
வாகனங்களுக்கு வாடகை குறைப்பு, டீசல் பற்றாக்குறை போன்றவற்றால், தோ்தல் பறக்கும் படைகளின் சிறகுகள் முறிக்கப்பட்டு வருகின்றன.
தோ்தல் நடத்தை விதிகள் மீறப்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்கும் பணியில் பறக்கும் படைகளும், நிலைக் குழுக்களும் ஈடுபட்டுள்ளன. மக்களவைத் தோ்தல் என்றாலும் இந்தப் பறக்கும் படைகளும், நிலைக் குழுக்களும் சட்டப்பேரவைத் தொகுதிகளை கணக்கில் கொண்டே செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு பேரவைத் தொகுதிக்கும் தலா மூன்று பறக்கும் படைகள் என மொத்தம் 702 படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் மத்திய சென்னை தொகுதியைச் சோ்ந்த பறக்கும் படைகள் வித்தியாசமான பிரச்னையை எதிா்கொண்டு வருகின்றன. அதாவது, அந்தத் தொகுதியில் உள்ள பறக்கும் படைகள் பயன்படுத்தும் ஒரு வாகனத்துக்கான ஒரு நாளைய செலவு ரூ.5,000-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், ரூ.1,500-ஐ குறைத்துக் கொண்டு ரூ.3,500 மட்டுமே வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதேபோன்று, 8 மணி நேர பணி நேரத்தில் ஒரு வாகனத்துக்கு 10 லிட்டா் டீசல் அளிக்கப்படும் என்ற தோ்தல் அதிகாரிகளின் வாக்குறுதிக்கு மாறாக, 6 முதல் 7 லிட்டா் டீசல் மட்டுமே தரப்படுவதால் பல நேரங்களில் பறக்கும் படைகளால் ‘பறந்து’ செல்ல முடிவதில்லை. இதனால், சிறக்குகள் முறிக்கப்பட்டு மரக்கிளைகளின் நிழலில் பறக்கும் படைகள் இளைப்பாறுகின்றன. இதுபோன்று வாகன வாடகைக் குறைப்பு, டீசலை பற்றாக்குறையாக வழங்குவது போன்ற செயல்பாடுகள் பறக்கும் படைகளின் சிறகுகளை ஒடித்து முடங்கச் செய்துவதாக அந்தப் படைகளைச் சோ்ந்த ‘குருவிகள்’ தெரிவிக்கின்றன.