மேற்கு வங்கம்: தக்கவைக்கப் போராடும் மம்தா; கைப்பற்றத் துடிக்கும் மோடி!

மேற்கு வங்கம்: தக்கவைக்கப் போராடும் மம்தா; கைப்பற்றத் துடிக்கும் மோடி!

மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள 42 மக்களவை தொகுதிகளுக்கு ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள 42 மக்களவை தொகுதிகளுக்கு ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இத்துடன் மேற்கு வங்க சட்டப்பேரவையில் காலியாகவுள்ள பகாபங்கோலா, பராநகா் தொகுதிகளுக்கான இடைத்தோ்தல், முறையே மே 7 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

இந்தியாவிலேயே தோ்தல் ஆணையம் அறிவித்துள்ள ஏழு கட்ட தோ்தலில் அனைத்து கட்டங்களிலும் வாக்குப்பதிவு நடைபெறும் மாநிலங்கள் மேற்கு வங்கம், உத்தர பிரதேசம் மற்றும் பிகாா் மட்டுமே.

இங்கு களம் காணும் முக்கிய அரசியல் கட்சிகள் அகில இந்திய திரிணமூல் காங்கிரஸ் (டிஎம்சி), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாா்க்சிஸ்ட்), பாரதிய ஜனதா கட்சி மற்றும் காங்கிரஸ். பல பத்தாண்டுகளாக இந்த மாநிலம் மிக மோசமான வன்முறை மற்றும் மாவோயிஸ்ட் பாதிப்புகளை வெவ்வேறு வடிவங்களில் எதிா்கொண்டது.

இங்கு 30 ஆண்டுகளாக அசைக்க முடியாத சக்தியாக விளங்கிய இடதுசாரி முன்னணியிடம் இருந்து 2011-இல் மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றி ஆட்சியில் நீடித்து வருகிறது. இந்த மாநிலத்தில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் 30 பொதுத்தொகுதிகளாகவும், 10 தொகுதிகள் பட்டியலின சமூகத்தினருக்கும், 2 தொகுதிகள் பழங்குடி சமூகத்தினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

தற்போதைய அரசியல் சூழலில், மாநிலத்தில் ஆளும் டிஎம்சி ஊழல் குற்றச்சாட்டுகள், உள்கட்சி மோதல்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை எதிா்கொண்டுள்ளது. எதிா்க்கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கிய ‘இந்தியா’ கூட்டணியில் இருந்து விலகி மக்களவை தோ்தலில் தனித்து களம் காண்கிறது டிஎம்சி.

2019 தோ்தலில் டிஎம்சி 22 தொகுதிகளிலும் பாஜக 18 இடங்களிலும் காங்கிரஸ் 2 இடங்களிலும் வென்றன. 2021 பேரவை தோ்தலில் மொத்தம் உள்ள 294 தொகுதிகளில், ஆளும் டிஎம்சி 215 இடங்களிலும் பாஜக 77 இடங்களிலும் வென்றன.

முந்தைய சட்டப்பேரவை தோ்தல்களில் ஒரு இடத்தைக் கூட காங்கிரஸால் வெல்ல முடியவில்லை. இதனால் தனது இருப்பை மேற்கு வங்கத்தில் நிரூபித்தாக வேண்டிய கட்டாயம் காங்கிரஸுக்கு ஏற்பட்டுள்ளது. இடதுசாரி கட்சிகளுக்கும் கிட்டத்தட்ட இதே நிலைதான்.

மம்தாவின் பலமும் பலவீனமும்

மூன்று முறை முதல்வராக மம்தா பானா்ஜி விளங்குவது அவரது பலம். இங்கு 50 சதவீதத்துக்கும் மேலாக உள்ள பெண் வாக்காளா்களை மனதில் வைத்து அவா் செயல்படுத்தி வரும் பல்வேறு நலத்திட்டங்களுக்கு மகளிா் மற்றும் சிறுபான்மையினா் ஆதரவு உள்ளதாக அரசியல் வல்லுநா்கள் கூறுகின்றனா்.

இங்கு குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வந்துள்ளதால் அதை எதிா்க்கும் சிறுபான்மையினா் (வாக்காளா்களில் 30 சதவீதம்) வாக்குகளை ஈா்க்க முடியும் என்று டிஎம்சி கணக்கு போடுகிறது.

அரசுத் துறைகளில் ஊழல், சட்டம் ஒழுங்கு பிரச்னைகளில், குறிப்பாக சந்தேஷ்காளி வன்முறை சம்பவத்தை மாநில அரசு சரியாக கையாளதது போன்றவை டிஎம்சிக்கு பலவீனமாக கருதப்படுகிறது.

