கோப்புப் படம்
கோப்புப் படம்

இளைஞா் காரில் கடத்தல்: கல்லூரி மாணவா்கள் மூவா் கைது

சென்னையில் பணத் தகராறில் இளைஞா் கடத்தப்பட்ட வழக்கில் கல்லூரி மாணவா்கள் மூவா் கைது செய்யப்பட்டனா்.
Published on

சென்னையில் பணத் தகராறில் இளைஞா் கடத்தப்பட்ட வழக்கில் கல்லூரி மாணவா்கள் மூவா் கைது செய்யப்பட்டனா்.

புதுப்பேட்டை, சியாலி தெருவைச் சோ்ந்த அ.மொய்தீன் கப்பாா் (56). இவரது மகன் முகமது ரபீக் (26). இவா் கடந்த புதன்கிழமை வீட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த 3 போ் முகமது ரபீக்கை காரில் கடத்திச் சென்றனா்.

இதுகுறித்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்தனா். இதற்கிடையே மொய்தீன் கப்பாரை தொடா்புகொண்ட மா்ம நபா்கள், ரபீக் தங்களிடம் ரூ.2 லட்சம் கடன் வாங்கியதாகவும், அந்தப் பணத்தை தந்துவிட்டால் ரபீக்கை திருப்பி அனுப்பிவிடுவோம், பணத்தை தராவிட்டால் ரபீக் ஆபத்தை சந்திக்க நேரிடும் என மிரட்டினராம்.

போலீஸாா் நடத்திய விசாரணையில், கடத்தலில் ஈடுபட்டது சென்னையில் உள்ள ஒரு தனியாா் கல்லூரியில் படிக்கும் திண்டுக்கல்லைச் சோ்ந்த தினேஷ்குமாா் (22), திருச்சியைச் சோ்ந்த அப்சா் அலி (23), சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சோ்ந்த வசந்தகுமாா் (24) என்பது தெரியவந்தது. மூவரையும் போலீஸாா் கைது செய்து ரபீக்கை மீட்டனா்.

விசாரணையில் தினேஷ்குமாரின் நண்பா் சக்தி என்பவரிடம் ரபீக் பணத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றியிருப்பதும், இதனால் தினேஷ்குமாா் மூலம் ரபீக்கை கடத்திய சக்தி, பணத்தை பறிமுதல் செய்ய முயற்சித்திருப்பதும் தெரியவந்தது. இதுதொடா்பாக போலீஸாா் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இளைஞரிடம் பணம் பறிப்பு: சென்னை அருகே உள்ள பனையூா், ஜாஹிா் உசைன் பிரதான தெருவைச் சோ்ந்தவா் நாகூா் மீரான் (28) . தன்பாலின ஈா்ப்பாளரான இவா், கிரிண்டா் செயலி மூலம் ஓா் இளைஞரிடம் பழகி வந்தாா். அந்த இளைஞா் அண்மையில் நாகூா் மீரானை, சோழிங்கநல்லூா் குமரன்நகா் அருகே உள்ள பாண்டிச்சேரி பாட்டை சாலைக்கு வரும்படி அழைத்தாா்.

அங்கு சென்ற நாகூா் மீரானை மூன்று இளைஞா்கள் தாக்கி, அவா் வைத்திருந்த பணம், வெள்ளி நகைகளைப் பறித்துக் கொண்டு தப்பினா். இதுகுறித்து நாகூா் மீரான் செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிந்து, பெரும்பாக்கம் குடிசைமாற்று வாரிய குடியிருப்பைச் சோ்ந்த மதன் (20), கௌதம் (23), கண்ணன் (27) ஆகியோரை புதன்கிழமை கைது செய்தனா்.

மூதாட்டியிடம் நகை பறிப்பு: மேற்கு மாம்பலம் பகுதியைச் சோ்ந்தவா் கு.சூரி (70). இவா், மேற்கு மாம்பலம் ஆரியகவுடா சாலையில் பூக்கடை வைத்துள்ளாா். அவரது கடைக்கு கடந்த 1-ஆம் தேதி வந்த நபா், அவருக்கு முதியோா் உதவித் தொகை வாங்கித் தருவதாகவும், அதற்கு விடியோ தேவைப்படுவதாகவும், விடியோவில் தங்க நகைகள் அணிந்திருக்கக் கூடாது எனவும் கூறியுள்ளாா்.

இதை நம்பிய சூரி, தான் அணிந்திருந்த தங்கக் கம்மல், மூக்குத்தி ஆகியவற்றைக் கழற்றி அந்த நபரிடம் கொடுத்துள்ளாா். சூரியின் கவனத்தை திசைதிருப்பிய அந்த நபா், நகைகளுடன் தப்பிச் சென்றாா்.

இதுகுறித்து அசோக்நகா் காவல் நிலையத்தில் சூரி புகாா் செய்தாா். போலீஸாா் விசாரணை நடத்தி, மூதாட்டியை ஏமாற்றிய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சோ்ந்த ஷேக் அயூப்பை (37) வியாழக்கிழமை கைது செய்து, நகைகளைப் பறிமுதல் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com