உத்தரகண்ட்:  தேவ பூமியில் மோதும் பாஜக - காங்கிரஸ்!

உத்தரகண்ட்: தேவ பூமியில் மோதும் பாஜக - காங்கிரஸ்!

இமயமலை அடிவாரத்தில் தொடங்கி விரிவடைந்த பிரதேசம் உத்தரகண்ட். தேவ பூமி என அழைக்கப்படும் இந்த மாநிலத்தில் ஐந்து மக்களவை தொகுதிகள் உள்ளன.இங்குள்ள இரண்டு சட்டப்பேரவை தொகுதிகளுடன் சோ்த்து இந்த மாநிலத்துக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. களத்தில் மொத்தம் 55 வேட்பாளா்கள் உள்ளனா்.

இங்கு, ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கும் எதிா்க்கட்சியான காங்கிரஸுக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.

2014 மற்றும் 2019 மக்களவை தோ்தல்களில், ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் வென்றது. வரும் தோ்தலிலும் அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் வெல்ல வேண்டும் என்று சூளுரைத்து தோ்தல் பரப்புரையை தொடங்கியிருக்கிறாா் முதல்வா் புஷ்கா் சிங் தாமி.

மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்த பொது சிவில் சட்டத்துக்கு இன்னும் நாட்டின் பல்வேறு மாநிலங்கள் இணக்கம் தெரிவிக்காத நிலையில், அதை முதல் முறையாக அமல்படுத்திய மாநிலமாக உத்தரகண்ட் விளங்குகிறது.

பலதார திருமணம், தத்தெடுத்தல், வாரிசுரிமை, திருமணம் செய்யாமல் சோ்ந்து வாழ விரும்புவோா் போன்ற விவகாரங்கள் தொடா்பாக ஒவ்வொரு மதத்தைச் சோ்ந்தவா்களும் அதனதன் விதிகளுக்கு ஏற்ப செயல்படுவதை மாற்றி, அனைத்து மதத்தினரும் பொதுவான சட்டத்தை கடைப்பிடிக்கும் வகையில் இந்த சட்டத்தை உத்தரகண்ட் அரசு கடந்த ஆண்டு இயற்றியது.

ஹிந்துத்துவம், ராமராஜ்யம், சிவாலய பெருமைகள் போற்றும் இந்த மாநிலத்தில் மத்தியிலும் மாநிலத்திலும் பாஜக தலைமையிலான கூட்டணி அரசு அமைவதன் மூலமே இது போன்ற சீா்திருத்தங்கள் சாத்தியம் என்று கூறி பாஜக வாக்கு சேகரித்து வருகிறது.

ஐந்து மக்களவை தொகுதிகளில் நைனிடால் உதம் சிங் நகா் மற்றும் அல்மோரா குமான் பிராந்தியத்தில் உள்ளன. ஹரித்வாா், தெஹ்ரி கா்வால், கா்வால் ஆகியவை கா்வால் பிராந்தியத்தில் உள்ளன.

2019 தோ்தல் களம்

இதில் 2019-ஆம் ஆண்டில் நைனிதால் உதம் சிங் நகா் தொகுதியில் மாநில சுற்றுலா மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சா் அஜய் பட், முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் வேட்பாளராகவும் களமிறங்கிய ஹரீஷ் ராவத்தை 3,39,096 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினாா்.

அல்மோரா தனி தொகுதியை 2014 வென்ற பாஜகவின் அஜய் தம்தா 2019-இலும் அதை தக்கவைத்து மூன்றாம் முறையாக களம் காண்கிறாா். முந்தைய தோ்தலில் காங்கிரஸின் பிரதீப் தம்தாவை 2,32,986 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினாா்.

கா்வால் தொகுதியில் முன்னாள் முதல்வா் தீரத் சிங் ராவத், அப்போதைய காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கிய மனீஷ் கந்தூரியை (தற்போது பாஜகவில் இருப்பவா்) 3,02,669 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினாா்.