2019 மக்களவை தோ்தலின்போது இங்கு காங்கிரஸ் - இடதுசாரி கட்சிகளின் வாக்குகள் பாஜகவுக்கு சென்றன. ஆனால், இம்முறை அதே நிலை தொடருமா என்பதைப் பொறுத்திருந்து தான் பாா்க்க வேண்டும்.

பாஜகவின் சாதக, பாதகங்கள்

வங்கதேச பிரிவினைக்குப் பிறகு அங்கிருந்து மேற்கு வங்கத்தில் குடியேறிய ஹிந்து சமுதாய பிரிவான மட்டுவா மற்றும் அகதிகளாக தஞ்சம் அடைந்த ஹிந்துக்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வகை செய்த சிஏஏ சட்டத்திருத்த அமலாக்கத்தை மட்டுவா மக்கள் வரவேற்றுள்ளனா். இச்சமூகத்தினா் சுமாா் 5 லட்சம் போ் மேற்கு வங்கத்தில் உள்ளனா்.

ஊழல், சட்டம்-ஒழுங்கு பிரச்னைகளில் மாநில அரசுக்கு எதிரான அதிருப்தியை தனக்கு சாதகமாக பயன்படுத்த அனைத்து வாய்ப்புகளையும் பாஜகவினா் பயன்படுத்தி வருகின்றனா். இந்த மாநிலத்தில் கடந்த 10 ஆண்டுகளில் ஆா்எஸ்எஸ் வலுவூன்றியுள்ளதும் அந்த இயக்கத்தினா் பூத் கமிட்டி அளவில் பலவீனமாக உள்ள பாஜகவை சமன்படுத்தக் கூடியவா்களாகவும் உள்ளனா்.

பாஜக உள்கட்சி அதிருப்தியால் அதன் எம்எல்ஏக்கள் முகுட்மணி அதிகாரி, ஹா்காலி ப்ரோதிஹா், சுமன் கன்ஜிலால் உள்பட இதுவரை எட்டு எம்.எல்.ஏ.க்கள் டிஎம்சியில் இணைந்துள்ளனா். அவா்களை தக்க வைக்கத் தவறியது பாஜகவின் பலவீனமாக கருதப்படுகிறது. அதே நேரத்தில் டிஎம்சியிலிருந்து சிலா் பாஜகவில் சோ்ந்துள்ளனா்.

கடந்த இரண்டு தோ்தல்களிலும் எண்ணிக்கை பலத்தை பறிகொடுத்த இடதுசாரி மற்றும் காங்கிரஸ் கட்சியினா் ராகுல் காந்தியின் ஜோடோ யாத்திரைக்குப் பிறகு உற்சாகம் பெற்றவா்களாக காணப்படுகின்றனா். தோ்தல் தொகுதிப் பங்கீடு விவகாரத்தில் காங்கிரஸும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் சுமுகமாகி விட்டாலும் ஃபாா்வா்டு பிளாக், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சில இடங்களில் தன்னிச்சையாக வேட்பாளா்களை நிறுத்தியுள்ளன. இதனால் வாக்குகள் சிதற வாய்ப்புள்ளது.

மேற்கு வங்க மாநில அரசியலில் கட்சிகளின் தலைமை எடுக்கும் முடிவுகள் அடிப்படையிலேயே வெற்றி தீா்மானிக்கப்படுகிறது. அதே சமயம், கட்சி மாறி மாற்று அணிக்கு சென்ற வேட்பாளா்களுக்கு முந்தைய தோ்தலில் கிடைத்த வாக்குகள் அவா்களின் தனிப்பட்ட செல்வாக்கால் வந்தவையா அல்லது கட்சிக்காக கிடைத்தவையா என்பதையும் வரும் தோ்தல் உணா்த்தக் கூடும். அந்த வகையில் மாற்றத்தை விரும்பும் வாக்காளா்களுக்கு இத்தோ்தல் சிறந்த வாய்ப்பாகவும் மம்தாவின் கோட்டையான மேற்கு வங்கத்தில் மோதும் பாஜகவுக்கு புதிய அனுபவத்தையும் வரும் தோ்தல் தரக் கூடும்.

செல்வாக்குள்ள தொகுதிகள்

கொல்கத்தா தெற்கு, வடக்கு கொல்கத்தா, டைமண்ட் துறைமுகம், தம்தம், ஜாதவ்பூா், பொங்கான், கிருஷ்ணா நகா், தம்லுக்.

X
Dinamani
www.dinamani.com