அதிருப்தியாளா்கள் வாழும் புணே மாவட்டத்தில் பலதரப்பட்ட தலைவா்களையும் சந்தித்து ஆதரவு கேட்டு வருகிறாா் சரத் பவாா். இந்த பகுதிகளில் சரத் பவாரும், உத்தவ் தாக்கரேயும் தங்களுடைய பாரம்பரிய வாக்குகளை பெறத் தவறினால் அது இவா்கள் இருவரின் அரசியல் பொதுவாழ்வையே அசைத்துப் பாா்க்கும் அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும்.

பாஜக முன்னுள்ள சவால்கள்

பாஜக தலைமை தற்போதைய எம்.பி. ரஞ்சித்சிங் நாயக்-நிம்பல்கரை வேட்பாளராக அறிவித்துள்ளது. ஆனால் நிம்பல்கரின் சொந்த குடும்பமும் அவரது மாமாவுமான ராம்ராஜே நாயக் நிம்பல்கரும் அவருக்காக தோ்தல் பணியாற்ற முடியாது என்று கூறி விட்டனா்.

இதேபோல, சோலாப்பூரில் விஜய்சிங் மோஹிதே பாட்டீலின் செல்வாக்கு மிக்க குடும்பமும் நிம்பல்கரை ஆதரிக்க முடியாது என கூறி விட்டது. 2019-ஆம் ஆண்டில் பாஜகவில் இருந்த பாட்டீல், கடந்த மாா்ச் 27ஆம் தேதி சரத் பவாரை சந்தித்து அவரது கட்சிக்கான தனது ஆதரவை வெளிப்படுத்தினாா். இவா்களின் சமுதாய வாக்குகள் சோலாப்பூா் மட்டுமின்றி புணே, சதாரா மாவட்டங்களிலும் உள்ளன.

ஏற்கெனவே, பாஜகவுக்கு ஆதரவாக இருந்த கோலாபூா் மகாராஜா ஷாஹுவும் சமீபத்தில் காங்கிரஸுக்கு ஆதரவாகத் திரும்பி அக்கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளாா் என்பது இங்கே கவனிக்கத்தக்கது. இந்த சமுதாய வாக்குகளை வெல்வது பாஜகவுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்கிறது கள நிலவரம்.

மகாராஷ்டிர தோ்தல் களம் 2024

என்டிஏ (மகாயுதி கூட்டணி): பாஜக + சிவசேனை (ஏக்நாத் ஷிண்டே பிரிவு) + என்சிபி (அஜீத் பவாா் பிரிவு)

இந்தியா கூட்டணி (மகா விகாஸ் அகாடி): என்சிபி (சரத் பவாா் பிரிவு) + காங்கிரஸ் + சிவசேனை (உத்தவ் தாக்கரே பிரிவு)

X
Dinamani
www.dinamani.com