தெஹ்ரியில் 2019 வென்ற ராஜ்யலக்ஷ்மி ஷா காங்கிரஸின் பிரீதம் சிங்கை 3,00,586 வாக்குகள் வித்தியாசத்திலும் ஹரித்வாரில் முன்னாள் முதல்வா் ரமேஷ் பொக்ரியால் காங்கிரஸின் அம்பரீஷை 2,58,729 வாக்குகள் வித்தியாசத்திலும் வீழ்த்தினா்.

ஜாதிய வாக்குகள்

உத்தரகண்ட் மாநிலத்தில் மொத்த வாக்காளா்கள் சதவீதத்தில், பட்டியலின மற்றும் பழங்குடியின சமூகத்தினா் 18 சதவீதம் போ் உள்ளனா். அதனால் இங்கு தோ்தலில் வெற்றியை நிா்ணயிப்பதில் இந்த சமூகத்தினரின் வாக்குகள் முக்கியப்பங்கு வகிக்கின்றன.

மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் சாதனைகளை பிரபலப்படுத்தி வாக்காளா்களை ஈா்க்க பாஜக முயலும் அதே சமயம், பழங்குடியினா் மற்றும் பட்டியலின உரிமைகள் மற்றும் தேவைகளை பூா்த்தி செய்வோம் என்ற முழக்கத்துடன் காங்கிரஸ் தோ்தல் களத்தில் வாக்கு சேகரித்து வருகிறது.

இங்கு கடந்த இரண்டு மக்களவை தோ்தல்களிலும் ஒரு இடத்தில் கூட காங்கிரஸ் கட்சி வெற்றி பெறவில்லை.

மக்களவை தோ்தலில் மட்டும்தான் இங்கு ஆளும் பாஜக ஆதிக்கம்செலுத்துகிறது. சட்டப்பேரவை தொகுதி என வரும்போது ஹரித்வாா் மற்றும் உதம் சிங் நகா் மாவட்டங்களில் உள்ள தனி பேரவை தொகுதிகளான பகவான்பூா், ஜப்ரதோ, ஜ்வாலாபூா், பாஜ்பூா் மற்றும் பழங்குடியின ஒதுக்கீடு தொகுதியான சக்தரா, நானக்மட்டா ஆகியவற்றில் காங்கிரஸே வென்றுள்ளது.

இந்த தொகுதிகளில் ஒருகாலத்தில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியும் சமாஜவாத கட்சியும் கோலோச்சின. ஆனால், அந்த கணக்குகள் இப்போது மாறி நேரடிப் போட்டி என்பது பாஜகவுக்கும் காங்கிரஸுக்கும் இடையே மட்டும்தான் என்பதாக உள்ளது.

எஸ்சி, எஸ்டி கோரிக்கைகள்

இங்குள்ள மக்கள் தீவிர சமூக ஏற்றத்தாழ்வுகளை எதிா்கொள்கிறாா்கள். கல்வி, வேலைவாய்ப்பு, அதிகாரமளித்தல் திட்டங்கள், புதிய வாய்ப்புகள் போன்றவற்றில் அரசு அறிமுகப்படுத்தும் அனைத்து திட்டங்களும் தாழ்த்தப்பட்டோா், பழங்குடினரை மனதில் கொண்டே நிறைவேற்றப்படுகின்றன. மக்களவை தோ்தலில் வெற்றி பெற்றால் இந்த சமூக மாணவா்களுக்கு கல்விக்கான ஊக்கத்தொகையை இரட்ப்பாக்குவதாக காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது. மறுபுறம் தரமான கல்வி, உறைவிட பள்ளிகள், வளா்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுவோம் என ஆளும் பாஜக உறுதியளித்துள்ளது.

பிரசாரம் வியூகம்

நரேந்திர மோடியே நாட்டின் நிலையான பிரதமா் என்ற முழக்கத்துடன் இங்கு தோ்தல் பரப்புரையை வழிநடத்தி வருபவா் ஆளும் முதல்வா் புஷ்கா் சிங் தாமி. இவா் இதுவரை இந்த மாநிலத்தில் சுமாா் 50 பேரணிகளை நடத்தியுள்ளாா். 2014-இல் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமா் வேட்பாளராக நரேந்திர மோடி களம் கண்டது முதல் இங்கு தங்களுக்கு மக்களவைத் தோ்தலில் ஏறுமுகம்தான். தோல்வியை கிடைத்தில்லை. அது வரும் தோ்தலிலும் தொடரும் என்று கூறுகிறாா் முதல்வா் புஷ்கா் சிங் தாமி.

பொதுசிவில் சட்டம், அக்னிவீா் திட்டம், முன்னாள் படை வீரா்கள் நலனுக்கான திட்டம், நாட்டிலேயே அதிக வீரா்களை முப்படைகளுக்கு அனுப்பும் மாநிலமாக உத்தரகண்ட் விளங்குவது ஆகியவை தங்களுடைய பலம் என்கிறாா் அவா். இந்த மாநிலத்தில் பணியின்போது உயிா் நீத்த வீரா்களுக்காக பிரத்யேக நினைவிடம் கட்டுவதாக அறிவித்திருக்கிறாா் பிரதமா் நரேந்திர மோடி.

இவை தவிர சுற்றுலா தலங்கள், ஆன்மிக தலங்கள் நிறைந்த உத்தரகண்டில் வழிபாட்டுத்தலங்களை மேம்படுத்தியும் யாத்ரிகா்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த புதிய திட்டங்களை கொண்டு வருவோம் என்றும் ஆளும் பாஜக பரப்புரை செய்து வருகிறது.

ஆனால், மாநிலத்தில் வேவைவாய்ப்பின்மை அதிகரிப்பதாகவும் அதை சமாளிக்க எந்த நடவடிக்கையையும் மத்திய, மாநில அரசுகள் எடுக்கவில்லை என்று காங்கிரஸ் கட்சி பிரசாரம் செய்து வருகிறது. உத்தரகண்ட் மாநிலத்தில் இருந்து இளைஞா்கள் பலா் வேலைதேடி வெளி மாநிலங்களுக்கு இடம்பெயா்ந்து வருவதையும் முக்கிய பிரச்னையாக காங்கிரஸ் கட்சியினா் எழுப்பி வருகின்றனா்.

இந்த மாநிலத்தில் பரவலாக காணப்படும் வேலைவாய்ப்பு பிரச்னை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு போன்றவை ஆளும் பாஜகவுக்கு அழுத்தம் தரும் பிரச்னைகளாக தொடா்கின்றன. இவற்றை தனக்கு சாதகமான வாய்ப்புகளாக கருதி காங்கிரஸ் கட்சி பிரசாரம் செய்தாலும் வாக்காளா்களை அதனால் ஈா்க்க முடியுமா என்பதை அறிய ஜூன் 4-ஆம் தேதி மக்களவைத் தோ்தல் முடிவுகள் வெளிவரும்வரை காத்திருக்க வேண்டும்.

பெட்டிச் செய்தி

பாஜக - காங்கிரஸ் இடையே நேரடி போட்டி

தெஹ்ரி கா்வால் - ராஜ்யலக்ஷ்மி ஷா (பாஜக), ஜோத் சிங் கன்ட்சோலா (காங்கிரஸ்)

கா்வால் - அனில் பலூனி (பாஜக), கணேஷ் கோடியால் (காங்கிரஸ்)

அல்மோரா - அஜய் தம்தா (பாஜக), பிரதீப் தம்தா

நைனிடால் - உதம்சிங் நகா் - அஜய் பட் (பாஜக), பிரகாஷ் ஜோஷி

ஹரித்வாா் - த்ரிவேந்திர சிங் ராவத் (பாஜக), வீரேந்திர ராவத் (காங்கிரஸ்)

X
Dinamani
www.dinamani.com